> குருத்து: கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?

February 8, 2010

கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?

சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.
அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது,
'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான்.
"பிடிக்கல" என்றான்.
"ஏண்டா?" என்றேன்.
'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான்.
மிகுந்த கவலைக்குள்ளானேன்.
ஏனென்றால்... அவன் நல்ல கருப்பு.

****

தமிழர்களின் நிறம் கருப்பு. நம் நிறத்தையே நமக்கு பிடிக்காமல் போனது? கேலியும், கிண்டலும் செய்யும் அளவிற்கு ஏன் ஆனது? '7 நாளில் சிவப்பழகு' என கோடிக்கணக்கில் நம்மிடமே தைரியமாக சொல்லி.. பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி கோடிக்கணக்கில் நம்மிடமே கல்லாக் கட்ட முடிகிறது? சிவந்த நிறமுள்ள பெண்/ஆண் வேண்டும் என பத்திரிக்கைகளில் திருமண விளம்பரங்கள் பார்க்கும் பொழுது கோபம் தலைக்கேறுகிறது. இதற்கான சமூக, வரலாற்று காரணங்களை தேடி அலைந்த பொழுது... பேராசிரியர் தொ. பரமசிவன் சில அரிய தகவல்கள் தருகிறார். படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

****

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது.

அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.

இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்ந்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.

எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

- பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் தொ. பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து...பக்கம் 113, 114.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

Anonymous said...

தொ.ப வின் ஆய்வுமுறை பற்றி சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் 8ம் 9ஆம் நூற்றாண்டுகள்வாக்கில் பக்தி இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே கூட தமிழகத்தில் ஆள்பவர்கள் சிவப்பு நிறத்தினர்தான் எனப் படித்த்தாக ஞாபகம். பல்லவர்கள் கருப்பு நிறமாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். தொ.பா விடம் வெளிப்படும் இதுபோன்ற பார்வையில் ஒருவித இனவாத தன்மை இருக்கலாம் என எண்ணுகிறென். உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் நாயக்கர் என்ற சாதியின் மீதான வெறுப்பை பல கோணங்களில் சொல்லாடுவது போன்ற தோற்றமும் ஏற்படுகிறது. ஒருவகையில் இது மரபு சார்ந்த்து எனச் சொல்லுவதன் மூலம் வேறு ஏதோ முடுபனியை திரைவிலக்க மறப்பது போல படுகின்றது. மூடுபனிதான் இன்னது என நிச்சயமாக சொல்ல முடியவில்லை

seetha said...

ஃபேர் அண்ட் லவ்லியை இன்னமும் தொடர்ந்து அனுமட்ஹிக்கும் போட்தே தெரிகிரது நமது மோஹம்.

உங்கள் கட்டுரையின் நடுனிலைமை பலருக்கு பிடிக்காமல் போகலாம்

Anonymous said...

//எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

- பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் தொ. பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து...பக்கம் 113, 114. //

உண்மைத் தான் ஆனால் அதன் தொடக்கம் 13 நூற்றாண்டுக்கு முன்னரே இங்கு விதைக்கப்பட்டு இருக்க வேண்டும் ..... 13 நூற்றாண்டுக்கு பிறகு அது விருட்சமாய் வளார்ந்து இருக்க வேண்டும் ..