> குருத்து: "சாப்பாட்டுக்கு நம்மளை நம்பி தான் இருக்கீங்க! லீவு போட்டா கஷ்டப்படுவீங்களே!"

September 11, 2022

"சாப்பாட்டுக்கு நம்மளை நம்பி தான் இருக்கீங்க! லீவு போட்டா கஷ்டப்படுவீங்களே!"


நீயா நானாவில் சமீபத்தில் ..வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், வேலை தரும் ஆட்கள் என விவாதித்தார்கள்.


இது தொடர்பாக அலுவலுகத்தில் ஒருவருடன் பேச்சு வந்தது.

அவர் வீட்டில் புதிதாக வேலைக்கு ஒருவர் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டு இருக்கிறார்.

கணவர் வீட்டு வேலை அம்மாவிற்கு வாரம் ஒருநாள் விடுமுறை தரவேண்டும் என்கிறார். துணைவியாரோ அப்படி அவர் கேட்டால் கொடுக்கலாம். நாமாக சொல்லவேண்டாம் என்கிறார்.

அது சரியில்லை. அவர் கேட்காமல் இருப்பதற்காக நாம் கொடுக்காமல் இருப்பது சரியில்லை. அவங்களுக்கு குடும்பம் இருக்கு. அவங்களுக்கு ஓய்வு தேவை என சொன்னதும்... "அவங்க வராத ஒரு நாள் நீங்க சமைக்கிறீங்களா?" என சொல்லி வாயடைக்க பார்த்திருக்கிறார்.

"ஞாயிறு விடுமுறை வேண்டாம் என்றால்... செவ்வாயோ, வியாழனோ வார விடுமுறை எடுத்துக்கொள்ள சொல்லலாம். கடந்தமுறை வேலை செய்த அம்மா ஊருக்கு செல்லும் பொழுது மொத்தமாக எடுப்பார்களே! அப்படியாவது எடுத்துக்கொள்ளட்டும்" என சொன்ன பொழுது யோசித்து சொல்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் நீயா நானாவில் நடந்த விவாதம் தொடர்பாக தனிநபர் எழுதியவைகளை எல்லாம் எடுத்து தன் துணைவியாருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தன் கணவர் விடமாட்டார் என நினைத்தாரோ என்னவோ, தொடர்ச்சியாக அனுப்பி வைத்த பதிவுகள் வேலை செய்ததோ என்னவோ... விடுமுறை தர ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நேற்று காலையில் அந்த அம்மாவிடம் "வாரம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்" என சொன்னதற்கு...

"நான் வேலை செய்ற எந்த வீட்டிலும் வார விடுமுறை எடுப்பதில்லை. சாப்பாட்டுக்கு நம்மளை நம்பி தான் இருக்காங்க!விடுமுறை எடுத்தா கஷ்டப்படுவங்க! ஏழு நாளும் வர்றேன். ஊருக்கு போகும் பொழுது மட்டும் இரண்டு அல்லது மூன்று நாள் தேவைப்படும். அப்ப எடுத்துக்கிறேன்" என்றாராம்.

"எளிய மக்கள் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறார்கள். நாம் தாம் அல்பத்தனமா நடந்துகிறோம்" என்றார்.

0 பின்னூட்டங்கள்: