> குருத்து: பணவீக்கம் என்றால் என்ன?

June 5, 2008

பணவீக்கம் என்றால் என்ன?


முன்குறிப்பு : இந்தியாவில் எல்லா பத்திரிக்கைகளிலும் அடிக்கடி அடிபடுகிற வார்த்தை பணவீக்கம். இன்றைக்கு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தினால், ஏற்கனவே இருக்கிற பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் வேறு வழியே இல்லாமல் தான், இந்த விலையேற்றம் என்கிறார்கள். ஏற்கனவே வாங்குகிற சம்பளம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, இந்த விலையேற்றம் இன்னும் மக்களை வாட்டி வதைப்பதாக இருக்கும்.

நம்பி, வாக்களித்த மக்களுக்கு "வேறு வழியே இல்லாமல்" தான் என பொறுப்பற்ற முறையில் சொல்கிற இவர்கள் தான் உலக வங்கிக்கும், உலக வர்த்தக கழகத்துக்கும் ஆகச் சிறந்த விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

இங்கு விலைவாசி உயர்வுக்குக்காக போராடுகிற பா.ஜனதா, அதிமுக, பா.ம.க., ம.தி.மு.க, சி.பி.எம்., என தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என எல்லோரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் தான். இப்பொழுது, மக்களின் எதிர்ப்பை வாக்கு வங்கியாக மாற்றப்பார்க்கிறார்கள்.
******

பணவீக்கம் என்ற சொல் வணிகவியல் சார்ந்த கலைச்சொல். "பணவீக்கத்தை" பற்றிப் புரிந்து கொள்ள தேடியதில், பத்திரிக்கையாளர் ஜவஹர் எளிமையாக எழுதி இருந்தார்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

******

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

******

பின்குறிப்பு :

ஜவஹர் சொல்கிற வழிமுறைகள் எளிதாய் தோன்றும். ஆனால், அதை நிறைவேற்றுகிற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர் வழிகள். கடைந்தெடுத்த காரியவாதிகள். காரணமானவர்களே அதை களைவார்கள் என்பது, "திருடனாய் பார்த்து திருந்துகிற கதை தான்".
நடைமுறை சாத்தியமில்லை.

அரசியல் அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றும் பொழுது, இவை எல்லாம் எளிதாய் நடைமுறை சாத்தியமாகும்.

5 பின்னூட்டங்கள்:

கிரி said...

மிக பயனுள்ள தகவல் Socrates. எனக்கு நீண்ட நாட்களாக இது பற்றிய சந்தேகம் இருந்தது, புரிந்தும் புரியாதது போல.

//கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்//

வருமான வரியை (வேறு வழி இல்லாமல்) ஒழுங்காக கட்டுபவர்கள் சம்பளகாரர்கள் மட்டுமே, அவர்களிடம் தான் சம்பளம் கொடுக்கும் முன்பே வரி பிடிக்கப்படுகிறது.

தொழிலதிபர்கள் சிறு தொழில் முதலாளிகள் எதாவது பொய் நட்ட கணக்கு காட்டி வரியை செலுத்துவதில்லை. மிக பெரிய பணக்காரர்கள் கடன்கள் வாங்கி அதை திருப்பி செலுத்துவதில்லை. இவர்களே நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் சம்பள காரர்களை போல் அல்லது குறைந்தது அதில் பாதியாவது வரி கட்டினால் பெரும் சுமை தவிர்க்கப்படும்.

//அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்//

இது நடக்க வாய்ப்பே இல்லை என்பது கசப்பான உண்மை.

//நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்//

மிக சரியான பார்வை. உதாரணத்திற்கு கலைஞர் பதவியில் இருக்கும் போது தொடங்கப்படும் திட்டம் ஜெ வரும் போது அது முடக்கப்படுகிறது. இதே நிலைமை ஜெ க்கும். எடுத்துக்காட்டு பெரம்பூர் மேம்பாலம் ..இன்னும் பல. திட்ட காலாத்தில் முடிக்காததால் விலை உயர்ந்து திட்ட மதிப்பீடு அதிகரிக்கிறது.

மேலே குறிப்பட்டவை எல்லாம் என் ஒருவன் ஆதங்கம் அல்ல, நம்மை போல பலரின் ஆதங்கம் மற்றும் வயித்தெரிச்சல்.

பயனுள்ள பதிவு.

Socrates said...

தங்களுடைய வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கிரி.

//எனக்கு நீண்ட நாட்களாக இது பற்றிய சந்தேகம் இருந்தது, புரிந்தும் புரியாதது போல.//

இந்த நிலை தான் பலருக்கும். எனக்கு வணிகவியல் கொஞ்சம் புரியும் என்பதால் இனி வருங்காலங்களில் விளக்க இது போல விளக்க முயல்கிறேன்.

seeralan said...

it is great.... continue the same..

it has given me a initiation to know muchmore about inflation.

THANK YOU.

Socrates said...

நன்றி சீராளன்.

தொடர்ச்சியாக பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளை பதிவிட முயல்கிறேன்.

K.R.அதியமான் said...

நல்ல கட்டுரை. எளிமையான நடை. இதே தலைப்பை பற்றிய எமது பதிவு :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
விலைவாசி ஏன் உயர்கிறது ?