> குருத்து: தானே புயலின் அறுவடை ‍- தங்கர்பச்சான் -ஆவணப்படம்

April 12, 2012

தானே புயலின் அறுவடை ‍- தங்கர்பச்சான் -ஆவணப்படம்


"படையல் போட்ட சாமியெல்லாம் பார்க்காம போயிருச்சே!
காவல் காத்த சாமியெல்லாம் கைவிட்டு போயிருச்சே!
தானே புயல் அடிச்ச அடி தலைமுறையை சாய்ச்சிருச்சே!"

என படத்தின் இறுதியில் ஒப்பாரியாய் பாடும் குரல் நம்மை உலுக்குகிறது.

மணிக்கு 136 கி.மீ வேகத்தில் வீசிய தானே புயல், தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளையும், பாண்டிச்சேரியின் கடலோரங்களையும் தாக்கி, உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள் மரங்கள், விளைநிலங்கள் என அனைத்தையும் சூறையாடி போய்விட்டது. குறிப்பாக இந்த படத்தில், கடலூர் மாவட்டத்தின் சில கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.

பார்க்கும் இடமெல்லாம், பசுமையோடு கனிகளை தாங்கி நின்ற மரங்கள், இன்று வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மக்கள் சோகம் அப்பிய முகங்களோடு அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

"இந்த மரங்களை எங்கள் பிள்ளைகளைப் போல நீருற்றி வளர்த்தோம். எல்லா பிள்ளைகளையும் தானே புயல் கொன்றுவிட்டது. எங்களை மட்டும் உயிரோடு விட்டுவிட்டது. சுனாமியை போல எங்களையும் சேர்த்து கொன்றிருக்கலாம். இப்பொழுது நடைபிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என விரக்தியில் பேசுகிறார்கள் மக்கள்.

இத்தனை ஆண்டு காலம் முந்திரியையும் முக்கனிகளான மா, பலா, வாழை தந்து நம்மை மகிழ்வித்த அந்த மக்கள் இன்று கண்ணீருடன் வாழ வழியறியாமல் நிற்கிறார்கள்.

இந்த படத்தை எடுத்ததின் நோக்கம் ஆளும் மத்திய, மாநில அரசுகளிடம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முன்வைப்பதற்காக எடுத்திருக்கிறார். படத்தின் இறுதியில் அதனால் தான், அரசுகள் துயர் துடைக்கும் என்ற நம்பிக்கையை முன் வைக்கிறார்.

இப்படி அழுது, அரசிடம் மன்றாடி கோரிக்கை வைத்தால், ஆட்சியாளார்கள் மனம் இரங்கிவிடுவார்களா என்ன! போராடுவதின் மூலம்தான் நமக்கான உரிமைகளை பெற்றோம் என்பதுதானே கடந்த கால வரலாறு! தானே புயலின் பாதிப்புக்கு மட்டும் விதிவிலக்கா என்ன! தானே புயலின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மாநில அரசு 5800 கோடி பாதிப்பு என இழப்பீடு கேட்டால், 500 கோடியை மட்டும் தந்துவிட்டு, அமைதியாக இருந்துவிட்டது.

அந்த மக்களுக்கு தேவை கருணையோ, அற்ப நிவாரணமோ அல்ல! மறுவாழ்வு. ஆனால், ஜெ. "கருணை" உள்ளத்துடன், அற்ப நிவாரணத்தொகையை அறிவித்துவிட்டு, "உலக சாதனை" படைத்துவிட்டதாக சட்டமன்றத்தில் பெருமை பொங்க பேசியுள்ளார்.

படத்தில் அந்த மக்களே அந்த கேள்விகளை இயல்பாய் எழுப்புகிறார்கள். புயலுக்கு பிறகு, அந்த மக்களின் குடிநீர் தேவைக்கே நடந்தோ, மிதிவண்டியிலோ இரண்டு கிமீ. தூரம் போய் நீர் கொண்டுவருகிறார்கள். அப்படி நீர் கொண்டு வரப்போன, ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்து பாதிப்பு ஏற்பட்டு தாயும், குழந்தையும் செத்தே போகிறார்கள். இப்படி அத்தியாவசிய நீர் தேவைக்கே அலையும் பொழுது, அரசு மரக்கன்றுகளை தருகிறது. அதற்கு தண்ணீர் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள்.

"அம்மா! தாயே! என தேர்தல் சமயத்தில் எங்கள் காலை பிடித்தார்கள். இப்பொழுது அவர்கள் யரையும் காணவில்லை" என கோபமாய் கேட்கிறார்கள். தானே புயல் வந்துபோய்விட்டது. அந்த மக்கள் பிழைப்புக்காக, கூலித்தொழில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு புயலின் பாதிப்பிற்கே வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தராத இந்த அரசுகளா நாளை அணு உலை வெடிப்பின் பொழுது, நம்மையெல்லாம் பாதுகாக்கப்போகிறார்கள் என போராடும் இடிந்தகரை மக்கள் கேட்பது இயல்பான கேள்வி.

படத்தின் துவக்கத்தில் "நாங்களே நொந்து போய் கிடக்கோம். அவனவன் போட்டோ பிடிக்க கிளம்பி வந்துட்டீங்க" என கோபமாய் அரிவாளுடன் ஒரு விவசாயி விரட்டுவார். அந்த கோபம் தான் போராட்டத்தை உருவாக்கும். அந்த போராட்டம்தான் நம்மை காக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாம் இணைந்து நிற்போம்.

*****

நேரம் : 35 நிமிடங்கள் இசை : பரத்வாஜ்

விலை : ரூ. 100

நன்றி : மகா

தொடர்புடைய பதிவுகள் :

தானே புயல் பேரழிவு : தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு - வினவு

0 பின்னூட்டங்கள்: