அம்மாவை காப்பாற்ற போராடும் மகள்
1987ல் 16 வயது இளம்பெண்கள் மூவர் கொடூரமாக 16 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார்கள். அதற்கு பிறகு அந்த கொலைகள் நின்றுவிடுகிறது. கொலைகாரனை போலீசால் பிடிக்கமுடியவில்லை. அதனால் அந்த ஊரை அந்த கொலைகளின் பெயராலேயே “செல்லமாக” அழைக்கிறார்கள்.
ஒரு ஹாலோவீன் நாளில் நாயகியின் அம்மா பழைய கொலைகளைப் போலவே 16முறை குத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார். நாயகிக்கு தாளமுடியாத துயரம். விசாரணை துவங்குகிறது.
நாயகியினுடைய தோழி ஊரில் இருக்கும் அறிவியல் கண்காட்சியில் காலப்பயணம் மேற்கொள்வதற்கான ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாள். ஒருவேளை இந்த இயந்திரம் வேலை செய்தால், முந்தைய காலத்திற்கு போய், கொலைகாரனை கண்டுப்பிடித்துவிட்டால், இப்பொழுது அம்மாவை காப்பாற்றிவிடலாம் என சிந்திக்கிறாள்.
கொலைகாரன் இப்பொழுது நாயகியையும் துரத்துகிறான். அவள் அந்த இயந்திரத்தில் இருக்கும் பொழுது நடக்கும் களேபரத்தில் இயந்திரம் வெற்றிகரமாக வேலை செய்து அவள் பழைய காலத்திற்கே போய்விடுகிறாள்.
அங்கு அம்மாவும், அவளுடைய தோழிகளும் 16 வயதில் பள்ளியில் ஏக கலாட்டாக்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவள் போய், போலீசில், சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னால், மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.
பிறகு என்ன ஆனது? கொலைகளை தடுக்க முடிந்ததா என்பதை ஏகப்பட்ட கலாட்டக்களுடன், கொஞ்சம் கத்திக்குத்துகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
****
நாயகி அங்கு போய் செய்யும் மாற்றங்களினால், நடப்பு நிகழ்வு மாறிக்கொண்டே போவது சுவாரசியம். 2023ல் வாழும் ஒரு பெண், 1987 காலக்கட்டத்திற்கு போகும் பொழுது அங்கிருக்கும் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் எல்லாம் மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. தன் அம்மாவை பார்க்கும் பொழுது அவள் ஆச்சர்யப்படுவதும் சுவாரசியம்.
படத்தில் இந்த கொலைகளுக்கு காரணமாக சொல்லப்படும் - சக மாணவர்களை கிண்டல், கேலி செய்வது, ராக்கிங் செய்வது, நிறவெறி என 80களில் மட்டுமல்ல இன்னும் அமெரிக்க பள்ளி, கல்லூரிகளில் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் யாராவது துப்பாக்கியால் சக மாணவர்களை சுட்டு கொல்கிறார்கள். ஏற்றத்தாழ்வான சமூகம் மறையும் பொழுது தான் இதுவும் முற்றிலுமாய் ஒழியும் என கருதுகிறேன்.
இனி காலப்பயண கதைகள் நிறைய வரும் என்பது மட்டும் நிச்சயம். அதிலும் மொக்கைப் போடாமல், சுவாரசியமான படங்களை எடுத்தால் நன்றாக இருக்கும்.
நாயகி, அவளுடைய தோழிகள் எல்லோருமே கதையில் பொருந்தியிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இயக்குநர் Nahnatchka Khan. பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என தேடினால், பெண் இயக்குநராக இருக்கிறார். பெற்றோர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
பிரைமில் இருக்கிறது. இந்த வகைப் படங்கள் பிடிக்கிறவர்கள் பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment