> குருத்து: படித்து முடித்தப்பின்! - தோழர் மருதையன் உரை!

February 21, 2012

படித்து முடித்தப்பின்! - தோழர் மருதையன் உரை!இன்று காலையில் 15 வதுமுறையோ, 16 வது முறையோ இந்த ஒலி நாடாவை கேட்டேன். அருமையான செய்திகளை உள்ளடக்கிய பேச்சு!

கடந்த 2010 டிசம்பரில் முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று வெளியீட்டகம் " விடுதலைப் போரின் வீர மரபு" மற்றும் இன்னும் சில புத்தகங்களை வெளியிட்டது. அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. கீழைக்காற்று தன் நீண்ட புத்தக பயணத்தில் நடத்திய முதல் விழா என்று சொன்னது பலருக்கும் ஆச்சரியமாயிருந்தது.

அந்த விழாவில் மருத்துவர் ருத்ரன், ஓவியர் மருது, பதிவர் சந்தனமுல்லை கலந்து கொண்டு, புத்தகங்களை வெளியிட்டும், பெற்றுக்கொண்டும், சில நிமிடங்கள் பேசவும் செய்தார்கள். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச்செயலாளரான தோழர் மருதையன் "படித்து முடித்தப்பின்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

எல்லாவற்றையும் தொகுத்து சில நாட்களில் ஒரு குறுந்தகடாக ரூ. 40/- விலையில் வெளியிட்டு இருந்தார்கள். கொஞ்சம் தாமதித்து விட்டேன். நான் போய் கேட்கும் பொழுது, தீர்ந்து போய்விட்டது என்றார்கள்.

இந்த வருட புத்தக திருவிழாவில் மீண்டும் இரண்டாம் பதிப்பாக வெளியீட்டு இருந்தார்கள். வாங்கினேன்.

தோழர் மருதையனின் உரை "கீழைக்காற்று வெளியீட்டகம் துவங்கிய காலம்; அதன் பயணம் எப்படி கடுமையாக இருந்தது? இப்பொழுது "முற்போக்கு நூல்களின் முகவரி" என சொல்லும் அளவுக்கு எப்படி வளர்ந்தது?

"விடுதலைப்போரின் வீர மரபு" தொகுப்பிற்காக ஓவியர் மருது வரைந்த அருமையான கோட்டு சித்திரங்களை புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரிந்திருக்கவேண்டும்.

இப்பொழுது படிப்பு என்றால் தொழிற்கல்விக்காக மட்டுமே என்ற நிலை. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடும் உலகத்தில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி தயார்படுத்துகிறார்கள்? பதட்டத்தை உண்டாக்குகிறார்கள்? பிறகு கார்ப்பரேட் குருக்களின் முன்பு மண்டியிடுகிறார்கள்.

இப்பொழுதெல்லாம் ஆழ்ந்து சிந்திப்பது இல்லை என்பதல்ல! சிந்திப்பதே குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மூளை என்ற பொருளே ம்ழுங்கிபோய்விடும். ஒரு புதியவகை பாப்கார்ன் தலைமுறை உருவாகி இருக்கிறது.

முதலாளித்துவம் மனிதர்களை எப்படி? எந்த பாதையில் சிந்திக்க கற்றுத்தருகிறது? நாம் எதற்காக படிக்க வேண்டும்? எதை நோக்கி படிக்க வேண்டும்?

- என பல தளங்களில் இந்த உரை ஆழமாக பயணிக்கிறது. நீங்களும் வாங்கி, ஒருமுறை கேளுங்கள். பிறகு மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள்.

எப்பொழுதும் திருமணத்திற்கு மொய்யெல்லாம் செய்யும் பழக்கமேயில்லை. புத்தகம் தான் பரிசாக தரும் பழக்கம். இப்பொழுது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த சிடியையும் சேர்த்து திருமண பரிசாக தர முடிவெடுத்து உள்ளேன்.
*****

மேலே உள்ள உரையின் உரை வடிவம் :

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும்! ‍ தோழர் மருதையன்

நன்றி : வினவு

0 பின்னூட்டங்கள்: