நேற்று பாலைவனச்சோலையில் ஒரு பாடல் கேட்டேன். ஐந்து இளைஞர்களும், கீதாவும் நினைவுக்கு வந்தார்கள். யூடியூப்பில் இருந்ததால் பார்த்தேன். இன்னும் படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பார்ப்பதற்கு சுவாரசியமாக தான் இருக்கிறது.
ஐந்து இளைஞர்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த குட்டிச்சுவரில் தான் அமர்ந்து பேசி, சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். மதிய வெயிலுக்கு பிறகு எதிர்த்த குட்டிச்சுவரில் மாறி அமர்கிறார்கள். ஒருவர் நாத்திகர். தொழிற்சாலையில் நடந்த தவறுகளை தட்டிக்கேட்டு, வழக்காடிக்கொண்டிருப்பவர். இன்னொருவர் பணக்கார வீட்டுப்பிள்ளை. அன்புக்காக ஏங்குகிற ஆள். இன்னொருவர் நடிப்பதற்கு வாய்ப்பு தேடுகிறவர். இன்னொருவர் படித்துவிட்டு ’வெற்றிகரமாக’ 100வது நேர்முக தேர்வு போகிறார். இன்னொருவர் அம்மா, அப்பா இல்லை. இரண்டு தங்கைகளோடு பொருளாதார நெருக்கடியில் வாழ்கிறவர்.
இளம்பெண்ணும், அவருடைய அப்பாவும் புதிதாக தெருவில் குடிவருகிறார்கள். அவளுக்கு இருக்கும் இதய நோய்க்காக மருத்துவம் பார்க்க இங்கு வந்திருக்கிறார்கள். இந்த ஐவரோடும் இயல்பாக பழக ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு வாழ்விலும் உரிமையுடன் தலையிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
*****
படம் வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பல்வேறு மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து இளைஞர்கள் ஒரு பெண் இயல்பாக பழகுவதை அவ்வளவு இயல்பாக எடுத்திருப்பார்கள். வழக்கமான சினிமா க்ளிசேக்கள் இல்லாத யதார்த்தப் படம் எனலாம். இந்தப் படம் 80களில் வெளிவந்த படங்களில் முக்கியப்படம். திரைப்படங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கவேண்டும். இந்த படம் அப்படி ஒரு படம். இதே ஆண்டில் இதே போல எதார்த்தமாக எடுக்கப்பட்டு இன்னொரு பிடித்தமான படம் ”கிளிஞ்சல்கள்”. இதன் இயக்குநர் துரை.
இராபார்ட் - இராஜசேகரன் இயக்குநர்கள் இருவரும் வடசென்னைக்காரர்கள் என்பது ஆச்சர்யம். இருவரும் திரைப்பட கல்லூரியில் பயின்று வெளிவந்த ஒளிப்பதிவுகாரர்கள். இருவரும் இணைந்து சில படங்களை இயக்கியிருக்கிறார்கள். பிசிஸ்ரீராம் போன்றவர்களுக்கெல்லாம் இராபார்ட் குரு என்கிறார்கள். இவர்களின் படங்களில், இந்த படமும், ”மனசுக்குள் மத்தாப்பூ”, ”பறவைகள் பலவிதம்” படமும் பிடித்தமானவை.
சந்திரசேகர், சுஹாசினி, ராஜீவ், ஜனகராஜ், தியாகு என படத்தில் நடித்த அத்தனை பேருமே அதே காலக்கட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் அறிமுகமாகி இருந்தவர்கள் தான். அனைவரிடமே ஒரு அப்பாவித்தனம் (innocence) இருப்பது அழகு.
படத்தின் அத்தனைப் பாடல்களுமே அருமை. வழக்கம்போல இளையராஜா தான் என நினைத்துவிட்டேன். தேடிப்பார்த்தால் சங்கர் – கணேஷ் இசையமைத்திருக்கிறார்கள்.
2009ல் பாலைவனச்சோலையை திரும்பவும் தமிழில் எடுத்தார்கள். எடுபடவில்லை.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment