> குருத்து: December 2011

December 30, 2011

முல்லை பெரியாறு - தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!




முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்

உழைக்கும் மக்களே,

தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்களின் வாழ்வுக்கும் வளத்திற்கும் உயிராதாரமாக இருப்பது முல்லைப் பெரியார் அணை. அந்த அணை பலவீனமாக உள்ளது என்றும், அணை உடையும் அபாயத்தில் உள்ளது என்றும், 40 லட்சம் கேரள மக்களின் உயிரை, உடைமைகளை காவு வாங்கப்போகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சதித் திட்டத்தோடு கோயபல்சு பாணியில் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது கேரள அரசும், ஓட்டுக்கட்சிகளும் மற்றும் ஊடகங்களும்.

கேரளத்தின் புளுகுனித்தனத்தின் உச்சக்கட்டமாக கடந்த ஒரு வாரகாலமாக கம்பம்-குமுளி எல்லைப்புறத்தில் பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது கேரளக்கட்சிகள். அன்றாடம் பிழைப்புக்காக கேரளாவிற்கு கூலி வேலைக்குச் செல்லும் தமிழ் மக்களை தாக்குவது, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை இழுத்துப்போட்டு அடிப்பது, தமிழ்நாட்டு வாகனங்களில் ஆபாசமாக இனவெறுப்பை கக்கி எழுதுவது, தமிழக முதல்வரின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற இனவெறி காலித்தனம் செய்து, தமிழின வெறுப்பை உமிழ்கிறார்கள். இந்த காலித்தனத்தை கேரள போலீசின் பாதுகாப்போடு அனைத்து ஓட்டுக்கட்சிகளும் முன்னின்று நடத்துகிறார்கள்.

உண்மையில் அணை உடையும் ஆபத்தில் உள்ளதா? இல்லையெனில், ஏன் இந்த பொய்ப்பிரச்சரம்? புரிந்து கொள்ள முல்லைப்பெரியார் அணையின் சில உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டும். உண்மைகளை எப்பொழுதும் வெல்லமுடியாது.

முல்லைப்பெரியாறு அணைத்தோற்றம்!

1850களில் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சத்தையும் அதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவும், வரிவசூல் செய்யவும், விவசாயத்தை சீரமைக்கவும் நினைத்து வெள்ளை அரசு அதற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு தொடர்ச்சி மலையில் வீணாகக் கடலில் கலக்கும் முல்லைப்பெரியாரின் நீரைக்கட்டி, தேக்கி தமிழகத்திற்கு திருப்புவது என முடிவெடுத்தது. அத்திட்டத்தை பென்னிகுயிக் என்ற பொறியாளரிடம் ஒப்படைத்தது.

இதற்காக 1886 இல் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் பெரியார் அணைக்கட்டுமான 999 வருட குத்தகை ஒப்பந்தம் ஏற்பட்டது.

தமிழக மக்களின் உழைப்பை, உயிரை, உதிரத்தைக் கொடுத்தும் பென்னி குயிக்கின் முன்முயற்சியில் பெரியார் அணை கட்டப்பட்டது.

பெரியார் அணையினால் தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. 1958 லிருந்து மின்னுற்பத்தியும் செய்யப்படுகிறது. தமிழக மக்களின் நலனை கருத்திற்கொண்டு கட்டப்பட்ட பெரியார் அணை நிலக்குத்தகை ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. ஒப்பந்தப்படி அணை கட்ட தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை குத்தகை பணம் தவறாமல் செலுத்தப்பட்டிருக்கிறது.

அணையில் சீரமைப்புப் பணிகளும் வல்லுநர் குழு ஒப்புதலும்!

1979இல் மலையாள மனோரமா இதழில் அணை உடையப்போகிறது என புரளி செய்தி வெளியிட்டது. இதையொட்டி அணையின் பலம் குறித்து பிரச்சனையை கேரள அரசு தீவிரமாகக் கிளப்பியது.

அதனால், மத்திய நீர்வல ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் தலைமையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அணையில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது.

அதில் முதற்கட்டப் பணிகள் முடியும் வரை நீர்மட்டம் 136 அடியும் முதற்கட்டப் பணிகள் முடிந்தவுடன் 142 அடியாகவும் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் 152 அடியாகவும் உயர்த்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளுக்கு கேரள அரசின் வனத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை போன்ற துறைகள் பல வகைகளில் இடையூறு செய்து பணிகளை தடுத்து நிறுத்தியது. இருந்தும், பேபி அணையைப் பலப்படுத்தும் சீரமைப்புகளைத் தவிர மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தது தமிழக அரசு. அணையின் பலம் பாதுகாப்பாக உள்ளது என்பதற்கு இந்தியாவில் உள்ள முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியல் ரீதியாக சோதனை செய்து அறிக்கையை அளித்துள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும் அணையின் பலம் குறித்து விவாதித்த பின் அணியின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கி உள்ளனர்.

நாட்டின் சிறந்த நீரியல் பொறியாளர்கள் 6பேர் அடங்கிய குழுவை மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் டாக்டர் பி.கே. மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம்பெற்ற கேரள அரசின் பிரதிநிதி தவிர அனைவரும் அணையின் வலிமைக்கு சான்றளித்து 142 அடி நீரைத் தேக்கலாமென அறிக்கை தந்தார்கள். ஆனால், கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த அடாவடித்தனமாக மறுத்து வருகிறது.

தமிழகம் அணையின் மீதுள்ள பல உரிமைகளை இழந்துள்ளது. மீன்பிடிக்கவும் படகு விடவும், சாலைகள், பாதுகாப்பு உட்பட அனைத்தையும் இழந்துள்ளது. இப்போது அணையில் நீர்த்தேக்கும் உரிமையையும் கேரளா அடாவடித்தனமாக மறுக்கிறது. பெரியார் அணை சம்பந்தமாக 'இல்லாத' ஒரு பிரச்சனையை எழுப்பி இவ்வளவு பிடிவாதம் செய்ய காரணம் என்ன?

அடாவடித்தனத்தின் உள்நோக்கம்!

முக்கியக் காரணம் இடுக்கி அணையின் 800 வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இதற்கு பெரியார் நீர் தேவை. ஆகையால் பெரியார் அணையில் 136 அடிக்கு மேல் நீர் தேக்கினால் மின் உற்பத்தி பாதிக்கும்.

ஆனால், 1886 ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தப்படி அணையும், 152 அடி நீர்த்தேக்கும் உரிமையும் தமிழகத்துக்கு சொந்தமாக இருக்க இடுக்கி அணைக்கு நீர் தேவை என்பதை நேர்மையான முறையில் கூறி, தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், அணை உடையும் ஆபத்து என்ற பீதியைக் கிளப்பி 136 அடி நீர்மட்டத்தை நிரந்தரமாக்க முயற்சிக்கிறது கேரள அரசு. எங்கே சென்றாலும் நாம் தோற்றுப்போவோம் என்று தெரிந்து தான் சட்டப்படியான தீர்வுகளுக்கோ அல்லது அறிவியல் முறையிலான தீர்வுகளுக்கோ ஒத்து வராமல் கேரள அரசு பிரச்சனைகளை இழுத்துக்கொண்டே இருக்கிறது.

இப்பொது, புதிதாக அணை கட்டும் வாதத்தை வைத்து அங்கே புதிய அணையை புவியியல் அமைப்பின்படியும் கட்டுமான பொறியியலின் படியும் 140 அடிக்கு மேல் கட்ட இயலாது. 136 அடிக்கு மேல் நீரையும் தேக்கமுடியாது. ஆக மொத்தம் கேரள அரசின் நோக்கம் நிறைவேறும். புதிய அணை, புதிய ஒப்பந்தம் என்று கூறுவதன் நோக்கம் அணையையும் தமிழக உரிமையையும் களவாடுவதுதான்.

மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் கயவாளித்தனம்!

உச்சநீதிமன்றம் 142 அடி நீரைத் தேக்க உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பையும் உறுதி செய்து தீர்ப்பையும் உறுதி செய்தது நீதிமன்றம். தனது தீர்ப்பை அமுல்படுத்தாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைத்து பிரச்சனையை கேரள அரசு விரும்பியபடி துவங்கிய இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை, வல்லுநர் குழுவின் முடிவுகளை - எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அடாவடி செய்யும் கேரளத்தை கண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். அணையை மத்திய நீர்வலத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி கேரளத்தின் அடாவடித்தனத்திற்கு துணை போகிறது. நம்மை மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தை, ஆய்வுகுழு என்று 30 ஆண்டு காலமாக செக்கு மாட்டைப் போல சுற்றிவரச் செய்கிறது.

காங்கிரசு, பி.ஜே.பி. போலிக்கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டம்!

தேசிய ஒருமைப்பாடு பேசும் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி., போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள் ஓட்டுக்காக தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பு உணவு தானியங்கள் -காய்கறிகள் முதலானவற்றுக்கு தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி ஆகும். அந்த அளவிற்கான நீரையாவது தமிழகத்திர்கு தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சிகளிடம் இல்லை.

வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற போதும் அணையில் நீர்க்கசிவு உள்லது என திருத்தச் சொல்லி பயபீதி ஊட்டியும் குறுகிய தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு புதிய அணை கட்டும் திட்ட்டத்தை செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் செயல்படுகிறது. இதன் மூலம் அணையை தனது பொறுப்பில் வைத்து கொண்டு தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களையும் பாலைவனமாக்கத் துடிக்கின்றது.

இவ்வளவுக்கு பின்னரும் இரு மாநில அரசுகளும் இணக்கமாக பேசித் தீர்க்கவேண்டும் என அக்கட்சிகளின் மையத் தலைமை உபதேசம் செய்கிறது. தமிழகத்தின் நியாய உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து, தேசியக் கட்சிகளின் தமிழ் மாநில தலைமை எந்த போராட்டத்தையும் நடத்தியதில்லை. அக்கட்சிகளின் கேரள மாநில தலைமையின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அகில இந்திய தலைமையிடம் வாதிட்டதும் இல்லை. இப்பித்தலாட்டப் பேர்வழிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி இவர்களை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்காமல் பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாய உரிமைகளை நாம் பெறமுடியாது.

நமது பெரியாறு உரிமையைப் பெற வழி!

நமது நியாய உரிமைகளை மறுக்கின்ற கேரள மாநிலத்திற்கு எதிரான பொருளாதார முற்றுகைதான் உடனடி பணி.

பரம்பிக்குளம் - ஆழியாறு - மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்திற்கு செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்திற்குச் செல்லும் சாலை, இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ளவேண்டும்.

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளௌ முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தவேண்டும். இது இனவெறி ஊட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்திற்கு நியாய உரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்திற்கு இப்படித்தான் பாடம் புகட்டமுடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் பொழுது மைய அரசு அம்மாநில அரசின் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தீர்ப்பை அமுலபடுத்தவேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்திற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வக்கற்ற மத்திய அரசின் எந்தவொரு அதிகாரத்தையும் நாம் ஏற்கக்கூடாது. அனைத்து பகுதிகளிலும் மத்திய அரசின் அலுவலகங்களையும், நீதிமன்றங்களை இழுத்து மூடவும் மத்திய அரசுக்கான் வரிகளைச் செலுத்த மறுப்பதன் மூலமாகத்தான் நம்து பெரியாறு அணையைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.

முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்


இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 28, 2011

புயல் ஒன்று பூக்கோலமிட்டது!


இரவு செய்திகளில்
'தானே'
காற்று பலமாய் வீசி
வேரோடு மரங்களை சாய்க்கும்!
அறுவை இயந்திரங்கள்
தயாராயிருக்கின்றன!
மரங்களின் கீழ் ஒதுங்காதீர்கள்!!
என எச்சரித்தார்கள்.

'தானே'
விடிய விடிய மழை பெய்து
பாதைகளை தடை செய்யும்!
நீரை உறிஞ்ச‌
ஜெனரேட்டர்கள் தயாராய் இருக்கின்றன!
என நம்பிக்கை ஊட்டினார்கள்.

கண்ணில் கவலைகளுடன்
உறங்கிப்போனேன்!

விடிகாலையில் பார்த்தால்
'தானே'
அழகாய் வாசல் தெளித்து
வாசல் மரத்தினை மெல்ல அசைத்து
பூக்களால் கோலமிட்டிருக்கிறது!

நன்றி 'தானே'!

December 27, 2011

வேண்டாம், அணு மின்சாரம்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட மக்கள் நடத்திவரும் போராட்டத்தைநாம் செய்திகளில் பார்த்துவருகிறோம். இந்த போராட்டம் சில மாத காலங்களாக நடந்துவருகிறது. இவ்வளவு மக்கள் திரண்டு வந்து இவ்வளவு நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடுவதன் அவசியம் என்ன?

அணுமின் நிலையத்தில் அப்படி என்ன தான் நடந்து வருகிறது? மின்சார உற்பத்தி தான்.

பொதுவாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ போன்ற ஒரு பெரிய ஜெனரேட்டரை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சைக்கிளில் நாம் பெடலை அழுத்தி, சக்கரத்தை சுற்றவைத்து, அதன் மூலம் டைனமோவை சுற்ற வைத்து மின்சாரத்தை பெறுகிறோம். மின் நிலையத்தில் இந்த வேலையை ஒரு அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரை கொண்டோ, நீராவியை கொண்டோ செய்கிறார்கள். நெய்வேலி மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து நீரை ஆவியாக்கி அதன் மூலம் ஜெனரேட்டை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அணுமின்நிலையத்திலோ அணுவை பிளக்கும் போது உற்பத்தியாகும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

அணுமின் நிலையத்தினால் என்ன நன்மைகள்?

அணுவை பிளக்கும் போது உண்டாகும் வெப்பமானது மிக மிக அதிகம். ஆகையால், சிறு அளவில் எரிபொருளைக்கொண்டு அதிக மின்சாரத்தை தயாரிக்கலாம். மேலும், டீசல், நிலக்கரி போன்ற எந்த பொருளும் எரிக்கப்படுவதில்லை. அணுமின் நிலையங்கள் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் காற்றில் கலப்பதில்லை.

சரி, பிறகு ஏன் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்?

கார்பன் டை ஆக்ஸைடை காற்றில் கலக்காவிட்டாலும், அணுமின் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அணுக்கதிர் வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால், மார்ச் மாதத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பலருடைய கண்களை திறந்துவிட்டது. சுனாமி அலை ஜப்பானின் புகோஷிமா நகரத்தின் கரையோரத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை தாக்கி செயலிழக்க செய்தது. விபத்து நேரங்களில் அணுவை பிளக்கும் இயந்திரம் (நியுக்ளியர் ரியாக்டர்) ஆட்டோ மேடிக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளிருக்கும் எரிபொருளின் வெப்பத்தை குறைக்க தண்ணீரை உள்ளே செலுத்தும் மோட்டாரும் பழுதடைந்துவிட்டதால், எரிபொருள் உருகி, அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புறத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சுற்றுவட்டாரத்தில் இருந்த சுமார் ஒரு லட்சம் வெளியேற்றப்பட்டார்கள். மக்கள் இனி நீண்ட காலத்திற்கு யாரும் அங்கே வசிக்கமுடியாது. அந்தக் கதிர்வீச்சினால், மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அணுக்கதிர் தாக்கினால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரும். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு லட்சகணக்கானவர்களை உடனடியாக கொன்று குவித்தது. அன்றோடு முடிந்துவிடவில்லை. கதிர்வீச்சினால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தால் நம் நிலைமை என்ன ஆகும் என்று மக்கள் கவலைப்படுவது சரியே. போபாலில் 1984ல் நடந்த விபத்தில் கசிந்த விஷவாயு பலருடைய உயிரை குடித்துள்ளது. இவ்வளவு காலங்களுக்குப் பின்னும் அந்த பாக்டரியின் சிதைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படவில்லை. அணுமின் நிலைய விபத்து இதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும்.

இதெல்லாம் அரசுக்கு தெரியாதா? இருந்தும் ஏன் அணுமின் நிலையத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான மின் உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களே சரியான வழி என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. உலக அளவிலான மின்சார உபயோகத்தில் வெறும் 13 சதவிகிதமே அணுமின்சாரம். அத்துடன் அணுமின் நிலையத்தை கட்டி முடித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி ஆவதற்ற்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நாட்டின் அரசுகள் அணுமின் நிலையங்களை ஏன் ஆதரிக்கின்றன?

அணு ஆயுதம் செய்வதற்கு தான்!

ஆம். அணுமின் நிலையத்தில் உபயோகப்படும் யுரேனியம் வேதியல் மாற்றத்திற்கு பின் ப்ளுடோனியமாக மாறும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தை செய்தும் ஒரு அணுமின் நிலையம் வருடத்திற்கு 150 - 200 கிலோ ப்ளுடோனியம் தயாரித்துவிடும். இதைக் கொண்டு எளிதாக ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் 25 தயாரித்துவிடலாம். ஒரு அணுமின் நிலையத்தின் ஒரு வருட தயாரிப்பே இவ்வளவு என்றால், உலகில் 439 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் ப்ளுடோனியத்தை கொண்டு எவ்வளவு குண்டுகளை தயாரிக்கலாம். நினைக்கவே பயமாக இருக்கிறது.

பிறகென்ன, பல அரசுகளின் முழு ஆதரவும், அணுமின் நிலையங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்?

அணு ஆயுதத்தை நாம் எதிர்ப்போமேயானால், அணுமின் நிலையங்களையும் எதிர்த்தே ஆகவேண்டிய தேவையிருக்கிறது. ஆகையால், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

****

கட்டுரையாளர் : பாலாஜி

நவம்பர் 2011 தோழமை இதழிலிருந்து....

December 21, 2011

அணு மின்சாரத்தால் பலன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான்!


நேற்று தமிழகம் தழுவிய அளவில் குறுந்தொழில், சிறுதொழில், குடிசைத்தொழில், பல்வேறு தொழிற்பேட்டைகள் கதவடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மின்சாரத் தடையால், பெரிய பாதிப்பு வருவதால், கூடங்குளம் அணு உலையை துவங்க சொல்லி வலியுறுத்தினார்கள்.

பத்திரிக்கைக்கான செய்தியில், மத்திய அரசு பாதுகாப்பானது என சொல்லிவிட்டதால், உடனே உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.

தங்களுக்கு மின்சாரம் தேவையென்றால், தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் மின்சாரம் கொடு என போராடலாம். அப்படி கோர உரிமை இருக்கிறது.

அல்லது

மின்சாரத்திற்கு எந்தவித திட்டமும் இல்லாமல், நீ வா! நீ வா! என பன்னாட்டு நிறுவனங்களை அழைத்த பொழுது, எதிர்த்திருக்கவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் இதே போல் சிறுதொழிற்சாலைகளுக்கான சங்கங்கள் போராடிய பொழுது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவது குறித்து வெள்ளை அறிக்கை கொடு என்றார்கள். அப்படியே இப்போதும் கேட்கலாம்.

அப்படி கேட்பதில் இவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. காரணம் இங்கு நடக்கும் உற்பத்தி எல்லாம் ஏகாதிபத்திய சேவைக்கான உற்பத்தியாய் இருக்கும் பொழுது, அவர்கள் தான் இவர்களுக்கு வேலையே தருகிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு வாழ்வு தருபவர்களை (!) எப்படி கேள்வி கேட்க முடியும்? அணு மின்சாரம் கிடைத்த பிறகும், நமது முதலமைச்சர்கள் நீ வா! நீ வா! என மீண்டும் அழைப்பார்கள். இவர்கள் அப்பொழுதும் வேடிக்கைத்தான் பார்ப்பார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. உற்பத்தியில் லாபம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்கள்.
கூடங்குளம் அணு உலையால் பயன் பெறப்போவதும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

http://news.chennaionline.com/chennai/Small-scale-industries-shut-shops-demanding-commissioning-of-KKNPP/6282710a-a91e-4f89-8f3d-2ab02b260d9a.col

December 6, 2011

சாரு - எக்ஸைல் நாவல் வெளியீட்டுவிழா! - அனுபவம்!


நேற்று உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் பகல்முழுவதும் வீட்டில் புரண்டு கொண்டிருந்தேன். மாலை மண்டை காய்ந்து, எங்காவது போகலாம் என நினைத்து தேடுகையில், எக்சைல் வெளியிட்டு விழா செய்தி கண்ணில்பட்டது.

****

கோட்டு சூட்டெல்லாம் போட்டு, சாருவே நிகழ்ச்சி தொகுத்துக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அவர் இறுதியில் பேசுவதால், விழாவிற்கு வந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்களாம். அதனால், இந்த முறை தப்பிக்கவிடக்கூடாது என அவரே தொகுத்துவிடலாம் என முடிவு செய்ததாக சொன்னார். என்ன ஒரு பிரச்சனை! தொகுப்பாளினி அல்லது தொகுப்பாளர் ஏற்பாடு செய்திருந்தால் சாருவை புகழ்ந்திருப்பார்கள். இப்பொழுது, அவரை அவரே புகழ்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம். அதனால் என்ன! அது ஒரு சிரமமே இல்லை என்ற அளவில், சந்தோசமாய் தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். எனக்கு தெரிந்து, தமிழ்நாட்டில் தனனைத் தானே புகழ்ந்து கொள்வதில், முதல் இடத்தில் இருப்பவர் ஜெ. இரண்டாவது நபர் சாரு.

****
'அழகன்' படத்தில் கண்ணாடி போட்ட பையன், வீட்டின் நிலைமையை நொந்துகொண்டு, "நாம வேறு எங்காவது பிறந்திருக்கலாம்டா" என்பான் படம் முழுவதும்! சாருவும் எந்த விசயத்தை பேசினாலும், தமிழ்நாட்டில் பிறந்திருக்கவேண்டிய ஆளே இல்லை! என மனதிற்குள் அழுவது நன்றாக தெரிந்தது!

****

சாருவின் புத்தகம் 250யாம். அங்கேயே 200க்கு விற்பதாக சொன்னார்கள். வாங்குகிற ஐடியா சுத்தமாக இல்லை. சாருவின் மாஸ்டர் பீஸ் என பீத்திக்கொள்ளப்படும் ஜீரோ டிகிரி காசு போட்டு வாங்கினேன். எவ்வளவு சிரமப்பட்டு படித்தும், நகரவே இல்லை. நாமும் சில வருடங்களாக இலக்கியம் படிக்கிறோம். சாருவை நெருங்க முடியவில்லையே (!) என நொந்து, படிப்பதை நிறுத்திவிட்டேன். ஆகையால், எக்ஸைலை இலவசமாகவே தந்தாலும் படிக்கிற ஐடியா எனக்கில்லை.

****

கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.

****

நான் போனதே 6.30மணி. அரைமணி நேரம் சாரு சின்சியராக தொகுத்துகொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னாலேயே வந்திருந்து, நிகழ்ச்சியைக் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் (சாரு போலவே, மொத்த முடியும் வெள்ளையாய் இருந்தது!) என்னிடம் கேட்காமல், அருகில் இருந்தவரிடம் இவர் தான் "ரைட்டரா!" என்றார். கேட்கப்பட்டவர் ஆச்சரியமாய் பார்த்து, சில நொடிகள் ஸ்தம்பித்து, "ஆமாம்" என்றார்.

****
உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் வேறு ஒரு காட்சியை எதிர்பார்த்து போயிருந்தேன். சாரு ஒரு பெண்ணை சாட்டிங்கில் மிக கேவலமாக, பொறுக்கித்தனமாக நடந்த கொண்டது, ஆதாரபூர்வமாக பலரும் அறிந்த செய்தி. அந்த நிகழ்வுக்கு பிறகு, பொது மேடையில் இப்பொழுது தான் வருகிறார். ஆகையால், சில பெண்களோ அல்லது பெண்கள் அமைப்போ அல்லது சில சமூக அக்கறை கொண்ட மக்களோ வந்து, செய்த செயலுக்கு 'தகுந்த மரியாதை செலுத்துவார்கள்" என எதிர்பார்த்து போயிருந்தேன். குறைந்தபட்சம் சில செருப்புகளாவது பரிசாக தரப்படும்! என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். சாருவே சொல்வது போல, ஆயிரம் பேருக்குள் தான் வாசிக்கிறார்கள். அதைவிட முக்கிய விசயம். மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!

சாருவுக்கு தன் புத்தகம் 10 லட்சம் விற்க வேண்டாம், 1 லட்சம் கூட விற்கவில்லையே என தீராக்கவலை. எனக்கு பொறுக்கித்தனத்தை கண்டித்து, மரியாதை தரவில்லையே என்ற கவலை. அவரவர்களுக்கு அவரவர் கவலை. அடுத்த மேடையிலாவது 'தகுந்த மரியாதையை' தருவார்கள் என்ற நம்பிக்கையில், சோகமாய் வீட்டிற்கு நடையை கட்டினேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

****

December 1, 2011

மன்மோகனே ஒரு அந்திய முதலீடு தான்! - மதி கார்ட்டூன்!











மக்கள் எவ்வளவு தெரிவித்தாலும், கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தாலும், தன் எஜமானர்களான ஏகாதிபத்திய அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்ளுக்கு விசுவாசமாக கறாராக அமுல்படுத்துவதில், நமது பிரதமர் காரியகிறுக்கனாக இருக்கிறார்.

தினமணியில் இன்றைய மதியின் கார்ட்டூன் அருமை.