> குருத்து: நாசர் பேட்டியிலிருந்து… சில துளிகள்

July 19, 2021

நாசர் பேட்டியிலிருந்து… சில துளிகள்

 


“எங்கப்பா சிவாஜி ரசிகர். என்னை நடிகனாக்க விரட்டிக்கொண்டே இருந்தார். மாதச் சம்பளத்தில் ஒரு நிம்மதியான வேலை தான் என்னுடைய பெருவிருப்பமாக இருந்தது.”


”தேவர் மகனில் முக்கியமான பஞ்சாயத்து காட்சி. சிவாஜியை நான் திட்டவேண்டும். இரண்டு டேக். மூன்று டேக் என போய்க்கொண்டு இருக்கிறது. பதட்டமாகிறேன். சிவாஜி எழுந்து வந்து “எத்தனை பேருக்கு அப்பனை திட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். உனக்கு கிடைச்சிருக்கு. நல்லாத் திட்டு!” என தோளில் தட்டிக்கொடுத்து என்னை இலகுவாக்கினார். மூத்த நடிகர்கள் இளைய நடிகர்களுக்கு நடிப்பு சொல்லித்தருவதை விட, முக்கியமானது இப்படி இலகுவாக்குவது!”

”நான் இதுவரை நடித்த 600 சிறிய, பெரிய படங்கள் என அனைத்திற்குமே ஒரு விதமான தரமான நடிப்பைத்தான் தருகிறேன். குருதிப்புனல் போன்ற சில படங்கள் சிறப்பாக நடிப்பதற்கு காரணம் முதலிலேயே கதை, திரைக்கதை, வசனத்தை கையில் தந்துவிடுவார்கள். அதைப் பற்றி நிறைய விவாதிப்பார்கள். ஆகையால், கதையைப் புரிந்துகொண்டு, கதாப்பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு நடிப்பதால் இன்னும் மெருகேறுகிறது. ஒரு சில படங்களில் அப்பொழுது தான் காரில் இறங்கி உள்ளே போயிருப்பேன். ஒரு முக்கிய காட்சியில் நடிக்கவேண்டும் என அப்பொழுது தான் விளக்குவார்கள். அதையும் மறுப்பதில்லை. நடிக்கத்தான் செய்கிறேன். அதற்குரிய விளைவு தான் இருக்கும்.”

“பாகுபலிக்காக அரங்கில் எப்பொழுதும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இயக்குநர் இராஜமெளலியின் குடும்ப பெண்கள் மூவரின் திட்டமிடல், செயலாக்கம் எல்லாமே மிகவும் மெச்சத்தக்கது!”

"துவக்க காலத்தில் இயக்குநர் பாலச்சந்தரின் ஒரு படம். ஒருநாள் அரைமணி நேரம் தாமதமாக சென்றேன். "அரை மணி நேரம் தாமதம் என்பது உன்னுடைய அரைமணி நேரம் மட்டுமல்ல! இங்கு வேலை செய்யக்கூடிய அத்தனை பேரின் அரைமணி நேரம் என கடிந்துகொண்டார். அவர் சொன்னது சரியென உணர்ந்தேன். அதற்கு பிறகு வாழ்நாளில் எந்த நாளும் தாமதமாக சென்றதில்லை."

“என் வளர்ச்சியில் என் துணைவியாரின் பங்கு மிக அதிகம். சொந்தப் படம் எடுத்து நட்டமாகி, எல்லாவற்றையும் இழந்து… இன்னும் செலுத்தவேண்டிய கடன் இருக்கும் பொழுது எனக்கு “ரெட் கார்டு” என்றார்கள். ”நீங்கள் ரெட்கார்டு போட்டுவிட்டால்.. என் கணவர் வேறு வேலை பார்க்க போய்விடுவார். நானும் டியூசன் எடுத்து சமாளிப்பேன். ஆனால், கடனை செலுத்த வாய்ப்பே இருக்காது. ஆகையால், அவர் நடிக்க அனுமதியுங்கள். கடனை செலுத்திவிடுகிறோம்” என்ற வாதத்தை ஏற்று ரெட்கார்டு போடவில்லை.”

”என் தொழில் சார்ந்த அத்தனை தொடர்புகளிடமும் தொடர்ச்சியாக பேசி, உறவை பேணுவது என்னுடைய துணைவியார் தான். நான் அதில் தொடர்ச்சி கொடுப்பதில்லை. என் தொழில் ரீதியான கால்ஷீட் உட்பட அத்தனையையும் பார்ப்பது அவர் தான்!”

“இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில்… பக்கத்து நாட்டு அரசன் போர் தொடுத்து வாயிலில் காத்திருக்கும் பொழுது… வடிவேல் அந்த வாயிலின் கேட்டில் உள்ளதை சுற்றுவது எல்லாம் சார்லி சாப்ளினை நினைவுப்படுத்தினார். அதை உடனே தெரியப்படுத்தி பாராட்டினேன். நேரில் வந்துவிட்டார். வடிவேலுவைப் பற்றி கமலும் பக்கம் பக்கமாக பேசுவார். வடிவேலிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், அவர் எல்லா கதாப்பாத்திரங்களையும் தன்னளவில் ரசித்து செய்கிறார். நடிப்பில் அது மிகவும் முக்கியமானது.”

“சந்திரமுகியில் கதைப்படி பிரபு தன் நண்பன் ரஜினியை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லவேண்டும். அங்கு வந்து, பிரபு “சூப்பர் ஸ்டாரை எல்லாம் நான் அப்படி சொல்லமுடியாது” என மறுத்துவிட்டார். கையை பிசைந்துகொண்டிருந்த இயக்குநர் வாசுவிடம், நான் செய்கிறேன் என முன்வந்தேன்.”

"எந்த நடிகரின் நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். ஒருவரின் நடிப்பு நன்றாக இருப்பது என்பது அது ஒரு திரைப்படமாக பார்க்கும்பொழுது தான் தெரியும். ஒருவர் கோபமாக முறைக்கும் பொழுது அடுத்த காட்சியாக‌ காண்பிக்கப்படும் நடிகரின் முகபாவம்தான் அதை முடிவு செய்கிறது! நாம் நன்றாக செய்திருக்கிறோம் என நினைப்போம். ஆனால் திரையில் சாதாரணமாக கடந்து செல்லும்! சில காட்சிகள் சாதாரணம் என நினைப்போம். மிகச்சிறந்த காட்சியாக திரையில் விரியும்!"

- டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து….

0 பின்னூட்டங்கள்: