> குருத்து: விக்ரமன் பேட்டியிலிருந்து சில துளிகள்….

July 19, 2021

விக்ரமன் பேட்டியிலிருந்து சில துளிகள்….





”இயக்குநர் மணிவண்ணனை சந்தித்து உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், 100 படத்திற்கான தலைப்புகள் எல்லாவற்றையும் நிதானமாய் அரை மணி நேரம் படித்துப் பார்த்து, நாளையிலிருந்து வா! என்றார். அவரிடம் சேர்ந்தேன்.”


”அவரிடம் இரண்டு படம் மட்டும் வேலை செய்துவிட்டு, நான் சம்பந்தப்படாத வேறு ஒரு பஞ்சாயத்தால், அவரிடம் இருந்து விலகி, பார்த்திபனின் புதியபாதை படத்தில் சேர்ந்தேன். படம் முடிவதற்குள் இயக்குநர் பார்த்திபனுக்கும், எனக்கும் பிரச்சனை. அந்த பிரச்சனையை சொல்ல விரும்பவில்லை. பிறகு இயக்குவதற்கு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன்”

“புதிய வசந்தம் கதையை சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி சாரிடம் சொன்னதில் தயாரிக்கிறேன் என முன்வந்தார். படம் இயக்கினேன். மிகப்பெரிய வெற்றி பெற்றது”.

“இரண்டாவது படம் பெரும்புள்ளி. நான் இயக்கிய படங்களில் இந்தப் படம் நான் இயக்கியிருக்க கூடாது. தோல்வி என்பதால் இதை சொல்லவில்லை! “பிறகு, ஆனந்த்பாபுவை வைத்து ”நான் பேச நினைப்பதெல்லாம்”, அர்ஜூன் – பானுப்பிரியா வைத்து கோகுலம். இரண்டுமே நன்றாக ஓடின.”

”பூவே உனக்காக” மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து, இயக்கினேன். அதில் நடித்த சீனியர் நடிகர், ”குருவி தலையில் பனங்காய். விஜய்யை மாற்றி விட்டு, கார்த்திக் போன்ற நடிகரை வைத்துக்கொண்டால், படம் வெற்றிபெறும்” என்றார் படத்தில் ஒரு நீளமான உணர்ச்சிகரமான வசனம். ஒருமுறை நான் சொன்னதை விஜய் கவனமாய் கேட்டார். பிறகு ”டேக் போகலாம்” என்றார். எனக்கு ஆச்சர்யம்! அதை ஒரே டேக்கில் செய்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். எனக்கு தெரிந்தவர்களிடம் விஜய்யின் திறமைகளைப் பற்றி சொல்லி, நன்றாக வளர்ந்துவருவார் என சொன்னேன். படம் மிகப்பெரிய வெற்றி.”

“உன்னை நினைத்து” முதலில் விஜய்யை வைத்து சில நாட்கள் ஷீட்டிங் போனது. பிறகு என்னிடம் வந்து க்ளைமாக்ஸ் தனக்கு திருப்தியில்லை என்றார். இந்த சந்தேகம் வந்த பிறகு தொடர்ந்து படத்தை எடுப்பது சரியல்ல நாம் நண்பர்களாக பிரிந்துகொள்ளலாம். வேறு ஒருவரை வைத்து இயக்குகிறேன்” என்றேன். மறுத்ததற்காக மன்னிப்பு கேட்டார். பிறகு சூர்யாவை வைத்து எடுத்து வெற்றி பெற்றது. படம் வெற்றி பெற்றால், அந்த படத்திற்காக பெற்ற தொகையை திருப்பதி கோயிலில் உண்டியலில் போடுகிறேன் என சூர்யா வேண்டிக்கொண்டார். அதை நிறைவேற்றினார்.

”வானத்தைப் போல” கதையை எழுதி சூப்பர் குட் செளத்ரியிடம் சொல்ல, சரத்குமாரும் சரி என சொல்ல, நான் மறுத்தேன். அப்பொழுது தான் “நாட்டமை” வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. உடனே ஒரு மென்மையான பாத்திரம் என்றால், சரிவராது. ”சூர்யவம்சம்” கதை சொல்லி, இருவரும் ஏற்று நான் இயக்கிய படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது.”

”பிறகு, வானத்தைப் போல கதையை விஜய்காந்தை வைத்து இயக்கினேன். பெரிய வெற்றி. தேசிய விருது, மாநில விருது என சில விருதுகளை பெற்றது. இதில் விஜய்காந்திற்காக சில மாற்றங்கள் செய்திருந்தேன். ஒரிஜினலாக நான் எழுதியிருந்த கதையை எடுத்திருந்தால்… 100 வருசம் பேசப்பட்டிருக்கும்”

“உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” கார்த்திக் நடித்துக்கொண்டிருந்த பொழுது, இந்த கதை தான் நடித்த நந்தவனத்தெரு போல இருக்கிறது. ஆகையால், கதையை மாற்றவேண்டும் என தயாரிப்பாளரிடம் பேசியிருந்தார். நான் கார்த்திடம் பேசினேன். அந்தக் கதையும், இந்த கதையும் வேறு வேறு. ஆகையால், நம்பிக்கையுடன் நடியுங்கள். படம் வெற்றி பெறும். அப்பொழுது “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இயக்குநருக்கு நிறைய நம்பிக்கை இருந்தது” என்று இன்று நடந்ததை வெற்றி விழாவில் சொல்லவேண்டும் என சொன்னேன். சொன்னது போலவே வெற்றிவிழாவில் சொன்னார்.”

“என் வாழ்வில் என்னை கடந்து போனதில், நான் மிஸ் பண்ணியது கமலின் “அன்பே சிவம்” ரஜினியின் “பாபா”.

- டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து...

0 பின்னூட்டங்கள்: