> குருத்து: Ustad Hotel (2012)

September 21, 2022

Ustad Hotel (2012)


“வயித்தை யாரு வேணா நிறைக்கலாம்!

அன்போடு சமைத்தால் தான் மனசையும் நிறைக்கமுடியும்”
***

ஒரு ”ஆண் வாரிசு”க்காக அடுத்தடுத்து நான்கு பெண் குழந்தைகளை பெறுகிறார். ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய் அதனாலேயே மரிக்கிறார். குடும்பம் மொத்தமும் கேரளாவில் இருந்து துபாய்க்கு நகர்கிறது.

நான்கு சகோதரிகளுடன் சமையல்கட்டில் வளர்ந்ததாலேயே சமையல் மீது அவனுக்கு ஆர்வம் வந்துவிடுகிறது. பிள்ளை எம்பிஏ படித்து அப்பா ஐந்து நட்சத்திர விடுதி நடத்தவேண்டும் என கனவு காண்க, அவன் வெளிநாடு போய் சமையல் கலை கற்றுவருகிறான். அங்கேயே ஒரு காதலியும் இருக்கிறாள்.

உண்மை தெரியும் பொழுது அப்பா பெருங்கோபம் கொள்கிறார். தற்காலிகமாக தன் அப்பா வழி தாத்தாவிடம் கேரளாவிற்கு வந்து சேர்கிறான். சில குடும்பங்களின் துணையுடன், கோழிக்கோடு கடற்கரையில் மலபார் பிரியாணி கடையை, பெரும் லாப நோக்குடன் இல்லாமல் பெரும் ஈடுபாட்டுடன் நடத்துகிறார். மெல்ல மெல்ல தாத்தாவிடம் நெருங்குகிறான். அருகில் உள்ள நட்சத்திர விடுதி அந்த உணவகம் இருக்கும் இடத்தை விழுங்க பார்க்கிறது.

நாயகன் தன் தாத்தாவுடன் அந்த பிரச்சனையை எப்படி எதிர்கொண்டான் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

படம் மக்களுக்கு பிடித்து போனதால், பெரிய வெற்றி பெற்றது. மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. ”பாப்புலர் படம்” என்ற பிரிவில் படத்திற்கும், ”பெங்களூர் டேஸ்” இயக்கிய அஞ்சலிமேனன் கதை, திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றார். அன்வர் ரசீத் இயக்கியிருக்கிறார். துல்கர் சல்மானின் இரண்டாவது படம் என விக்கி சொல்கிறது. அந்த பாத்திரத்தில் இயல்பாக பொருந்திப்போகிறார். ஜோடியாக வரும் நித்யா சின்ன சின்ன ரியாக்சனில் அசத்துகிறார். தாத்தாவாக வரும் திலகன்
அருமையாக
பொருந்தியிருப்பார். அவருக்கும் ஒரு தேசிய விருது கிடைத்தது.

’யூத்’ படத்தில் ”உலகத்தில் மிகச்சிறந்த குக் யார்?” என ஒரு இன்டர்வியூவில் விஜயிடம் கேட்கும் பொழுது, ”அன்போடு தன் பிள்ளைகளுக்கு சமைக்கிற அம்மா தான்” என பதில் சொல்வார். அது தான் இந்தப் படத்தின் ஒன் லைன். நாயகனிடம் ஒரு கடிதம் தந்து ”அவனுக்கு சமைக்க கத்து கொடுத்திட்டேன். எதுக்காக சமைக்கனும்னு நீ கத்துக்கொடு!’ தனது நண்பரிடம் மதுரைக்கு அனுப்பிவைப்பார். ஒரு பக்கம் வசதி இருப்பதால், ஒவ்வொருநாளும் விதவிதமாய் சாப்பிடுகிற ஆட்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு பெருங்கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் அடுத்த வேளைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். யாருக்கு சேவை செய்யவேண்டும் என முடிவு செய்யும் கட்டம் இது. நாயகன் அதை சரியாக புரிந்துகொண்டு முடிவெடுப்பான். படத்தில் நேரடியாக எங்கும் ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்காது. பஞ்ச் டயலாக் கிடையாது. அது தான் படத்தின் வெற்றி.

படம் எந்த ஓடிடியிலும் இப்பொழுது இல்லை. படம் தெலுங்கிலும், தமிழிலும் டப் செய்திருக்கிறார்கள். யூடியூப்பில் தமிழில் கிடைக்கிறது. கன்னடத்தில் திலகன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மீண்டும் எடுத்து இருக்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: