கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். 49ஆயிரத்திற்கும் மேலாகவும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உலகின் பல மொழிகள் சார்ந்த படங்கள் குறித்த அறிமுகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் என எப்பொழுதுமே களைகட்டும்.
எனக்கு ஏதாவது படம் குறித்த விவரம் தேவை எனில், இந்த குழுவில் தான் தேடுவேன். பெரும்பாலும் கிடைத்துவிடும். நான்கு ஆண்டுகளாக உற்சாகமாக இயங்கி வந்த குழு ஒரு வாரத்திற்கு முன்பு தேடும் பொழுது காணவில்லை. நம்மை பிளாக் செய்துவிட்டார்களோ என எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.
சமீபத்தில் அப்படி ஒரு சர்ச்சைப் பதிவோ, யார் பதிவிலும் போய் சண்டையும் போடவில்லையே! பிறகு எப்படி? அந்த குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷ் ராமிடம் விவரம் கேட்டால், முகநூல் குழுவை "Disable" செய்துவிட்டதாக தகவல் சொன்னார். காரணம் தெரியவில்லை என்றார்.
இது என்ன அநியாயம்? நாலைந்து வருடங்கள் இயங்கிய குழு. எத்தனை ஆயிரம் பதிவுகள், அதற்கு பின்னால் எவ்வளவு பேருடைய உழைப்பு? எல்லாம் ஒருநாள் விடியும் பொழுது காணாமல் போனால் என்னவாவது?
அந்த குழுவின் நிர்வாகிகளை நான் கவனித்த வரையில், ஒரு சித்தாந்தம் சார்ந்தவர்களோ அல்லது ஒரு அமைப்பைச் சார்ந்தவர்களே கிடையாது. நிர்வாகிகள் எல்லோரும் தனிநபர்கள் தான். குழுவின் விதிமுறைகளை கறாராக கடைப்பிடிப்பவர்கள் தான்.
உதாரணமாய் : ஒரு பதிவில் ஓரிடத்தில் தமிழ் ராக்கர்ஸை கண்டித்து எழுதியிருந்தேன். ”தமிழ் ராக்கர்ஸ்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாலேயே என்னை தடை செய்துவிட்டர்கள். பிறகு நிர்வாகிகளிடம் பேசி, தடையை எடுத்துவிட வேண்டியதாகிவிட்டது.
இப்படி விதிமுறைகளை கறாராக கடைப்பிடித்த குழுவை, முகநூல் தடை செய்ய எடுத்த முடிவு அராஜகமானது என்பேன். எந்தவித முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் இல்லாமல் செயலிழக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது. ஜனநாயகத்திற்கு புறம்பானது.
இதுப் பற்றி எத்தனை பதிவர்கள் கண்டித்தார்கள் என தெரியவில்லை. என்னளவில் இதை கண்டிக்கவேண்டும். அது அவசியம் என்பதால் பதிகிறேன்.
அந்த குழுவை மீட்பதற்கு போராடி, இனி மீட்க முடியாது என முடிவு செய்து, உடனே அதே பெயரிலேயே 2.0 என சேர்த்து இப்பொழுது குழுவை துவங்கிவிட்டார்கள்.
நானும் கூட மீட்பதற்கு ஒரு மனுவை முகநூலுக்கு அனுப்பிவைத்தேன். புதிய குழுவில் நானும் உறுப்பினராகிவிட்டேன். திரைப்படம் சார்ந்த ஆர்வமுள்ளவர்களும் இணையுங்கள் என அழைக்கிறேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment