> குருத்து: IP Man (2008)

July 4, 2020

IP Man (2008)

கதை. 1937 காலகட்டம். தென் சீன பகுதி. நாயகன் Wing Chun என்ற தற்காப்பு கலையில் சிறந்த மாஸ்டர். தன் துணைவியாருடன், ஒரே பையனுடன் வசதியாக வாழ்ந்துவருகிறார். பயிற்சி பள்ளி நடத்த வலியுறுத்துகிறார்கள். ஆனால் மறுக்கிறார். வடக்கு சீன பகுதியில் வந்து உள்ளூரில் சண்டை பயிற்சி பள்ளி வைத்துள்ள அத்தனை மாஸ்டர்களையும் வீழ்த்துகிறான் ஒருவன். உள்ளூரில் நாயகனின் புகழ் இருப்பதால், அவரையும் தேடிவருகிறான். அவனை தோற்கடித்து அனுப்புகிறார். உள்ளூரில் இன்னும் பிரபலமாகிறார்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டம். ஜப்பான் நாடு சீனாவை ஆக்கிரமிக்கிறது. ஊரையே கலவரப்படுத்துகிறார்கள். நாயகன் வீடு இழந்து, வசதி இழந்து ஒரு சிறுவீட்டில் வசித்துவருகிறார். வறுமையால் ஒரு நிலக்கரி சுரங்க வேலை செய்யும் இடத்தில் வேலை செய்கிறார்.

ஜப்பான் தளபதி தனது வீரர்களுக்கு பயிற்சியாய் இருக்கட்டும் என சீன தற்காப்பு வீரர்களை அழைத்து வந்து சண்டையிட செய்கிறான். சீன வீரர்களை மோசமாக நடத்துகிறார்கள். நாயகன் கோபத்தில் ஒரே நேரத்தில் பத்து ஜப்பான் வீரர்களை அடித்து துவைத்து, சென்றுவிடுகிறார். அதற்கு பிறகு அவரை ஜப்பான் தளபதி தேடுகிறான். அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை பர பர சண்டைகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

****

தற்காப்பு சண்டைப் படங்கள் பார்த்து பல வருடங்களாயிற்று. ஜெட்லி வந்த பிறகு பறந்து, பறந்து சண்டைப் போட்டு, ஆர்வம் இல்லாது செய்துவிட்டார்கள். இந்தப் படம் உண்மையாக வாழ்ந்த ஒரு மாஸ்டரின் படம். இந்த சீரிஸ்ஸில் மொத்தம் நான்கு படங்கள் வந்திருக்கின்றன. நன்றாக இருக்கும் என ஆங்காங்கே ஒரு சிலர் எழுதியும் இருந்தார்கள். ஆகையால் பார்த்தேன்.

எளிமையான கதை. நாயகனும் மிகவும் எளிமை. வட சீனத்துக்காரன் ”ஒரு லேடி கற்றுக்கொடுத்த கலை தானே இது!” என இழிவாக பேசுவான். தற்காப்பு கலையில் ஆண், பெண் என்ன? என்பார். சண்டையில் தோற்றதும், கோபமாக ”தென் சீனக்காரனிடம், வட சீனக்காரன் தோற்றுவிட்டான்”. அதற்கும் அமைதியாக, ”உன்னுடைய தற்காப்பு கலையில் பிரச்சனையில்லை. அதை கையாள்கிற உன்னிடம் தான் பிரச்சனை” என்பார்.

கராத்தே, குங்பூ, ஜூடோ என நிறைய வகைகள் இருந்தாலும், நிஜத்தில் ”மான் கராத்தே” தான் சிறந்தது என்பார்கள். ”அதென்ன மான் கராத்தே?” என நான் முதன் முதலில் கேட்ட பொழுது, கெக்கெ! பிக்கே! சிரித்துவிட்டார்கள். வெளியூரில் ஒரு வருடம் வேலை பார்த்த பொழுது, அங்குள்ள பள்ளியில் காலை 5 மணி முதல் 6 மணிவரை டோக்வான்டோ ஸ்டைல் கராத்தே சொல்லித்தந்தார்கள். நான் ஒரு ஆர்வத்துடன் சேர்ந்துவிட்டேன். கடுமையான உடற்பயிற்சி. மூன்று மாதம் பெண்டை கழட்டிவிட்டார்கள். மஞ்சள் பெல்ட் (அதுதான் முதல் பெல்ட்) வாங்கிவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஊரைவிட்டு கிளம்ப வேண்டியிருந்தது. கிளம்பும்பொழுது, என்னை விட இளவயது மாஸ்டர் அமைதியாக சொன்னார் ”இப்பொழுது நீங்கள் கற்றுக்கொண்டதை கொண்டு, ஒரு ஆளை கொன்றுவிடலாம். ஆகையால் கவனமாக இருங்கள்” என்றார். எனக்கே அதைக் கேட்ட பொழுது டெரராக இருந்தது. சண்டை கற்றுக்கொள்வது என்பது நிஜ வாழ்வில் பயன்படுகிறதோ இல்லையோ, நம்பிக்கைத் தரும். எதிர்கொள்ளும் தைரியத்தை கற்றுத்தரும்.

இவருடைய மாணவர்களில் புகழ்பெற்றவர்களில் ஒருவர் நம்ம புருஸ்லீ. தமிழில் கிடைக்கிறது. ஆங்காங்கே சீன மொழி என மாறிவிடுகிறது. சப் டைட்டில் வைத்து சமாளித்தேன். நான் நண்பரிடம் வாங்கிப் பார்த்தேன். நல்லபடம் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: