> குருத்து: பாலுமகேந்திராவின் "மூடுபனி" (1980)

July 5, 2020

பாலுமகேந்திராவின் "மூடுபனி" (1980)


கதை. நாயகனின் சிறுவயதில் அம்மாவை அப்பா கொடுமைப்படுத்துகிறார். வேறு ஒரு பெண்ணுடன் தன் சொந்த வீட்டிலேயே வாழ்கிறார். அம்மா செத்துப்போகிறார். வளர்ந்த பிறகு, பெண்களைப் பிடிக்கவில்லை. விலைமாதர்களை கண்டால், வெறிகொண்டு கொலைகளை செய்கிறார். மருத்துவரைப் பார்க்கும் பொழுது, "ஒரு நல்லப் பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்! சரியாகிவிடும்" என்கிறார்.

நாயகியைப் பார்க்கிறார். பிடித்துப்போகிறது. தன் விருப்பத்தை சிக்கலாக வெளிப்படுத்துகிறார். நாயகியோ வேறு ஒருவரை காதலிக்கிறார். பக்காவாக திட்டம் போட்டு, நாயகியை கடத்துகிறார். பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****
படம் பார்க்கும் பொழுதே தோன்றியது. அம்மாவை கொடுமைப்படுத்துவது அப்பா. கொடுமை செய்கிற அப்பாமார்களை தேடித்தேடி கொலை செய்வது தானே நியாயம். எதற்கு விலைமாதர்களை கொலை செய்யவேண்டும்?

எளிய கதை தான். ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தை தழுவி இந்தப் படத்தை பாலுமகேந்திரா எடுத்துள்ளார். நாயகனான பிரதாப்பும், நாயகியாக ஷோபாவும் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் அருமை. மற்றபடி பானுச்சந்தர், மோகன் எல்லாம் வந்துபோகிறார்கள்.

ஷோபா இந்தப் படத்திற்கு பின்னால் தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய படப்பட்டியலை பார்த்தால், மிக நீண்டதாக இருக்கிறது. அதற்குள் பல விருதுகள். நல்ல பெயர்.

ஷோபாவின் தற்கொலை பாலுமகேந்திராவிற்கு நிறைய கெட்ட பேரை கொடுத்திருக்கிறது. படத்தின் துவக்கத்தில், "எனக்கு எல்லாமுமாய் இருந்த அன்பு மனைவி அம்மு (ஷோபா)வுக்கு ஆத்ம சமர்ப்பணம்" என டைட்டில் கார்டு போடுகிறார். அந்த சமயத்தில் ஷோபாவிற்கு வயது மிக குறைவு. பாலுமகேந்திரா நாற்பதை கடந்திருக்கிறார். பாலுமகேந்திரா தான் விலகியிருக்கவேண்டும். ஒரு நல்ல நடிகையை திரை உலகம் இழந்திருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: