> குருத்து: Fantastic Beasts: The Secrets of Dumbledore (2022)

January 24, 2024

Fantastic Beasts: The Secrets of Dumbledore (2022)


நல்ல சக்திகளும், தீய சக்திகளுக்குமான மோதல் தான் கதை.

ஜெர்மனில் மாய உலகத்தில் தேர்தல் நடக்கிது. தன் செல்வாக்கை வைத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை இல்லாமல் ஆக்கிவிடுகிறான். ”எளிதானதை செய்யாதீர்கள். சரியானதை செய்யுங்கள்” என டம்பிள்டோர் சொன்ன செய்தியை அங்குள்ள தலைமை புறக்கணிக்கிறது. தேர்தலில் தீய சக்திகளின் தலைவனையும் ஒரு வேட்பாளராக அனுமதிக்கிறார்கள்.

தலைவனை வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள் என காத்திருந்தால், நம்மூர் மான் குட்டி போல அவர்களின் மாய உலகத்தில் ஒரு உயிரினம் இருக்கிறது. எங்கோ ஒரு காட்டிற்குள் குட்டியை பெற்றெடுக்கிறது. தீய சக்திகளின் தலைவன் அனுப்பிய ஆட்கள், அதன் அம்மாவை கொன்றுவிட்டு, குட்டியை கொண்டு வந்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு இன்னொரு குட்டி பிறக்கிறது. அதை டம்பிள்டோர் ஆள் தூக்கிவந்துவிடுகிறார். (இந்த குட்டியை தேர்தல் ஆணைய ஆட்கள் பாதுகாக்க மாட்டார்களா?) 🙂

தீய சக்திகளின் தலைவன் அந்த குட்டியையும் கழுத்தறுந்து கொன்றுவிட்டு, அந்த குட்டித் தன்னை தேர்ந்தெடுக்கும்படி வசியப்படுத்திவிடுகிறான். தேர்தல் நெருங்குகிறது.

டம்பிள்டோர் குடும்பத்திலேயே கைவிடப்பட்ட ஒருவனை தீயசக்திகளின் தலைவன் அவனின் மனதில் உள்ள வெறுப்பை ஊதி ஊதி அவனை கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறான். (இதற்கு முந்தைய பாகம் பார்க்கவேண்டும்.) இப்பொழுது அவனை டம்பிள்டோரை கொல்ல அனுப்புகிறான்.

டம்பிள்டோர் தப்பித்தாரா? ஜெர்மன் தேர்தலில் தீய சக்திகளின் தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டானா? என்பதை சில சாகங்களை செய்து காட்டுகிறார்கள்.
***


ஹாரி பார்ட்டர் கதைகள், அதை ஒட்டிய படங்கள் நன்றாக கல்லா கட்டியதால், ஹாரி பார்ட்டர் கதைக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை சில பாகங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தீய சக்திகள் படத்தில் வலுவாக காட்டப்படுகிறது. ஆனாலும் நல்லதை நினைக்கும் சக்திகள் தொடர்ந்து தங்களது சக்திக்குட்பட்டு சின்சியராக அதைத் தடுக்க முயல்கிறார்கள். சில சமயங்களில் வெற்றி பெறலாம். சில சமயங்களில் தோல்வி பெறலாம். ஆனால், தொடர்ந்து முயல்வது தான் சரியானது. இதை சமூகத்திற்கும் நாம் பொருத்தி பார்க்கலாம்.

முந்தைய பாகங்களைப் பார்த்தால் தான் புரியும் என்றில்லை. தனியாகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

படத்தில் டம்பிள்டோராக வருகிற ஜூட் லோ ரெம்பவே கூல், தீய சக்திகளின் தலைவனாக வரும் மட்ஸ் மிக்கெல்சன் அவருடைய மிடுக்கால் கலக்குகிறார். விலங்குகளில் நண்பனாக வரும் நியூட்டாக எடி ரெட்மேன் வழக்கம் போல வருகிறார். முக்கிய பாத்திரத்தில் ஜெசிகா வில்லியம்ஸ் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பு.

நெட் பிளிக்சில் ஆங்கிலத்தில், ஆங்கில சப் டைட்டில்களுடன் கிடைக்கிறது. வெளியான பொழுது, தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஆகையால், வேறு வகைகளில் முயன்றால், கிடைக்கலாம்.

0 பின்னூட்டங்கள்: