கடந்த ஆண்டு இதே நாளில் தான் அத்தையை இழந்து நின்றோம். கொரானாவில் உலகமே சிக்கி, முதல் அலை, இரண்டாம் அலை என தீவிரமாய் இருந்த காலத்தில் எல்லாம் விசேசங்களுக்கோ, பொது இடங்களுக்கோ எங்கும் போகாமல், பாதுகாப்பாய் தான் அத்தையும், மாமாவும் வீட்டில் இருந்தார்கள்.
எங்கள் பகுதியில் எங்குமே பாசிட்டிவ் கேஸ்கள் இல்லாதிருந்த காலம். அத்தைக்கு பாதுகாப்பாக தடுப்பூசி போட்டுவிடலாம் என லேப்பில் சில அடிப்படை சோதனைகளை செய்தோம். அந்த சமயத்தில் தான் கொரானா தொற்றிக்கொண்டுவிட்டது. சில அறிகுறிகள் தெரிய, சோதிக்கும் பொழுது, பாசிட்டிவ் என வந்த பொழுது அதிர்ந்து போனோம். மருத்துவமனையில் நல்ல நிலையில் தான் வீட்டிலிருந்து கிளம்பினார்.
இரண்டு, மூன்று நாட்களிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு கருவிகளின் உதவியுடன் தான் சுவாசித்தார். கடுமையான போராட்டம் அது. அவரை அந்த நிலையில் பார்க்கும் பொழுது கலக்கம் தொற்றிக்கொள்ளும். அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு நல்லபடியாய் வந்துவிடுவார் என அனைவரும் நம்பினோம். அவருக்கும் வாழவேண்டும் எண்ணம் அதிகம் இருந்தது. அவருக்கு இரண்டு பெண்கள். ஒரு பையன் என மூன்று பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் திருமண வயதிலும் இருக்கிறார்கள். பேரன், பேத்தியின் திருமணங்களை பார்க்கவேண்டும் என பெருவிருப்பம் இருந்தது. அவரே அதை சொல்லியும் இருக்கிறார். 33ம் நாட்கள். எவ்வளவு முயன்றும் காப்பாற்றமுடியவில்லை. அவர் சுவாசம் நின்று போனது.
அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்துக்கு பெரிய இழப்பு. இலக்கியாவை சிறு வயதில் இருந்தே வளர்த்தவர் அவர் தான். பிள்ளைகளை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்தவர் அவர். ஆனால் பேர பிள்ளைகளிடம் மிகவும் அன்பாக இருந்தார். பார்த்து பார்த்து செய்தார். அவருடைய சொந்தங்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். ஊரிலிருந்து சென்னைக்கு நகர்ந்தால், அத்தை வீடு தான் அவர்களுக்கு முதல் புகலிடம்.
பகுதியில் முருங்கைமர வீட்டுக்காரர், இலக்கியா அப்பா என எனக்கு இருக்கும் வேறு வேறு பெயர்களில் சம்பூர்ணத்தம்மாவின் மருமகன் என்ற பெயரும் உண்டு. இலக்கியா பிறந்த வருடத்தில் இருந்து ஒரு பலசரக்கு கடை ஒன்றை அத்தையும், மாமாவும் நடத்தினார்கள். ஆகையால் பகுதி மக்கள் பெரும்பாலோரோடு நல்ல பழக்கம் உண்டு. வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் உரிமையோடு அழைப்பார்கள். இவரும் போய்வருவார்.
அத்தை எங்களுக்கு செய்தது அதிகம். எங்கள் மீதான பாசத்தில், பொது வேலை என இருவரும் அலைவதையும், சொத்து எதுவும் சேர்க்கவில்லை என இலக்கியாவிடம் திட்டுவார். எனக்கு தெரியவரும் பொழுதெல்லாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. திட்டட்டும் என சிரித்துக்கொண்டே சொல்லிவிடுவேன். என்னென்ன விசயங்களில் திட்டுகிறார் என்பதை மட்டும் கேட்டு தெரிந்துகொள்வேன். நிலவுடைமை பண்பில் மருமகனான என்னிடம் நேரிடையாக எதுவும் சொல்லிக்கொள்ளமாட்டார்.
இந்த ஒரு வருடத்தில் வெவ்வேறு சமயங்களில், சம்பவங்களும், மனிதர்களும் அத்தையை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் குற்றாலம் போனோம். அத்தை எங்களோடு ஒருமுறை குற்றாலம் வந்தது நினைவுக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கனவு. சாலையில் வண்டியோட்டிக்கொண்டு போகிறேன். ஒரு திண்ணையில் அத்தை நின்றுகொண்டு இருக்கிறார். ”அத்தை இங்கு நிக்கிறாங்க!” என சொல்லிக்கொண்டே போகிறேன். அந்த காட்சி இன்னமும் நல்ல நினைவில் இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பகுதியில் ஒரு பெரியவர் “உங்க அத்தை இறந்தது இப்பத்தான் தெரியும். அன்னைக்கு உங்க மாமாகிட்ட நலம் விசாரிக்கும் பொழுது சொல்கிறார். அவங்க இறந்து வருடம் ஆச்சு என்கிறார். இத்தனை மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் (Paralyzed) வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டேன். ரெம்ப நல்ல மனுசி” என வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே சென்றார்.
செப். 4. 2022. சம்பூர்ணம் அத்தையின் முதலாம் நினைவு நாள் இன்று. கால இடைவெளியில் அத்தைகள் மறையும் செய்திகள் ஊரில் இருந்தும் வந்து கொண்டே இருக்கின்றன! அத்தைகள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாய் இருக்கிறது!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment