> குருத்து: நிழல் (2021) மலையாளம்

June 2, 2024

நிழல் (2021) மலையாளம்


நாயகன் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண் மருத்துவர் தோழியாக இருக்கிறார்.


ஒரு பள்ளியில் கதை எழுதுங்கள் என சொல்லும் பொழுது, ஒரு ஏழு வயது பையன் மட்டும் இந்த ஊர், இடம் என அதன் சூழலை விவரித்து, ஒரு கொலை நடந்ததைப் பார்த்தது போல எழுதுகிறான். பள்ளி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியாகிறது. மருத்துவரைப் பார்க்க சொல்கிறார்கள். அவர் நாயகனிடம் சொல்கிறார்.

நாயகன் ஒரு ஆர்வத்தில், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த ஊருக்குப் போய் ஒரு குளத்தில் தேடினால், 30 வருடங்களுக்கு முன், உள்ளூரில் சமூக பிரச்சனைகளுக்கு முன்நின்று போராடிய ஒரு மனிதன், திடீரென காணாமல் போகிறான். அந்த மனிதன் இப்பொழுது எலும்பு கூடாக ஆழத்தில் இருந்ததை கண்டுப்பிடிக்கிறார்கள். செய்தி பரபரப்பாகவிடுகிறது.

எப்படி தெரிந்தது என கேட்கும் பொழுது, வேறு கதை சொல்லி மழுப்பிவிடுகிறார். அந்த பையனைப் பற்றிய செய்தி வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார்.

அந்த பையனுக்கு இந்த கதைகளை சொன்னவர் யார்? ஒரு விபத்தில் செத்துப் போன அப்பாவா? வேறு யார் என உண்மையைத் தேடி அந்த கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார்கள்.
****


அபூர்வமாய் சிலப் படங்களைப் பார்க்கும் பொழுது ஒரு சிறுகதையை குறும்படமாக எடுப்பதை விட்டுவிட்டு, முழு நீளப்படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள் என தோன்றும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது அப்படித் தோணியது.

பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக செல்லும் தான். ஆனால் இந்தப் படம் அநியாயத்திற்கு மெதுவாக செல்கிறது. அதே போல இந்த கொலை(கதை)களுக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை பின்னால் சொல்வார்கள். அரசியல் அறிந்த இயக்குநர் என்றால், இதைச் சரியாக பயன்படுத்தியிருப்பார். இந்த படக் குழுவினருக்கு அத்தனைத் தெளிவில்லை. வழமையான கதையைப் போல சப்பென முடித்துவிட்டார்.

வணக்கம் என எழுத்துப் போடும் பொழுது, மலையாளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்தார்கள். படம் குறித்த முக்கிய செய்தியாக இருக்கப் போகிறது. அது என்னடா என கூகுள் உதவியுடன் மொழிப்பெயர்த்து பார்த்தால், இந்தப் படத்தில் இத்தனைப் பேர் இத்தனை ஆயிரம் மணி நேரம் வேலைப் பார்த்துள்ளனர் என போடுகிறார்கள். தலையில் அடித்துக்கொண்டேன். ஒரு நல்ல கதை. ஆனால் அதை எடுத்த விதத்தில் சொதப்பியிருக்கிறார்கள்.

நாயகனாக குஞ்சுக்ககோபன், அந்த பையனின் அம்மாவாக நயந்தாரா, மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள். அந்தப் பையன் மலையாளப் பட உலகில் ஒரு சுற்று வருவான்.

பிரைமில் தமிழ் டப்பிங்கிலேயே இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: