> குருத்து: Pretham 2 (2018) மலையாளம்

May 13, 2019

Pretham 2 (2018) மலையாளம்


ஒரு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட முகநூல் சினிமா குழு ஒன்று.

நேரடி அறிமுகம் இல்லாமல் அந்த முகநூல் குழு மூலமாக அறிமுகமான மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஒரு குறும்படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஒரு வீட்டில் ஒன்றுகூடுகிறார்கள். அந்த வீட்டில் சின்ன சின்ன அமானுஷ்ய விஷயங்கள் நடைபெறுகின்றன. கலவரமடைகிறார்கள். அங்கு இருந்து கிளம்பும் முடியாது. விடாது துரத்தும் என்கிறார்கள்.
அங்கு வந்து தங்கி இருக்கும் மென்டலிஸ்ட் அதற்கான காரணங்களை ஆய்வு செய்கிறார்.

அந்த சினிமா முகநூல் குழுவில் உள்ள ஒரு நபரால் தவறாக வழிநடத்தப்பட்டதால் குழுவிலிருந்த ஒரு மாணவரின் அப்பா சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அந்த மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

யார் அந்த நபர் என தேடி அலைகிறது அந்த ஆத்மா. (கொடூரமாக நடந்து கொண்டால் பேய். சாப்ட்டாக நடந்துகொண்டால் ஆத்மா! சரி தானே! 🙂 )
அந்த குறும்படம் வாயிலாகவே அந்த நபருக்கு வலை விரிக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்டவர் சிக்கினாரா என்பது முழு நீளக்கதை!

****

இது வழக்கமான பேய் படம் இல்லை. கொஞ்சம் அமானுஷ்யம் கொஞ்சம் புத்திசாலித்தனம் என படம் நகர்கிறது. முதல் படம் இதே சாயலில் எடுத்து வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகத்தையும் தைரியமாய் அதே ஸ்டைலில் எடுத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஏற்படும் சிக்கல்கள் தினமும் செய்தி தாள்களில் பார்க்கமுடிகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு கூட ஒரு அப்பா, நாள் முழுவதும் தன் பெண் செல்போனிலேயே இருந்ததால் பெண்ணை எரித்து கொன்றுவிட்டார். திக்கென்று இருந்தது. இனி இப்படி கதைகள் நிறைய வரும்.

நாம வேற வெள்ளந்தியான ஆள் என்பதால் முகநூலில் சாட்டை (Chat) ஆப் செய்தே வைத்திருக்கிறேன். 🙂

படத்தில் mentalist ஆக வரும் ஜெயசூர்யா தான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். மென்டலிஸ்ட் என்றால் டுபாக்கூர் என படத்திலேயே கலாய்க்கிறார்கள். தேடிப்படித்து பார்த்தால் கொஞ்சம் மேஜிக், மைண்ட் ரீடிங் என கலவையாக எழுதியிருக்கிறார்கள். டுபாக்கூர் தான் போல!
சென்னை ஈகாவில் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: