> குருத்து: அப்பளத்துக்கு போரா? :)

September 7, 2022

அப்பளத்துக்கு போரா? :)


நமது வீட்டு விசேசங்களுக்கு எத்தனை தலைகள் சாப்பிடவரும் என்பதை எப்பொழுதுமே துல்லியமாக கணக்கிட முடியாது. ஐநூறு பத்திரிக்கை கொடுப்போம். 700 பேருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என குத்துமதிப்பாகத்தான் பல வீடுகளில் திட்டமிடுகிறார்கள்.


நம் வீட்டில் விசேச நாளன்று முகூர்த்த நாளாக இருந்தால், ஊரில் நிறைய விசேசங்கள் இருக்கும். ஆகையால் தலைகள் பிரிந்து போய், நமது விசேசத்தில் உணவு நிறைய மிஞ்சும்.

அதனால் தான், ”பந்திக்கு முந்து” என விளையாட்டாக சொல்வார்கள். முதல் பந்தியில் வைக்கப்படும் உணவு வகைகள் பந்திகள் அதிகரிக்க அதிகரிக்க குறைந்துகொண்டே போகும். சாம்பாரில் தண்ணீர் கலப்பார்கள். கூட்டத்தை சமாளிக்க அவசரம் அவசரமாய் சமைக்க துவங்குவார்கள்.

பணக்கார வீடுகளில் இந்த பிரச்சனை பெரும்பாலும் இருக்காது. கூடுதலாக சமைத்துவிடுவார்கள். ஆகையால் பெரும்பாலும் மிஞ்சும் என்றே நினைக்கிறேன். விதிவிலக்குகளும் இருக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றால், விசேசம் என்றால், பத்திரிக்கைகள் அனுப்பி, எத்தனை பேர் வருகிறார்கள் என உறுதி செய்துகொண்டு, அதற்கான ஏற்பாடுகளை பக்காவாக ஏற்பாடுச் செய்துகொண்டு தான் விசேசங்கள் நடத்துகிறார்கள். ”இன்னைக்கு நம்ம பிரண்ட் கல்யாணம். வாங்க போலாம்” என திடீரென நம் நண்பர்கள் நாலுபேரை அழைத்துக்கொண்டு போய்விடமுடியாது. உடல்நல பிரச்சனை என வேறு வேறு காரணங்களால் எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகமாக வாய்ப்பில்லை.

இப்படி புரிந்துகொண்டதால், எப்பொழுதும் பந்தியில் எல்லோருக்கும் என்னவோ, அதை மட்டும் வாங்கி சாப்பிட்டு வந்துவிடுவது என பல ஆண்டுகள் வழக்கம். நமது செல்வாக்கை பயன்படுத்த முடிந்தாலும், பயன்படுத்துவதில்லை.

கூடுதலாக எடுக்கப்படும் ஒவ்வொரு அப்பளமும், அது இன்னொருவருடையது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கும். இந்த பொதுவிதியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.

பொதுவிதியை மீறினால் கலாட்டாக்களைத் தவிர்க்கமுடியாது தான்! :)

0 பின்னூட்டங்கள்: