> குருத்து: கல்லா கட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெருக்கடியில் தவிக்கும் மக்கள்!

May 27, 2011

கல்லா கட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெருக்கடியில் தவிக்கும் மக்கள்!

முன்குறிப்பு : கச்சா பேரல் விலை அதிகரித்துவிட்டது. நாங்கள் நட்டத்தில் தவிக்கிறோம் என்கிற எண்ணெய் நிறுவனங்களின் புலம்பல்கள் பொய்யானது என்கிற பின்வருகிற செய்திகள் நிரூபிக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் விலையை 9 தடவை ஏற்றிவிட்டன. பணவீக்கம் அதிகமாகி, விலைவாசி உயர்வில் வாடுகிறார்கள் மக்கள். விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அளவில் நாடு முழுவதும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

****
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணையதளங்களில் சென்று பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக 4 அல்லது 5 இலக்க கோடிகளில் நிகர லாபம் அவற்றுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் 2008-ல் ரூ.6962.58 கோடி, 2009-ல் 2,949.55 கோடி, 2010 நிதி ஆண்டு இறுதியில் ரூ.10,220.55 கோடி. பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் லாபமோ பல மடங்காக உயர்ந்து வருகின்றன.

"கெய்ர்ன் இந்தியா லிமிடெட்' (சி.ஐ.எல்.) என்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது என்று அந்த நிறுவனமே பெருமை பொங்க அறிவித்திருக்கிறது.

ராஜஸ்தானில் நிலப்பகுதியில் (கடலில் அல்ல) எண்ணெய் வளத்தை அகழ்ந்து எடுத்து சுத்திகரித்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.245.19 கோடி. இந்த ஆண்டு இது ரூ.2,457.79 கோடி. ஒரிரு ஆண்டுகளிலேயே நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 20% - அதாவது ஐந்தில் ஒரு பங்குத் தேவையை - பூர்த்தி செய்துவிட முடியும் என்று இந்தப் பன்னாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ராஜஸ்தானில் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல்போல தேங்கியுள்ள எண்ணெயை அகழ்ந்தெடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தத்தை இந்தப் பன்னாட்டு நிறுவனம் பெற்று நமக்கே விற்று லாபம் சம்பாதிக்கிறது.

- தகவல் - தினமணி தலையங்கத்திலிருந்து...26/05/2011

0 பின்னூட்டங்கள்: