> குருத்து

October 28, 2024

Bougainvillea (2024) – ஒரு காட்சி

 


psychological crime thriller film


மாலை 6.45 காட்சி. 6.42க்கு உள்ளே நுழையும் பொழுது அவ்வளவு பெரிய திரையரங்கில் நான் மட்டுமே இருந்தேன்.

ஒத்த ஆளுக்காக படமா! சென்னை ரோகிணி திரையரங்கு சூப்பர்டா! என ஆச்சர்யப்பட்டேன். இருந்தாலும், ஒத்த ஆளா இருப்பது கொஞ்சம் சம்சயமாக இருந்தது. கருப்பு பேண்ட், கருப்பு டீசர்ட்டுடன் இன்னொரு இளைஞரும் 6.45க்கு வந்தார்.

படம் துவங்கியது. அந்த இருட்டான நீளமான நெடுஞ்சாலையில், இந்தி பாடல் காரில் ஒலிக்க அந்த கார் போய்க்கொண்டிருந்தது. யாருடா என அந்த இரண்டு உருவம் என உற்றுப்பார்க்கும் பொழுது… அந்த விபத்து. கார் அப்படியே தலைகீழாக தூக்கி எறியப்பட்டது.

எல்லா விளக்குகளும் எரிந்தன. படம் தூக்கி எறிந்ததோடு படம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் எனக்கு டிக்கெட் கிழித்து கொடுத்த அந்த இளைஞர் உள்ளே வந்தார். இரண்டு டிக்கெட்டுகள் தான் விற்றிருக்கின்றன. மூன்று டிக்கெட்டுகள் விற்றால் கூட படத்தை ஓட்டிவிடுவோம். கம்பெனிக்கு இரண்டு கட்டுப்படியாகாது. ஆகையால் காட்சியை ரத்து செய்கிறோம் என வருத்தம் தெரிவித்தார்கள். ஏஜி.எஸ். போன்ற திரையரங்குகள் பத்து அல்லது அதற்கு மேலே தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் ரோகிணி பரவாயில்லை.

படம் சராசரியான படம் தான். ஓடிடியில் பார்த்துக்கொள்ளவேண்டியது தான். 🙂

Level cross (2024) மலையாளம்


காலையில் ஒரு பயணிகள் ரயில் வண்டி. மாலையில் ஒரு சரக்கு ரயில் வண்டி என மிக மிக குறைவாக ரயில்கள் கடக்கும் ஒரு லெவல் கிராஸிங்கில் நாயகன் கேட் கீப்பராக வேலை செய்கிறார். அந்த லெவல் கிராசிங்கை கடக்கும் மற்ற வண்டிகளும் அபூர்வம். அவருக்கு குடும்பம் ஏதும் இல்லை. தனியனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அங்கு ஒரு கழுதை மட்டும் அவனுடன் இருக்கிறது.


ஒரு பயணிகள் ரயில் கடக்கும் பொழுது அதில் இருந்து யாரோ விழுவது போல தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் ஒரு பெண் கீழே விழுந்து கிடக்கிறார். தூக்கி வந்து முதலுதவி செய்கிறான்.

முதலில் தவறி விழுந்துவிட்டதாக சொல்பவள், தன் கதையை விவரிக்கிறாள். அதில் கணவன் மோசமானவனாக இருக்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தானே குதித்தேன் என்கிறாள்.

நாயகனுடைய உடமைகளை அவள் எதைச்சையாகப் பார்க்கும் பொழுது, அவனுக்கு ஒரு மோசமான பின்கதை இருப்பது தெரிய வருகிறது.

மனைவியை தேடி வரும் கணவன் அவள் சொன்னதற்கு மாறாக வேறு ஒரு கதை சொல்கிறான். நாயகனுக்கு அவள் இங்கிருந்தால் தனக்கு துணையாக இருக்கும் என நினைக்கிறான்.

பிறகு என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


ஒரு மனிதனுக்கு/மனுசிக்கோ துணை என்பது உடலுக்கும், மனதுக்கும் அவசிய தேவையாய் இருக்கிறது. பரஸ்பரம் நாம் நமது துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பரஸ்பரம் நமக்குள் வரும் வேறுபாடுகளை பேசி, புரியவைத்து கையாளவும் தெரியவில்லை அல்லது ஆணோ/பெண்ணோ சிக்கலாக இருக்கிறார்கள் என்பது தான் பெரிய ரோதணையாக இருக்கிறது.

துணையின் முரண்பாடுகள் குறித்து நிறைய கதைகள் வந்திருக்கின்றன. முரண்பாடுகள் இருக்கும் வரைக்கும் இன்னும் பல கதைகள் வரும். அதில் ஒரு கதை தான் இந்த கதையும். மூன்றே பாத்திரங்கள் தான். அவர்களுடைய மன உணர்வுகள் தான் கதை.

ஆள் அரவமற்ற அந்த லெவல் கிராசிங் என்ற கதை நடக்கும் இடம் புதுசு. நடைமுறையில் இப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் ஒரு ஆளைப் போட்டு பராமரிக்கிற வசதியோ, மன நிலையோ இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு நிச்சயம் இல்லை. இருந்தாலும் கதைக்காக ஏற்றுக்கொள்வோம். இந்த கதைக்காக துனிசியாவிற்கு போய் எடுத்ததாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல ஒரு ஆளுக்குப் பதிலாக இன்னொரு ஆள் பணி செய்வது எல்லாம் ரயில்வே நடமுறையில் சாத்தியமில்லை தானே! அதையும் கதைக்காக ஏற்போம்.

நாயகனாக ஆசிப் அலி, நாயகியாக அமலா பால், சர்புதீன் கணவராக வருகிறார்கள். மூவருமே பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அர்பஸ் அயூப் இயக்கியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். பிரைமில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கிறது. பாருங்கள்.

The mystery of Moksha Island (2024)

 


ஒரு கிறுக்கு மருத்துவர். மனித உடல்களை கொண்டு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். சட்டவிரோத ஆராய்ச்சி என அந்த ஆளை உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். ஒரு பணக்காரன் இவனின் “திறமையை” புரிந்துகொண்டு வெளியே கொண்டு வருகிறான். மருமகனாகவும் ஆக்கிக்கொள்கிறார்.


ஏற்கனவே உள்ள “திறமை”, இப்பொழுது கிடைத்த பெரும் சொத்து இரண்டும் தன்னுடைய ஆராய்ச்சியை அரசின் தொந்தரவு இல்லாமல், ஒரு தீவில் தொடர்கிறார்.

திடீரென ஒருநாள் அந்த மருத்துவர் விமான விபத்தில் இறந்து போனதாக செய்தி சொல்கிறார்கள். அந்த ஆள் தான் போன இடத்தில் எல்லாம் புது புது குடும்பங்களை உருவாக்கி கொண்டே போயிருக்கிறார். எல்லோரையும் புதுத்தீவு வரும்படி, அழைப்பு வருகிறார்.

30க்கும் மேற்பட்ட ஆட்கள், 60 துவங்கி, இளம் வயதினர்கள் வரை அங்கு வந்து சேர்கிறார்கள். செத்துப்போன மருத்துவர், ஒரு உயில் வைத்திருப்பதாகவும், தங்கள் சொந்தங்கள் எல்லாம் ஒரு வாரம் அந்த தீவில் இருக்கவேண்டும். அதற்குப் பிறகு 24000 கோடி சொத்தை பிரித்து உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்கிறார்கள். கிடைக்க இருக்கிற பெரும் பணம் அவர்களை அங்கு இருக்க வைக்கிறது.

ஒரு சிலர் காணாமல் போகிறார்கள். சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதை திரில்லராக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***
இந்த சீரிசின் கதை சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் எடுத்த விதத்தில் தான் செமையாக சொதப்பியிருக்கிறார்கள். வத வதவென ஏகப்பட்ட பாத்திரங்கள். யார் மீதும் அவர்களால் கவனம் கொடுக்க முடியவில்லை.

Hotstar பான் இந்தியா சீரிஸ் என முடிவு செய்துவிட்டதால், எல்லா மொழி நடிகர்களும் தனது மாநில கோட்டாவில் உள்ளே இருக்கிறார்கள். தன் இடத்தை நிருபீக்க மல்லுக்கட்டுகிறார்கள். நமக்கு தெரிந்த முகங்களாக எதிர்நீச்சல் பிரியா ஆனந்த், பிக்பாஸ் புகழ் பவானி, தெலுங்கு புகழ் பானுச்சந்தர் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன். கொஞ்சம் உடல்நலம் சரியில்லாத பொழுது, இந்த சீரிசை பார்த்துவிட்டேன். நீங்களும் என்னைப் போல மொக்கை சீரிசில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன். தமிழில் மொழிமாற்றம் செய்தே கிடைக்கிறது.