> குருத்து: பெண்ணுரிமைப் போராளி!

April 10, 2012

பெண்ணுரிமைப் போராளி!


"மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர் " என்று ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் படித்த ஞாபகம் எனக்கு.

தேவதாசி முறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை (இசை வேளார்கள்) கோவிலுக்கு நேர்ந்து, பொட்டுக்கட்டும் முறையாகும். அதாவது இச்சமூகப் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயதில் கோயிலுக்கு நேர்ந்து விடுவதால், இவர்கள் தேவர்களுக்கு அடியார் (தேவரடியார். அதாவது பெரியாரைப் போல் பச்சையாகச் சொல்வதென்றால் 'இறைவனின் வைப்பாட்டி'கள் (தேவதாசி), இப்பெண்கள் கடவுளின் பெயரால் கோவில் சார்ந்த பூசாரிகள் மற்றும் அந்தந்த ஊர் சார்ந்த பணக்கார ஆண்களுக்கு ஆசைநாயகியாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள். இப்பெண்கள் திருமணம் செய்து கணவரோடு வாழும் உரிமை மறுக்கபப்ட்டவர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் ஆரம்பத்தில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர் தான்.

தோழர் ஜீவசுந்தரியின் தேடுதலிலும், கடும் முயற்சியாலும் உருவான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாற்றைக் கூறும் இந்த நூல் அம்மையாரைப் பற்றி பல அரிய தகவல்களைத் தரும் அற்புத தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையல்ல.

பெரியார் நடத்திய சுயமரியாதை திருமணங்களுக்கும் முன்னோடியாக ராமாமிர்தம் ‍- சுயம்புபிள்ளை திருமணம் கோவிலில் நெய் விளக்கேற்றி சத்தியம் செய்ததோடு மிக எளிமையாக நடந்தேறி இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தனது பெயரை ஆ. இராமமிர்தம் என தனது வளர்ப்புத்தாயின் (ஆச்சிக்கண்ணு) முதல் எழுத்தையே பயன்படுத்தி உள்ளார்.

1938ல் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தில் திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் 577 மைல்கள் நட்ந்தே சென்றுள்ளார். பயணத்தின் பொழுது 87 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இந்துமத மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் தன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார்.

தோழர்கள் குஞ்சிதம் ‍ குருசாமி, சிவகாமி சிதம்பரனார் உட்பட 80க்க்கும் மேற்பட்ட சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' கொண்டு வர போராடிய டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் அளவிற்கு மூவலூர் அம்மையார் பெயர் பதிவாகவில்லை என்கிற தோழர் ஜீவசுந்தரியின் ஆதங்கம் நியாயமானதே.

மூவலூர் அம்மையார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாக பணியாற்றியுள்ளார்.

மூவலூர் அம்மையார் ஆதரவற்ற பெண்களை எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு அழைத்துவந்துவிடுவாராம். அதன்பின் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைப்பதையும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதையும் ஒரு நிரந்தர கடமையாகவே செய்து வந்துள்ளார்.

1956ம் ஆண்டு திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை இயக்க்திற்குப் பாடுபட்ட பெண்ணுரிமைப் போராளி மூவலூர் அம்மையாருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

அது மட்டுமல்ல.. தன் வாழ்நாளில் யாரிடமும் சிபாரிசுக்குச் செல்லாத அண்ணா அவர்கள், அம்மையாரின் பேரனுக்காக சிதம்பரம் பல்கலைத் துணைவேந்தரிடம் சிபாரிசு செய்துள்ளார்.

1936ல் 'தாசிகள் மோசவலை' அல்லது 'மதி பெற்ற மைனர்' என்ற நாவலையும், அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு வார இதழில் 1945ஆம் ஆண்டு 'தமயந்தி' என்ற தொடர்கதையையும் எழுதியுள்ளார்.

தோழர் ஜீவசுந்தரியின் படைப்பைப் படிக்கும் பொழுது அவரது முயற்சியும், உழைப்பும் நூல் முழுமையிலும் தெரிகிறது. இந்த நூல் படிப்பதற்கு எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. இந்த அற்புத நாவலைப் படைத்த தோழர் ஜீவசுந்தரிக்கு வாழ்த்துக்கள்!

மூவலூர் அம்மையாரின் வாழ்க்கையை சொல்லும் இந்த நூல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கோ அல்லது கல்லூரி மாணவர்களுக்கோ பாடப்புத்தகமாக அமைவதற்கு முழுத்தகுதி பெற்றிருக்கிறது.

‍- தோழர் பொற்கொடி
தோழமை மார்ச் 2012 இதழிலிருந்து...

பக்கம் : 192
விலை ரூ. 120

வெளியீடு :

அரிவை
(பெண்களுக்கான நூல் வெளியீடுகள்)
27, பாரதி முதல் குறுக்குத்தெரு,
செல்லியம்மன் நகர், அம்பத்தூர்,
சென்னை ‍ 58

பேச : 97899 13810

3 பின்னூட்டங்கள்:

குருத்து said...

இரண்டாவது பத்தியில் "மூவலூர் இராமமிர்தம் அம்மையாரும் ஆரம்பத்தில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர் தான்" என குறிப்பிட்டுள்ளார்.

அதை கொஞ்சம் விளக்கவேண்டும். தேவதாசிகள் குடும்பத்தில் பெண் வாரிசுகள் தான் தேவதாசியாக மாறவேண்டும். மாறமுடியும். ஆண் வாரிசுகளின் குழந்தைகள் தேவதாசியாக மாறமுடியாது. அம்மையார் ஒரு ஆண் வாரிசின் மகள். கடுமையான வறுமையின் காரணமாக, குடும்பத்தை விட்டு வெளியேறி அப்பா சென்னைக்கு போய்விடுகிறார். பிறகு அம்மாவும் பிள்ளையை ஒரு தாசி பெண்ணிடம் விட்டுவிட்டு போய்விடுகிறார். அந்த தாசி பெண் அம்மையாரை தாசியாக்கிவிட வேண்டும் என்ற முடிவோடு தான் வளர்க்கிறார். 7 வயதில் அதற்கான சடங்குகள் நிறைவேற்றப்பட்டாலும், 17வயதில் முறைப்படி பொட்டுக்கட்ட விண்ணப்பிக்கும் பொழுது ஆண் வாரிசின் பிள்ளை என்பதால், தாசியாக முடியாது என மயிரிழையில் தப்பிக்கிறார்" (பக். 31)

Guna said...

உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்

நன்றி
குணா

Guna said...

உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்

நன்றி
குணா