> குருத்து: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (EPF) சமீபத்தில் செய்த மாற்றங்கள் என்னென்ன?

March 14, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (EPF) சமீபத்தில் செய்த மாற்றங்கள் என்னென்ன?


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)   நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன?  - அத்தியாயம் 14


வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சமீபத்தில் செய்த மாற்றங்கள் என்னென்ன?

 

ஊழியர் வேலை  செய்த விவரத்தில் செய்யப்பட்ட (De Link) மாற்றம்

 

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் பணியில் இணைந்து வேலை செய்வார். அதனால் நிர்வாகம் அன்றைக்கே அவரை பி.எப் திட்டத்தில் இணைக்கும்.  ஆனால் அன்று மதியமோ மாலையோ வேலை பிடிக்காமலோ, வேறு காரணங்களிலோ அந்த ஊழியர் பணியிலிருந்து விலகிவிடுவார்.  சிலர் ஒரு மாதம் வேலை செய்த பிறகு கூட வேலையில் இருந்து வேறு வேறு காரணங்களினால் வேலையில் இருந்து நின்றுவிடுவார்கள்.

 

பி.எப் விதிகளின் படி, அந்த நிறுவனம் அந்த ஊழியர் வேலை செய்த ஒரு நாளுக்கான அல்லது ஒரு மாதத்திற்கான பி.எப் நிதியை செலுத்துவது என்பது தான் சரியானது. ஆனால், ஒரு நாளைக்கு எப்படி செலுத்துவது? ஊழியர் தான் வேலையை விட்டு போய்விட்டாரே, ஒரு மாதத்திற்கான  பி.எப் நிதியை ஏன் செலுத்தவேண்டும்  என அதன் பின்விளைவுகளை அறியாமல் சம்பந்த ஊழியர் கணக்கில் நிதியைச் செலுத்தாமல் தவிர்த்துவிடுகிறார்கள்.

 


இப்படி நிதியை செலுத்தாமல் இருப்பது என்பது ஊழியரின் பி.எப் கணக்கு இதனால் சிரமத்துக்குள்ளாகும்.   பிறிதொரு சமயத்தில் பி.எப் அலுவலகத்தை தனது கணக்கை முடித்து பணம் பெற அணுகும் பொழுது, ஒரு நிறுவனத்தில் இணைக்கப்பட்டு, பிறகு எந்தவித நிதியையும் செலுத்தாமல் இருப்பது ஏன்? என பி.எப் அந்த ஊழியரை கேள்விகேட்கும்.  நிறுவனத்தை கேட்கச் சொல்லி வலியுறுத்தும்.  நடைமுறையில்  அந்த ஊழியரோ அந்த நிறுவனத்தை அணுகி கேட்க முடியாத நிலைமையில் தான் இருப்பார்.   ஆகையால் அவருடைய கணக்கை முடித்து பணம் பெறுவது என்பது சிக்கலாகி நிற்கும்.

இந்த பிரச்சனைப் பல ஊழியர்களுக்கு பரவலாக இருப்பதால், இதற்கு இப்பொழுது ஒரு தீர்வு கொண்டு வந்திருந்திருக்கிறார்கள்.   இப்படி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து எந்த நிதியும் பி.எப் கணக்கில் செலுத்தப்படவில்லையென்றால், பி.எப். பணியாளருக்கான தளத்தில் தொழிலாளர்  வேலை செய்த வரலாறு (Service History) வரிசையாக காட்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேராக (De Link) இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  பணியாளர் பி.எப். பாஸ் புத்தகத்தை ஒரு முறை சரிபார்த்து கிளிக் செய்தால் போதுமானது.  அந்த கணக்கை அவருடடைய கணக்கில் இருந்து நீக்கிவிடலாம்.  ஒருவேளை தவறுதலாக நீக்கிவிடுவோமோ என்ற தயக்கம் வேண்டாம்.  அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பணம் பணியாளரின் கணக்கிற்கு வந்து இருந்தால், இந்த (De Link) சுட்டி வேலை செய்யாது என சொல்லிவிட்டார்கள்.   ஆகையால் இதன் மூலம் பல ஊழியர்கள் நிச்சயம் பலனடைவார்கள்.

