நாயகன் முன்னாள் இராணுவத்தைச் சார்ந்தவன். முக்கிய பொறுப்பில் இருந்தவன். கடந்த கால வாழ்க்கை நினைவுகள் அவனை இறுக்கமானவனாய் மாற்றி வைத்திருக்கின்றன.
மெக்சிகோவில் குழந்தைகள் கடத்தல் உச்சத்தில் இருக்கிறது. அங்கு ஒரு பணக்காரனின் 9வயது பெண் குழந்தையை பாதுகாக்க நாயகனின் நண்பர் போகச் சொல்கிறார். முதலில் மறுக்கிறான். பிறகு ஏற்கிறான்.
மெக்சிகோ போகிறான். பணக்காரன், அவனின் மனைவி, அந்த சுட்டிக்குழந்தை வரவேற்கிறார்கள். பள்ளி, பியானோ வகுப்பு, நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்வது நாயகனின் பணி. அந்த குட்டிப்பெண் அவனிடம் இயல்பாக பேச, பழக முயல்கிறாள். அவனோ ”நான் பாடிகார்ட் வேலையை தான் பார்க்க வந்திருக்கிறேன். நட்பாக பழகுவதற்கு இல்லை” என்கிறான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அந்த குழந்தையின் அன்பால் அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. நீச்சல் பயிற்சியில் அவளிடம் உள்ள குறையை பயிற்சி கொடுத்து சரி செய்கிறான். அவள் முதலிடத்தில் வருகிறாள்.
இதற்கிடையில் அந்த குழந்தையையும் கடத்த வருகிறார்கள். உள்ளூர் போலீசு இருவர் கடத்தலுக்கு உதவுகிறார்கள். அங்கு நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் நாயகன் போலீசு இருவரையும், கடத்தல்காரர்கள் இருவரையும் கொன்றுவிடுகிறான். இவனும் கடுமையாக சுடப்படுகிறான்.
இவன் மருத்துவமனையில் இருக்க… குழந்தை வேண்டுமென்றால், 10 மில்லியன் டாலர் பணம் கேட்கிறார்கள். அதை கொடுக்கும் பொழுது அங்கு கலாட்டாவாகிவிடுகிறது. பிறகு குழந்தையையும் கொன்றுவிடுகிறார்கள்.
மருத்துவமனையில் கொஞ்சம் உடல் தேறியதும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை விடக்கூடாது என கிளம்புகிறான்.
பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளுடன், சில எதிர்பாராத திருப்பங்களுடனும் முக்கால்வாசி கதையில் சொல்கிறார்கள்.
******
1980 ல் வந்த நாவலை ஒட்டி எடுத்திருக்கிறார்கள்.. டென்சில் வாசிங்டன் பட வரிசையில் இன்னொரு ஆக்சன் படம். உணர்வுபூர்வமாகவும் இருந்தது. நாயகனும், அந்த குழந்தையும், அவளின் அம்மாவும்
அருமையாக
செய்திருக்கிறார்கள்.உள்ளூர் போலீசு, சிறப்பு உயரதிகாரி கடத்தல்காரர்களுக்கு உதவியில்லாமல் இத்தனை குழந்தைகளை கடத்த வாய்ப்பில்லை. எல்லோரும் கூட்டுக்கொள்ளை. நாயகன் ஒவ்வொரு நபராக பிடித்து பிடித்து விசாரிக்கும் பொழுது, பேச்சின் இடையில் “We are professional” என்பார்கள். கேட்கும் பொழுது நமக்கே எரியும். நாயகன் செம காண்டாவான்.
இந்தப் படத்தை இந்தியில் அமிதாப் நடித்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் அர்ஜூன் நடித்து ”ஆணை” என எடுத்திருக்கிறார்கள். யூடியூப்பில் தேடிப்பார்த்தால், ”ஆணை” படத்தை 'Order" என தலைப்பில் ஆங்கிலத்தில் டப் செய்திருக்கிறார்கள். ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. உலகம் உருண்டை என்பதை நிரூபிக்கிறார்கள். Man of Fire பார்ப்பதா? Order பார்ப்பதா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். 

பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment