> குருத்து: Delhi crime –சீசன் 2 சில கொலைகளும், விசாரணையும்

September 13, 2022

Delhi crime –சீசன் 2 சில கொலைகளும், விசாரணையும்


தலைநகர் தொகுப்பு வீடுகளில் (Gated Community) வசதியான வயதான தம்பதிகள் வீடாக பார்த்து, உள்ளே புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். சுத்தியலால் அடித்தே கொடூரமாக கொலையும் செய்கிறார்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால், தலைநகர் பதட்டமாகிறது.


இந்த வழக்கு DCP வர்த்திகா தன் குழுவுடன் விசாரணையை துவங்குகிறார். டவுசர் அணிந்து வருவது, சுத்தியல், கோடாரி போன்ற ஆயுதங்களை கொலை செய்ய பயன்படுத்துவது; தன் உடலில் ஆயிலை தடவிக்கொண்டு வருவது, – இவைகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா பனியன் ஆட்கள் தான் இப்படி செய்வார்கள். ஆனால் அவர்கள் எந்த தடயத்தையும் விட்டுவிட்டு செல்வதில்லை. இவர்கள் சிசிடிவிக்களை சேதப்படுத்தவில்லை.

தில்லியில் வசிக்கும் கச்சா பனியன் ஆட்களை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு விசாரணையை துவக்குகிறார்கள். அதில் இருவர் கொலை நடந்த பகுதியில் நோட்டம் விட்டது சிசிடி மூலம் தெரியவருகிறது. அவர்களும் நீதிபதிகளிடம் அழைத்து செல்லும் பொழுது தப்பிவிடுகிறார்கள். கிடைத்தவர்களையும் தில்லி போலீசு கோட்டை விட்டுவிட்டது என கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

ஒரு சமயத்தில் திடீரென வழக்கில் ஒரு ட்விஸ்ட் வருகிறது. பிறகு கொலையாளிகளை பிடித்தார்களா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
**

முதல் சீசனில் தில்லியில் முக்கிய வழக்கான நிர்பயா வழக்கை எடுத்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த சீசன் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த கொலை வழக்கை கையில் எடுத்துவிட்டார்கள்.

இந்த கொலை வழக்கில் கச்சா பனியன் ஆட்கள் இருக்கிறார்கள் என தெரிந்ததுமே, பழைய வழக்கை விசாரித்த ஒரு இன்ஸ்பெக்டரை அழைத்து வருகிறார்கள். அந்த ஆள் பயங்கர லஞ்ச பேர்வழி. தன் வீட்டை பெரிய அரண்மனையை போல கட்டி வைத்திருக்கிறான். அந்த பழங்குடி சமூகத்தில் இருக்கும் சிறியவர்கள் என எல்லோரையும் பிறந்ததில் இருந்தே குற்றவாளி என வெறுப்பை கக்குகிறான். எல்லோரையும் ஸ்டேசனுக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படி அழைத்து சென்ற செய்தி ஊடகத்தின் மூலம் மக்களுக்கு தெரிந்து, அந்த பழங்குடி சமூகத்து ஆட்கள் எல்லாம் எங்கெல்லாம் வேலை செய்கிறார்களோ அங்கெல்லாம் வேலையில் இருந்து தூக்கப்படுகிறார்கள். ரூ.15000 கொடுத்தால், சந்தேக பட்டியலில் இருந்து தூக்கிவிடுகிறேன் என சொல்லி, அந்த மக்களிடம் இருந்து பணத்தை கறக்கிறான். DCPக்கு தெரியவந்து, அந்த ஆளை துரத்திவிடுகிறார். போலீசின் அதிகாரம் எப்படியெல்லாம் மக்களை அலைக்கழிக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

முதல் சீசனைப் போலவே, இந்த் சீரிசும் போலீசின் பார்வையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. போலீசின் குடும்ப பிரச்சனைகள், தில்லியில் போலீஸ் எண்ணிக்கை குறைபாடு என ஆங்காங்கே தூவி சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற கற்பனை படங்களை விட, நடந்த உண்மைகளின் அடிப்படையில் இது கவனம் பெறுகிறது. கொலை, விசாரணை படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள். நெட் பிளிக்சில் நல்ல தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

சீசன் 2 – 5 அத்தியாயங்கள்
ஒரு எபிசோட் 35 லிருந்து 55 நிமிடங்களை வரை எடுத்திருக்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: