> குருத்து: தில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை!

September 20, 2009

தில்லை நடராஜர் கோவிலில் இரட்டை சாவி முறை!தில்லை தீட்சிதர்கள் நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். நீதிமன்றம் தீட்சிதர்களின் நம்பிக்கையை கவிழ்த்து விட்டது. அடுத்து, உச்ச நீதி மன்றத்தை நோக்கி ஓடியிருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையமும் இனி தில்லி கிளம்பும்.

வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம்... இப்பொழுது கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்திருக்கிறது. நேற்று இந்து அறநிலைய துறை ஆணையர் கோவிலுக்கு வந்து வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக பணிகள் குறித்தும் சில அறிவிப்புகள் செய்திருக்கிறார்.

அதில் முக்கியமானது. தீட்சிதர்களிடம், செயல் அலுவலரிடமும் இரண்டு சாவிகள் இருக்க ஏற்பாடு நடக்கிறதாம்.

லாக்கர் சிஸ்டம் மாதிரி, இரு பூட்டுகள். இருவரும் சேர்ந்து திறந்தால் தான் திறக்கமுடியும் என்ற முறை இருக்க வேண்டும் அதில்லாமல், ஒரு பூட்டு, இரு சாவி என்றால்... இதில் ஒரு அபாயம் இருக்கிறது. தீட்சிதர்கள் ஏற்கனவே நிறைய வசூல், நகைகளில் ஏக தில்லு முல்லு வேலைகள் செய்திருக்கிறார்கள். இப்பொழுது இரண்டு பேரிடமும் சாவி இருப்பது, ஏதாவது செய்துவிட்டு அலுவலர் பெயரில் பழி போட வாய்ப்பிருக்கிறது.

மேலும், கோவில் நிலங்களை மற்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை கணக்கிட வேலைகள் துவங்கப் போகின்றன. இப்பொழுது, உள்ள கணக்கு படி... 2594 ஏக்கர் நஞ்சை, 895 ஏக்கர் புஞ்சை என 3489 ஏக்கர் சொந்தமாக இருக்கிறது. இதில் கோவிலின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 467 ஏக்கரும், மற்றவை குத்தகைகாரர்களிடம் இருந்துவருகிறதாம். இனி ஆணையரின் அனுமதியின்றி எந்த நிலமும் விற்கமுடியாது.

இந்த நிலங்களை பற்றி அதிகாரிகள் நேர்மையாக ஆய்வு செய்தாலே போதும். பல நிலங்களை பலரிடம் விற்று தின்று தீர்த்த கதைகளெல்லாம் வண்டி வண்டியாக வரும். பிறகு, இரட்டை சாவி முறையே தேவைப்படாது.

மேலும், இப்பொழுது, நாலு உண்டியல்கள் தான் இருக்கின்றனவாம். அதனால், மேலும், பல உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்துவருகிறதாம். இரண்டாம் நிலையிலுள்ள இந்த கோவிலை முதல் நிலைக்கு நகர்த்த வேலைகள் துவங்க இருக்கின்றனவாம். அதற்கு நிதிக்குழுவிடம் 38 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள். வந்ததும் வளர்ச்சி பணிகள் துவங்கப்படுமாம்.

இனி வங்கியில் கோவில் பெயரில் ஒரு கணக்கு துவங்கி... தீட்சிதர் செயலர், அரசு செயல் அலுவலர் இருவரும் கையெழுத்திட்டால் தான் பணம் எடுக்க முடியும் என்று அறிவித்திருக்கிறார்
.

தினமலர் இந்த செய்தியை வெளியிட்டு, கடந்த 6 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேலாக வசூலாகியிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு வாஷ்பேசின் மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக ஆண்டுக்கே 39,000 தான் வசூலே ஆனது என தீட்சிதர்கள் கணக்கு காட்டும் பொழுது, தினமலர் எங்கே போனது?

அந்த கோவிலுக்கு போனவர்கள் அறிவார்கள். கோவில் பராமரிப்பு இல்லாமல் கேவலமாக இருக்கும். வருடம் முழுவதும் கோவிலிருந்து வசூலில் லட்சம் லட்சமாக தின்று தீர்த்தவர்கள் ஏன பராமரிக்க கூட இல்லை என்று கேட்க தினமலரால் முடியவில்லை.

எல்லாவற்றையும் திரும்பி பார்த்தால், நடராஜரை தீட்சிதர்களிடமிருந்து, பக்தர்களுக்கு நாத்திகர்கள் தான் மீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test