 

நிறுவனத்தின் தளத்திலும் இப்பொழுது இணை உறுதி மொழி படிவம் (Joint Declaration)

 

ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள், வேலை செய்த விவரங்கள் பி.எப். தளத்தில் நாம் பணியும் இணையும் கொடுத்த விவரங்கள் இருக்கு.   அதற்கு பிறகு பல்வேறு  காரணங்களுக்காக தனிப்பட்ட விவரங்களை, வேலை செய்த விவரங்களை ஆதாரில், வங்கி புத்தகத்தில், பான் கார்டில் சில மாற்றங்களை செய்கிறார்கள்.

 

பி.எப் கணக்கிலிருந்து நாம் பணம் பெற விண்ணபிக்கும் பொழுது, பி.எப். நாம் கொடுத்த விவரங்களும், இப்போதைய விவரங்களும் பொருத்தமாக இருக்கவேண்டும்.  அப்படி இல்லாத பொழுது,   இணை மொழி உறுதிமொழி பத்திரத்தை அறிமுகப்படுத்தினார்கள்.   அதில் ஊழியரும், நிறுவனத்தின் பொறுப்பாளரும்  கையெழுத்திட்டு உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கும் பொழுது,  மாற்றங்களை செய்துவந்தார்கள்.

 

இதனால், ஊழியர்கள் பி.எப். அலுவலகத்திற்கு பலர் செல்வதால், எப்பொழுதும் ஒரு நீண்ட வரிசை காத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகையால், இந்த சிரமத்தைப் போக்க,   ஊழியருக்கென இருக்கும் பி.எப் தளத்தில் திருத்தம் செய்வதற்கான இணை உறுதி மொழிப் பத்திரம் பதிவு செய்வதற்கான வசதியை கொண்டு வந்தார்கள்.  இது ஒரு நல்ல முன்னேற்றம்.

 

ஆனால், அதிலும் சில ஊழியர்களின் ஆதாரில் உள்ள பெயர் மற்றும் ஏதேனும் மாற்றம் இருந்தால், ஊழியர்களுக்கென இயங்கு தளத்தில் உள்ளேயே நுழைய முடியாதபடியும் சிக்கல் எழுகிறது.  ஆகையால் அதையும் சரி செய்வதற்காக ஜனவரி 16ந் தேதியன்று  இணை உறுதிமொழிப் பத்திரம் (Joint Declaration SOP Version) 3.0 என  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.  (இணையத்தில் தேடினால் இந்த பிடிஎப் பைலை எளிதாக எடுத்துவிடலாம்)

 

இது குறித்து கடந்த பிப்ரவரி 2025 இதழில் எழுதியிருந்தோம்.   இப்பொழுது அதை எளிமையாக்கும் விதமாக, நிறுவனத்திற்காக இயங்கும் பி.எப். தளத்திலும் இணை உறுதி மொழிப் பத்திரத்தை பதிவு செய்யும் ஒரு வசதியை கொண்டு வந்துள்ளார்கள்.  ஆகையால் ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையை முடியாத சிக்கலை சரி செய்துகொள்ளமுடியும்.

 

பணியாளரின் கணக்குகளை எளிதாக மாற்ற புதிய வசதி

 


ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் மாறும் பொழுது, இரண்டு கணக்குகளுக்கும் ஒரே அடையாள எண் (UAN – Universal Account No.)  இருந்தாலும் கூட, ஊழியர் தங்களுக்கென இயங்கும் பி.எப் தளத்தில் போய் பழைய கணக்குகளை கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றம் செய்ய கோர வேண்டும்.    அப்படி மாறும் பட்சத்தில் தான் முந்தைய பி.எப் கணக்கிலிருந்து புதிய கணக்கிற்கு பி.எப். நிதி மாற்றலாகும்.  இப்படி ஊழியர் மாற்றம் செய்யாமலேயே தானாகவே பி.எப் நிர்வாகம் மாற்றிவிடும் என ஒரு அறிவிப்பு வந்தது.   இதில் ஒரு சிக்கல் என்னவென்றால்,  இரண்டு கணக்கிலும் ஊழியர் குறித்த தனிப்பட்ட விவரங்கள் எல்லாமும் பொருந்தியிருக்கவேண்டும் என்பது முக்கியமானது.  ஏதாவது ஒரு விவரம் மாறியிருந்தாலும், பி.எப் நிறுவனம் கணக்கை மாற்றாமல் நிறுத்தி வைத்துவிடும்.

 

இதற்காக பழைய கணக்கில் இருந்து, புதிய கணக்கிற்கு   மாறுவதற்காக விண்ணபிக்கும் பொழுது, பழைய நிறுவனத்தின் ஒப்புதலுக்கு (Approval) அனுப்புவதா?  புதிய நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்புவதா? என தளம் கேட்கும்.  ஊழியருக்கு எந்த நிறுவனம் உடனடியாக ஒப்புதல் தருமோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நடைமுறையில் வழக்கமாக இருந்தது.   இப்படி செய்யும் பொழுது, பழைய நிறுவனமோ, இப்பொழுது வேலை செய்யும் புதிய நிறுவனமோ அதற்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும்.   அப்படி ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு பி.எப் நிதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

 

இந்த சிக்கலை இப்பொழுது சரி செய்யும் பொருட்டு,  பழைய நிறுவனத்திற்கோ, புதிய நிறுவனத்திற்கோ ஒப்புதலுக்கு செல்லாமல், நேரடியாக சம்பந்தப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு செல்லும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ஆனாலும் இதிலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. 01/10/2017 க்கு பிந்தைய காலத்தில் ஆதாரோடு இணைக்கப்பட்ட ஊழியர்களின் அடையாள எண்களுக்கு (UAN) மட்டுமே இது சாத்தியம் என அறிவித்திருக்கிறார்கள்.

 

ஆகையால் ஏற்கனவே இப்படி பழைய கணக்கிலிருந்து இருந்து புதிய கணக்கிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பித்து இருந்த பணியாளர்கள், அந்த விண்ணப்பம் இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கும் காத்திருக்கும் பட்சத்தில், அதை ரத்து செய்துவிட்டு, புதிதாக விண்ணப்பியுங்கள்.  அது நேரடியாக பி.எப். நிர்வாகத்திற்கு செல்லும். ஒப்புதலும் விரைவில் கிடைத்துவிடும்.  இதுவும் நல்ல முன்னேற்றம்.

 

பி.எப். லிருந்து ஓய்வு நிதி வாங்கும் ஒரு நபர்,  புதிய நிறுவனத்தில் வேலையில் இணையும் பொழுது, அவருக்கான ஓய்வு நிதி பங்களிப்பை மீண்டும் செலுத்தமுடியுமா?

 

முடியாது.   ஒருவர் ஓய்வு நிதி வாங்கத் துவங்கிவிட்டால், அவருக்கு மீண்டும் ஓய்வு நிதி கணக்கில் பங்களிப்பை செலுத்தக்கூடாது.  அதற்கு பதிலாக பி.எப் நிதி கணக்கிலேயே மொத்த பங்களிப்பையும் செலுத்தவேண்டும். சில நிறுவனங்கள் ஊழியருடைய வயதை கவனிக்காமலும், இந்த விசயம் தெரியாமலும் ஓய்வு நிதி கணக்கில் நிதியை செலுத்திவிடுகிறார்கள்.  

 

சம்பந்தப்பட்ட ஊழியர் மீண்டும் அந்த நிதியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது, சிரமத்துக்குள்ளாவார்.  அப்பொழுது ஓய்வுநிதியில் செலுத்தப்பட்ட நிதியை மீண்டும் பி.எப். கணக்கிற்கு மாற்றுவதற்கான செயல்முறைகளுக்கு விண்ணப்பித்து தான் பெறமுடியும். இதனால் நிதியை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.  ஆகையால், ஓய்வு நிதி வாங்குபவர்களும், நிறுவனங்களும் கவனமாக இருக்கவேண்டும்.

 

ஒரு நிறுவனத்தின் முதலாளி வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைய முடியுமா?

 

பி.எப். சட்டம் என்பது ஊழியர்களின் வருங்காலத்திற்கான நலன்களுக்காக உருவாக்கப்பட்டது.    ஆகையால், முதலாளி/முதலாளிகளை இந்த திட்டத்தில் இணைப்பது தவறு என பி.எப். விதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால் இந்த செய்தி தெரியாத பல நிறுவனங்களில் முதலாளியையும் இந்த திட்டத்தில் இணைத்து வைத்திருக்கிறார்கள். ஆகையால் தவறாக திட்டத்தில் இணைத்தவர்களை உடனே அவர்களுடைய பங்களிப்பு செலுத்துவதை நிறுத்துவது நல்லது.

 

பி.எப் - ஓய்வு ஊதிய நிதி நியமிக்கப்பட்ட பிறகு ஏதேனும் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

                                                                   

ஒரு ஊழியர் 58 வயதுக்கு பிறகு, அவருடைய பணிக்காலத்தில் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்கவேண்டும்.  அப்பொழுது தான் அவருக்கு ஓய்வு நிதி கணக்கிட்டு தரப்படும்.  ஒரு ஊழியர் தான் விரும்பினால் (மேலே சொன்ன பத்து ஆண்டுகள் நிபந்தனை)  50 வயதுக்கு பிறகு குறைக்கப்பட்ட ஓய்வு நிதியை பெறமுடியும்.  ஓய்வு நிதி குறைவாக வருகிறது. ஆகையால், 58 வயதுக்கு பிறகு வாங்கிக்கொள்கிறேன் என மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பில்லை.  ஒரு மத்திய அரசு ஓய்வு பெற்ற ஊழியருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தான் ஓய்வு பெற்ற பொழுது,  என்னுடைய சம்பளத்தில் பாதியை ஓய்வு நிதியாக பெற்றிருக்க முடியும். அதில் 50%  போதும் என மீதி 50%க்கு அவர்களிடமே கொடுத்துவிட்டேன்.  அதற்கு ஒரு தொகையை ஈடாக தந்தார்கள். அதை வாங்கி கடனை அடைத்துவிட்டேன் என்றார்.  இப்படி எனக்கு பாதி ஓய்வு நிதி போதும் என்றெல்லாம் பி.எப்பில் சொல்வதற்கு வாய்ப்பில்லை.

 

ஒரு ஊழியர் தன்னுடைய பி.எப் கணக்கில் கூடுதலாக பணம் செலுத்தமுடியுமா?

ஒப்பீட்டளவில் பொதுவாக வங்கி வட்டியை விட கூடுதலாக பி.எப் நிர்வாகம் கூடுதலாக வட்டியைத் தருகிறது. ஆகையால், கூடுதலாக சேமிக்கவேண்டும் என நினைப்பவர்கள் வங்கியில் வைப்பு நிதியாக வைப்பதை விட, தன்னுடைய பி.எப் கணக்கில் செலுத்தலாம் என செலுத்த துவங்கினார்கள்.   பி.எப் கணக்கில் செலுத்தும் கணக்கில் சில நிபந்தனைகளுடன் வருமான வரியில் இருந்து விலக்கும் இருந்தது. ஆகையால், சிலர் கோடிக்கணக்கில் செலுத்த துவங்கினார்கள்.  பிறகு பி.எப் நிர்வாகம் அதனை முறைப்படுத்த 2021ல் சில அறிவிப்புகளை தந்தது.   ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சம் வரை ஊழியர் பங்களிப்புகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. கூடுதலாக பெறப்படும் வட்டிக்கு TDS பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

9551291721

 

0 பின்னூட்டங்கள்: