> குருத்து: காசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல்! இல்லாதவனுக்கு மகள் செத்தால் கூட பரோல் இல்லை!

February 28, 2014

காசு, புகழ் உள்ளவர்களுக்கு பரோல்! இல்லாதவனுக்கு மகள் செத்தால் கூட பரோல் இல்லை!

சினிமா நட்சத்திரங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பரோல் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும் மகாராஷ்டிர அரசு, ஏன் மற்றவர்களுக்கு அந்த சலுகையை வழங்க முன்வரவில்லை? என்று மும்பை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிரான வழக்கில், மற்றொரு குற்றவாளியான நாகுல் தனது மகள் இறப்புக்கு செல்ல அனுமதி கேட்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பரோல் கோரி நகுல் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்ற நாகபுரி கிளை நீதிமன்றத்தின் நீதிபதிகள் பூஷண் கவாய், அதுல் சந்துர்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை குறிப்பிட்ட நீதிபதிகள், "உயிரிழந்த தனது மகளை பார்ப்பதற்கு கூட பரோல் மறுக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. உங்களுக்கு (அரசு) மனிதாபிமானம் கிடையாதா? அல்லது சினிமா நட்சத்திரங்களுக்கும் மட்டும்தான் மனிதாபிமான சலுகை பெறுவதற்கு தகுதி உண்டா?' என்று கேள்வி எழுப்பினர். 
பின்னர் நகுலுக்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக பரோல் கேட்டு நகுல் சார்பில் வழக்குரைஞர் மீர் நாக்மன் அலி ஆஜராகி வாதிடும்போது, "உயிரிழந்த தனது மகளைப் பார்ப்பதற்கு நகுல் பரோல் கேட்டு பிப்ரவரி 14ஆம் தேதி நாகபுரி மண்டல ஆணையரிடம் விண்ணப்பித்திருந்தார். 10 நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை' என்று குற்றம்சாட்டினார்.

- நன்றி : தினமணி 

0 பின்னூட்டங்கள்: