> குருத்து: Dunki (2023) இந்தி

January 1, 2024

Dunki (2023) இந்தி


நம்மூரில் தொழிலாளர்கள் துபாய், சிங்கப்பூர், மலேசியா என லட்சக்கணக்கில் சென்று வேலை செய்து வருகிறார்கள். அது போல பஞ்சாபில் லண்டன் போய் செட்டிலாவது, வேலைக்கு போவது என்பது பரவலாக இருக்கும் ஆசை.


நாயகி, இன்னும் இருவர் லண்டன் செல்ல ஆசைப்படுகிறார்கள். படிப்பு இல்லை. வசதி இல்லை. ஆனால் லண்டன் செல்லவேண்டும். பொருளாதாரத்தில் அடுத்தக்கட்டத்திற்கு மேலே செல்லவேண்டும் என விரும்புகிறார்கள். வெகு சீக்கிரத்தில் அரசு அனுமதியுடன் நேரிடையாக செல்வதற்கான வாய்ப்பு இல்லை என அறிந்துகொள்கிறார்கள்.

அடுத்த வாய்ப்பு என்பது, பாஸ்போர்ட், விசா இல்லாமல் செல்லும் வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கிடையில் நாயகன் இராணுவத்தில் ஒரு வீரராக இருக்கிறார். இவர்களுக்கு அறிமுகமாகிறார். நாயகியை விரும்புகிறார்.

அவரும் அவர்களுடன் கிளம்புகிறார். ஏகப்பட்ட சோதனைகள். வலிகள். உயிரிழப்புகள். ஒருவழியாக லண்டன் போய் சேரும் பொழுது அரை உசுராக போய் சேர்கிறார்கள்.

ஆனால் அங்கு போன பிறகு கூட வாழ்க்கை அப்படி ஒன்றும் சுபிட்சமாக இல்லை. பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

*****
முன்னாபாய் MBBS, 3 இடியட்ஸ், பிகே இயக்குநரான இராஜ்குமார் ஹிரானி தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். எடுத்துக்கொண்ட கதை உலகம் தழுவிய அளவில் இருக்க கூடிய பிரச்சனையை தொட்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள் நாட்டில் போர், பொருளாதார நெருக்கடி என பல்வேறு சூழலில் தங்கள் சொந்த நாட்டை விரும்பியோ, விரும்பாலோ நகர்கிறார்கள். ஆனால் அவர்களை உலக சமூகம் மனம் உவந்து ஏற்பதில்லை.

உதாரணமாக, நம்ம பக்கத்து நாட்டில், உள்நாட்டில் ஏற்பட்ட போர் சூழலால், நம்மூருக்கு பல ஆயிரங்களில் வந்து சேர்ந்தார்கள். அகதிகள் குறித்து இந்திய அரசு உலக அளவில் உள்ள ஐ.நா (?) தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. ஆகையால், இப்படி வந்தவர்கள் எல்லாம் ”சட்ட விரோத குடியேறிகள்” என்று தான் அணுகுகிறது. நடத்துகிறது. அதனால் தான் திறந்தவெளி சிறைச்சாலையாக முகாம்கள் என்ற பெயரில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சென்றால், வந்தால் எல்லாமும் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும்.

கனடா போன்ற நாடுகள் தங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் வேலை என அகதிகளை ஏற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதியில் சொல்வது போல, 140 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் எந்த நாட்டிற்கும் போகலாம் என்ற நிலை தான் இருந்தது. பிறகு தான் எல்லா கட்டுப்பாடுகளும் விதித்தார்கள். மீண்டும் அப்படி ஒரு நிலை உலகம் முழுவதும் வரவேண்டும்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் விகடனில் “கடவுள் தொடங்கிய இடம்” என இப்படி சட்ட ”விரோதமாக” நகர்பவர்களின் பிரச்சனைகளைத் தான் தொட்டு எழுதியிருந்தார். அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

கதை நல்ல கதை. ஆனால் திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. அதை நகைச்சுவை என்ற சர்க்கரை தடவி எடுத்தது என்பது ஒரு பக்கம் வணிகத்திற்கு உதவியாக இருந்தாலும், இதன் மறுபக்கம் இயக்குநரின் மற்ற படங்களைப் போல அத்தனை எடுபடவில்லை என்றே சொல்வேன். ஆனால் பார்க்கவேண்டிய படம்.

மற்றபடி எழுத்து போடும் பொழுது, டாப்ஸியை முதலில் போடுகிறார்கள். அப்படித்தான் மொத்தப் படத்தையும் டாப்ஸி தாங்குகிறார். நாயகன் ஷாருக்கானும் மற்றவர்களும் பக்க பலமாய் இருக்கின்றனர்.

திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன். விரைவில் ஓடிடிக்கு வரும்.

0 பின்னூட்டங்கள்: