> குருத்து: Sky Rojo (2021) வெப் சீரிஸ் - மூன்று பெண்களின் போராட்டம்

September 13, 2022

Sky Rojo (2021) வெப் சீரிஸ் - மூன்று பெண்களின் போராட்டம்



ஸ்பெயினில் ஒரு இரவு விடுதி. அங்கு நிறைய பெண்களை வைத்து விபச்சார கிளப் நடத்துகிறார்கள். அவர்கள் வேறு வேறு நாடுகளிலிருந்து ஏமாற்றி அழைத்துவரப்பட்டவர்கள். அடியாட்களை வைத்து மிரட்டி நிறைய சம்பாதிக்கிறார்கள்.


ஒருத்தி தன் தாய், தம்பியை காப்பாற்றுவதற்காக ஹோட்டலில் வேலை என ஏமாற்றி கியூபாவிலிருந்து அழைத்துவரப்பட்டவள். இன்னொருவள் லெஸ்பியன். தன் காதலிக்காக இங்கு வந்தவள். இன்னொருவள் போதை அடிமை. அவளுக்கு போதை மருந்து இல்லையென்றால் கிறுக்கு பிடித்துவிடும். ஆகையால் அவள் அங்கு வந்து சேர்கிறாள்.

கியூபாவை சார்ந்தவள் அங்கிருந்து விடுபட்டு, தன் காதலனுடன் வாழ முடிவு செய்து தன்னிடமிருந்த அத்தனை சேமிப்பு பணத்தையும் கொடுக்கும் பொழுது, அந்த முதலாளி இன்னும் நிறைய பணம் கட்டவேண்டும் என சொல்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் உனக்கு போதாது என கோபமாகி அவனை அவள் அடித்துவிட, அவன் மோசமாக தாக்குகிறான். அங்கு எதைச்சையாக வரும் இன்னும் இரு பெண்களும் அவளை காப்பாற்ற அவனைத் தாக்க, அவன் செத்துவிட்டான் என பயந்து, மூவரும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

சிக்கலாகிவிடும். திரும்பி போய் மன்னிப்பு கேட்கலாம் என மூவரும் பேசி மீண்டும் க்ளப்புக்கு போனால், தற்செயலாக கோரமான விபத்து ஒன்றும் ஆகிவிடுகிறது. தப்பிக்கிறார்கள். க்ளப்பின் அடியாட்கள் அவர்களை துரத்த, இவர்களுக்குள் நடக்கும் டாம் Vs ஜெர்ரி விளையாட்டுத்தான் முழுவதுமே!
****

உலகம் முழுவதும் போதை பொருளும், விபச்சாரமும் பரந்து விரிந்து இருக்கிறது. அதன் மூலம் ஒரு பெரிய ”வருமானம்” வருவதால், முதலாளித்துவ அரசுகள் கண்டுகொள்வதில்லை. பெண்களின் சதையை வைத்து, பெண்களை வதைத்து இப்படி விபச்சார விடுதிகள் இயங்குகிறதே என்கிற எந்த கூச்சமும் இல்லை. நாய் விற்ற காசு குலைக்காது தானே என்பது போல நடந்துகொள்கிறார்கள்.

ஐரோப்பாவில் ஸ்பெயின் தான் விபச்சாரத்தின் தலைநகர் என்கிறார்கள். 3,50,000 பேர் ஸ்பெயினில் இருப்பதாக ஒரு ஊடகம் எழுதுகிறது. ஸ்பெயின் அரசும் இந்த பெண்களை காப்பாற்ற என சட்டங்களை இயற்றி இருக்கிறது. அதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான்.

இந்தப் படமும் பெண்களின் பிரச்சனைகளை பேசுகிற படமும் இல்லை. அதை வைத்து கல்லா கட்டுகிற படமாக தான் இருக்கிறது என புகழ்பெற்ற “கார்டியன்” இதழ் சொல்வது சரி தான்.

ஒரு பெண் ஹோட்டலில் வேலை என ஏமாற்றி அழைத்துவரப்படுவாள். மேலே சொன்ன பிரச்சனையில் வெளியே வந்து அவள் அம்மாவிடம் பேசுவாள். ”எங்களுக்கு மாதமானால் சரியாக பணம் வந்துவிடுகிறது. உன் தம்பி படிக்கிறான். நானும் நல்லா இருக்கேன்.”. என்கிறாள் தாய். “அது ஒரு விபச்சார விடுதி. மாட்டிக்கொண்டேன். இப்பொழுது அங்கிருந்து தப்பித்துவிட்டேன்” என்பாள். அதற்கு அந்த தாய் “மீண்டும் அங்கேயே போய்விடு!” என்பாள். அவள் நொந்துபோவாள்.

சீரிசில் வருகிற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நன்றாக செய்திருக்கிறார்கள். படம் போகிற போக்கிலேயே, பிளாஷ்பேக் காட்சிகள் வந்து வந்து போகும்.

கிளப் நடத்துகிறவர்கள் VS மூன்று பெண்கள் – இவர்களுக்குள் நடக்கும் டாம் & ஜெர்ரி சண்டை தான் படம். அதை சுவாரசியமாக எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். கிளப், விபச்சாரம் என கதை நகர்வதால் சில அடல்ட் காட்சிகள் உண்டு. நெட் பிளிக்சில் இருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் பார்க்கலாம்.

2021ல் முதல் சீசன் மார்ச்சில் வந்தது. எட்டு அத்தியாங்கள். ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள். முதல் சீசனின் வெற்றியில் இரண்டாவது சீசனும் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியாகியிருக்கிறது. அதையும் பார்க்கவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: