> குருத்து: ஜி.எஸ்டி அனுபவம் - ஒரு சிறு முதலாளியின் கதை

June 17, 2024

ஜி.எஸ்டி அனுபவம் - ஒரு சிறு முதலாளியின் கதை


அவருக்கு பெரிய படிப்பறிவு இல்லை.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். சொந்தமாக தொழில் செய்யலாம் என துணிந்து இறங்கிவிட்டார்.  இரண்டு நிறுவனத்திடமிருந்து கூலி (Job Work) வேலை செய்து தரும் ஒரு சின்ன நிறுவனமாக  துவங்கினார்.

 

பொருட்களை கொண்டு செல்லும் பொழுதும், வரும் பொழுதும், எழுந்த நடைமுறை இவேபில் பிரச்சனையால் ரோவிங் படையால் கணிசமான அபராத தொகை விதிக்கப்பட்டு, செலுத்தினார். அவருடைய பொருளாதார நிலைமைக்கு அது மிகப்பெரிய தொகை.

 

ஜி.எஸ்.டி பதிவு எடுத்தால், இந்த பிரச்சனையில் தப்பிக்கலாம் யாரோ ஒருவர் ”தப்பாக” யோசனை சொல்ல, என்னிடம் வந்தார்.

 

வருடத்திற்கு அவர் செய்யும் மொத்த வேலையே பத்து லட்சம் கூட தாண்டமாட்டார். ஜி.எஸ்.டி பதிவு எடுத்தால், உரிய தேதிக்குள் பணம் செலுத்தவேண்டும். இல்லையெனில் வட்டி, அபராதம், தாக்கல் செய்வதற்கான மாதாந்திர சேவை கட்டணம்,  என எல்லா நடைமுறை விசயங்களையும் தெளிவாக விளக்கினாலும், செய்த வேலையை விட்டுவிட்டதால், தொழில் செய்தால் தான் வாழலாம் என்ற நிலையில், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு இல்லை. எடுக்கலாம் என சொல்லிவிட்டார்.

 

பதிவு எடுத்து கொடுத்த பிறகு,  வங்கி கணக்கு திறந்து தாருங்கள் என சொன்னால்... குறைந்தபட்ச தொகையான ரூ. 5000 செலுத்துவதற்கு பணம் இல்லை என்றார்.  45 நாட்களுக்குள் கணக்கு துவங்கியே ஆகவேண்டும் என விதி சொல்லி வலியுறுத்தினேன்.

 

கணக்கு துவங்க போனது தாமதம். வங்கியிலும் அவர்களின் பங்குக்கு தாமதம் செய்தார்கள்.  70 நாட்கள் கழித்து கொடுத்தார். அதற்குள் ஜி.எஸ்.டி தளம் ரிட்டர்ன் போடவிடாமல் தடுத்தது. தாமதக் கட்டணத்துடன் ஒரு மாதம் தாக்கல் செய்யவேண்டியதாகிவிட்டது.

 

அதற்கு பிறகு வங்கி வழியே ஜி.எஸ்.டி செலுத்தலாம் என்றால்.. அதிலும் தொழில் நுட்ப பிரச்சனை. அந்த பிரச்சனையே சரி செய்யாமல், ”உங்களுக்கு பணம் அனுப்புகிறேன். நீங்கள் செலுத்துங்கள்” என்றார். செலுத்தினேன்.

 

அடுத்தமாதம் அதையே செய்ய சொன்னார். நிறுவனத்தின் கணக்கின் வழியே தான் செலுத்தவேண்டும். ஆகையால் உங்கள் அதற்கு முயலுங்கள் என வலியுறுத்தினேன். வங்கியில் போய் முட்டி மோதி, காசோலை புத்தகம் வாங்கி, அதன் மூலம் செலுத்தலாம் என விண்ணப்பித்தார்.  சொந்த வீட்டில் 30 வருடம் வாழ்கிறார். கொரியர்காரர்கள் முகவரியை கண்டுப்பிடிக்க முடியாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள். 

