சென்னை நகரத்தில் பொதுவாழ்வில் உள்ள ஒருவரை கடத்தி தூக்கில் தொங்கவிட்டு, தலையில் ஒரு விலங்கு முகமூடி அணிவிக்கப்படுகிறது. செத்தப்பிறகு துப்பாக்கியிலும் சுடப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னொரு துறை சம்பந்தப்பட்ட யூனிபார்ம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கொலைக்கான க்ளூ என புரிந்துகொள்ளலாம்.
நாயகன் டி.எஸ்பியாக இருக்கிறார். அவருடன் இரண்டு போலீசு அதிகாரிகள் துணைக்கு இருக்கிறார்கள். அந்த கொலை, அதே வகைப்பட்ட தொடர் கொலைகளாகி என தொடர்கிறது. விசாரணை துவங்கி, மெல்ல மெல்ல நெருங்குகிறார்கள். அடுத்த இலக்கு நாயகனே என கண்டுபிடிக்கிறார்கள்.
இதற்கிடையில், நாயகனுக்கு பார்க்கின்சன் நோய் துவக்கநிலையில் தாக்குகிறது. இதனால் வலது கையின் இயக்கம் குறைகிறது. திடீரென நடுக்கம் வந்து துப்பாக்கி பிடித்து சுடமுடியாமல் கூட போகிறது. அவரை துறை சார்ந்த உயரதிகாரிகள் ஒதுங்கியிருக்க சொல்கிறார்கள். கொலையாளியோ ”முடிந்தால் பிடித்துப்பார்” என சவால் விடுவதாக கருதுகிறார்.
கொலையாளியை பிடித்தார்களா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
****
உ.பி நொய்டாவில் நடந்த ஆருஷி கொலை வழக்கை படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த குடும்பம் இந்து குடும்பம் தான். படத்தில் ஏன் கிறிஸ்துவ குடும்பமாக மாற்றி காண்பித்திருக்கிறார்கள். ஏன் மாற்றினார்கள்? கொலையாளி ”கிறிஸ்டோபர்” ஏன்? இந்து குடும்பமாகவே காண்பித்திருக்கலாமே!
துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அர்ஜூனுக்கு இது 150வது படம் என்பதால், அவருக்கு பில்டப் கொடுத்து துவக்கத்திலிருந்து இறுதிவரை காட்சி வைத்திருக்கிறார்கள். இதனால், அவருடைய உதவி அதிகாரிகளான பிரசன்னாவையும், வரலட்சுமியையும் டம்மி செய்திருக்கிறார்கள். அதனால் இயல்பாக இல்லாமல் செயற்கைத்தனம் வந்துவிடுகிறது. இந்த நிலையில் பார்க்கின்சன் நோய் தாக்குவதாக எப்படி அர்ஜூனை ஏற்க வைத்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நாயகனிடம் மேலதிகாரி சமூகத்தில் ”இவர்கள்” எல்லாம் நிறைய குற்றங்கள் செய்து மிக அபாயமாக இருக்கிறார்கள் என ‘சமூக அக்கறையுடன்” பேசுகிறார். என்கவுண்டரில் போட்டால், மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்கும். ஆகையால், இந்த கொலைகளை சைக்கோ கொலையாளியின் கணக்கில் சேர்த்துவிடலாம் என படத்தை சுபமாக முடிக்கிறார்கள். இது தான் ‘கிரிமினல்’ போலீஸ் டச்!
இந்த படத்தில் அர்ஜூன் நடிக்கும் பொழுது தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என ஜோடியாக நடித்த சுருதி ”மீ டூ” புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அர்ஜூன் மறுத்தார். புகார் கூட பதியப்பட்டது. அதற்கு பிறகு அந்த நாயகிக்கு யாரும் படத்தில் வாய்ப்பு தரவில்லை என புலம்பினார். சோகம்.
யூடியூப்பில் இலவசமாக கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment