> குருத்து: Curse of Bridge Hollow (2022) குழந்தைகளுக்கான ஜாலியான படம்

January 30, 2024

Curse of Bridge Hollow (2022) குழந்தைகளுக்கான ஜாலியான படம்


அப்பா ஒரு அறிவியல் ஆசிரியர். தன் மனைவி, பள்ளி செல்லும் மகளுடன் அந்த புது ஊருக்கு வந்து சேர்கிறார்.


ஊரே ஹாலோவீனுக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறது. அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்பட கூடிய ஒரு நிகழ்வு என்கிறார்கள்.

குடிபுகுந்த புது வீட்டில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தியை அந்த பெண் கிளப்பிவிட, ஊரில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வண்டுகள், கோடாலியோடு இருக்கும் ஜோக்கர்கள், ஜோம்பிகள் எல்லோருக்கும் உயிர் கொடுத்துவிடுகிறது. அவைகள் மனிதர்களை துரத்த ஆரம்பிக்கின்றன.

ஊரே அல்லோலப்படுகிறது. மீண்டும் அந்த சக்தியை அடைக்கப்படவில்லை என்றால், அதன் இலக்கை அது அடைந்துவிட்டால் எல்லா நாளும் ஹாலோவீன்னாக மாறிவிடும் என்ற ஆபத்து இருக்கிறது.

அப்பாவும், மகளும், அந்த ஊரில் உள்ள சில பசங்களும் இதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை பல்வேரு கலாட்டகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****

இந்த மாதிரி ஹாரர் படத்தில், ஹாரர் மீது நம்பிக்கையில்லாத ஒரு பாத்திரத்தை கொண்டு வந்து, அவரே நம்புகிற மாதிரி காட்சிகளை நகர்த்துவார்கள் இறுதியில் அவரும் நம்பிவிடுவார். அப்பா பாத்திரத்தின் வேலை இது தான்.

இதை கதையின் சுவாரசியத்திற்காக செய்கிறார்களா? அறிவியலை கிண்டல் செய்வதாக நினைக்கிறார்களா தெரியவில்லை. ஒரு ஜாலிக்காக நகைச்சுவை பேய் படம் பார்த்தால், இப்படி தொடர்ந்து கடுப்பேத்துகிறார்கள்.

படத்தில் வரும் Priah Ferguson க்காக தான் இந்தப் படத்தையே பார்த்தேன். Stranger things தொடரில் குட்டிப்பெண்ணாக வந்து கலக்குவார். இந்தப் படத்தில் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்.

13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஜாலியான படம். நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: