ஒரு உறவின் மேல்
கத்திமுனையில் எப்படி நடப்பதென
அஞ்சுகிறவரா நீங்கள்?
வாருங்கள்
நான் உங்களுக்கு
கத்திமுனையில் நடக்க
கற்றுத்தருகிறேன்
இனியதோ கசப்பானதோ
பழையதெதையும்
நினைவுபடுத்தக்கூடாது
பழைய உரிமைகளை
புதிய காலத்தில்
புதுப்பிக்க முயலக்கூடாது
நமது எல்லா சாகசங்களும்
ஒருவருக்கொருவர்
நன்கு தெரியும் என்பதால்
அவற்றை மீண்டும்
நிகழ்த்தகூடாது
ஒருமை பன்மை அழைப்புகளை
அனாவசியமாய்
குழப்பிக்கொள்ளக்கூடாது
அந்தரங்கமான ஒரு சொல்
அல்லது ஒரு ரகசிய அறையை
திறப்பபதற்கான சொல்
அதை ஒருபோதும்
பயன்படுத்தலாகாது
சம்பிரதாயமான
அல்லது நம்மைப்பற்றியல்லாத
எவ்வளவோ இருக்கின்றன
இந்த உலகில் உரையாட
அதைத்தான் நாம் பேசவேண்டும்
சந்திப்புகள் உரையாடல்கள்
எவ்வளவுகெவ்வளவு
குறைவான நேரத்தில் இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு நல்லது
பெரும்பாலும் பரிசுகளை
தவிர்ப்பது நல்லது
அவை உள்ளூர விரும்பப்படுவதில்லை
கடந்த காலம்போலவே
எதிர்காலம் பற்றியும் பேசாமலிப்பது நல்லது
மாறாக
நாம் அருந்திக்கொண்டிருக்கும்
காஃபியைப்பற்றிப் பேசலாம்
அல்லது புதிதாக வாங்கிய ஷீவின் விலைபற்றி
ஏன் ரூமியைப்பற்றிக்கூட பேசலாம்
நாம் ஏற்கனவே
கத்திமுனையில் நடந்துகொண்டிருப்பதால்
எதைப்பற்றியும்
கூர்மையான அபிப்ராயங்களை
தவிர்ப்பது நல்லது
எதைப்பற்றிப் பேசினாலும்
அதை மழுங்கடிப்பது நல்லது
அதை நீர்த்துபோகச் செய்வது நல்லது
எவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும்
நாம் நடப்பது கத்திமுனையில் அல்லவா
ஒரு எதிர்பாராத தருணத்தில்
குறுவாளின் பிடி நழுவி
நம் நெஞ்சில் இறங்கும்
நாம் ரத்தம் சிந்துவதைக் காட்டிக்கொள்ளக்கூடாது
வலி பொறுக்காமல்
கண்ணில் தளும்புவதை
ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது
ஒரு உறவில் கத்தி முனையில் நடக்கும்போது
அந்தப்பாதை
அவ்வளவு நீளமாக இருக்கிறது
ஓரடி எடுத்து வைப்பதற்குள்
ஒரு பருவம் போய்விடுகிறது
ஒரு வயது போய்விடுகிறது
24.6.2021
இரவு 10.52
மனுஷ்ய புத்திரன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment