> குருத்து: அப்பாவின் நினைவாக!

June 16, 2013

அப்பாவின் நினைவாக!



ஏட்டுக்குரிய தொந்தியுடனும்
ஏட்டுக்குரிய அசமந்தத்துடனும்
தோற்றம் கொண்டவர்.

அப்பா – அன்பான அப்பா
பிள்ளைகளை ஒருநாளும்
அடித்தவரில்லை.
வீட்டுல ஒரு (அம்மா) ஆள்
அடிச்சா போதும்! என்பார்.

அப்பா கைப்பிடித்து
நடக்கும் வேளைகளில்
நான் கேட்கும்
ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சொல்வார்.

அம்மா படிக்காதவர்.
கைநாட்டாய்
இருக்கக்கூடாது என
கையெழுத்துப் போட – அம்மாவுக்கு
சொல்லிகொடுத்தவர்.
இப்பொழுதும் - மணியார்டரில்
அம்மா கையெழுத்தை
பார்க்கும் பொழுது
அப்பா நினைவுக்கு வருகிறார்.

அப்பா – கும்பகர்ணனுக்கு
தூரத்துச் சொந்தம்
ஆறு மாதம்
மிக சாதுவான மனிதராய்
உலாவருவார்.
வார்த்தைகளை எண்ணி
பேசுவார்.
மறு ஆறுமாதம்
அவரே - வலிந்து
பேசுவார், பாடுவார்

அப்பா - பாதி நாத்திகர்
கையெடுத்து சாமி
கும்பிட்டவரில்லை
அம்மாவின் வற்புறுத்தலால்
தன் வாழ்வின் இறுதிவரை
இடுப்பில் தாயத்தோடு திரிந்தவர்

அப்பா ஊர்சுற்றி
கட்டிய வேட்டி, சட்டை
ஒரு துண்டோடு
இரண்டு வருடத்திற்கொருமுறை
இரண்டுமாதம்
காணாமல் போய்விடுவார்

கடும் தலைவலி என சொல்லி
கோமாவில் விழுந்தார்
நினைவு திரும்பாமலே
உயிர் துறந்தார்.
மோசமான சிகிச்சையால்
தன் நோயிலிருந்து
விரைவில் விடுபட
அரசு மருத்துவமனை
அவருக்கு உதவி செய்தது.

நிறைய வருடங்கள்
உயிரோடு இருப்பார் என்ற
நம்பிக்கையில்
அப்பாவுடன் சண்டைகள் போட்டே
நாட்களை கடத்திவிட்டேன்.

இன்று
அப்பாவின் நினைவுநாள்
20.08.1999

அப்பாக்கள் தினமாம் நேற்று! இந்த நாட்கள் கடைப்பிடிப்பதில் எனக்கு அத்தனை அக்கறை இல்லை. சிலர் அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்ததால், அப்பா குறித்த நினைவுகள் மேலெழும்பின. 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது இது! இப்பொழுது அப்பாவாக இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.  :)

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

நான் அப்பாவாகவும் இல்லை,எனக்கு அப்பா நிணைவும் இல்லை.