 

ஏப்ரல் மாதம் ரிட்டர்ன் பணத்தை மே 20க்குள் செலுத்தவேண்டும். காசோலையைப் பெற்று, பணத்திற்கு சிரமப்பட்டு  ஏற்பாடு செய்து, செலுத்தவேண்டியதை ஜூனில் 6 ல் செலுத்தினார்.

 

மிகச்சரியாக ஜூன் ஐந்தாம் தேதி தற்காலிகமாக ரத்து செய்துவிட்டார்கள்.  (Form GST REG -31). 

 

அலுவலகம் நேரில் போய் சின்ன நிறுவனம் என குறித்த விவரம், அவருடைய நிலையை எல்லாம் சொன்னால்.. தற்காலிக  ரத்தை சரி செய்துவிடலாம். அலுவலகத்திற்கான செலவு  (Office Exps) இருக்கிறது.  நீங்க சின்ன நிறுவனம் என்பதால்...சின்னதாய் கவனியுங்கள்”  என சொல்லிவிட்டார்கள்.

 

அவரிடம் நிலவரத்தை தெரிவித்தேன்.  என்னுடைய பர்சில் சிரித்துக்கொண்டே சில காந்திகள் இருக்கிறார்கள். கொடுத்துவிடலாம்.  ஏற்கனவே பதிவு எடுத்துக்கொடுத்த கட்டணம், மாதாந்திர கட்டணம் நிறைய பாக்கியிருக்கிறது.  நினைவுப்படுத்தி கேட்கும் பொழுதெல்லாம், ஒரு முறை விபத்தில் கை சிக்கலாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கிறேன் என்றார்.  இன்னொரு முறை பையனுக்கு அப்சன்டிசைட்டிஸ். நிறைய பணம் செலவாகிவிட்டது என்றார்.  இந்த கணக்கையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிடுவாரோ என பயமாக இருக்கிறது.

 

”ஒருமுறை என்னங்க! இவ்வளவு தாமதம் செய்கிறீர்கள்.  ஜி.எஸ்.டியில் சிக்கல் செய்துவிடுவார்கள்” என உள்ளதை கொஞ்சம் அழுத்திச் சொன்னேன்.   எனக்கான கட்டணம் கொடுக்காததால் தான் இப்படி ”கோபமாய்” பேசுகிறேன் என நினைத்தாரோ என்னவோ, ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைத்தார்.

 

அவர் ஜி.பே வழியான எனக்கு அனுப்பிய பணம் வந்த செய்தி வந்தது.  அந்த அலுவலரிடம் கொடுத்துவிட்டு, இன்றைக்குள் பதிவு பழைய நிலைமைக்கு வந்துவிடும் என உறுதியாய் தெரிவித்தார்.

 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். ”அணுகுண்டின் தந்தை” என போற்றப்படும் இராபர்ட் ஓப்பன் ஹைமர் இட்லரைத் தோற்கடிக்க அணுகுண்டை  தயாரித்தார்.  அவர் கண்டுப்பிடிப்பதற்குள், இட்லர் தோற்கடிக்கப்பட்டு, தற்கொலையே செய்துவிட்டான்.  அவர் தயாரித்த குண்டுகளை அமெரிக்கா, ஜப்பானை பணியவைக்க இரண்டு இடங்களில் போட்டது. சில லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இன்றைக்கு வரைக்கும் அதன் பாதிப்பு மோசமாக இருக்கிறது.

 

அந்த சமயத்தில் ஓப்பன்ஹைமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் பொழுது, மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பார்.  அவரிடமே “என் கைகளில் ரத்தம் நிறைய படிந்திருக்கிறது” என்பார்.  ”இப்படிப்பட்ட அழுகுணிகளை எல்லாம் எதற்கு இங்கே அழைத்து வருகிறீர்கள்” என அலட்சியமாய் ஜனாதிபதி சொல்வார்.

 

தெரியாத்தனமாய் ஒரு சிறிய முதலாளியை ஜி.எஸ்.டிக்குள் தலையை கொடுக்க வைத்துவிட்டோமோ! எடுக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என கொஞ்சம் அழுத்தி சொல்லியிருக்கலாமோ என கவலையாய் இருக்கிறது!

0 பின்னூட்டங்கள்: