"இன்றைய நாளை விளையாடி கழித்தால் மட்டுமே நாளை வரும்”
****
நாயகி மும்பையில் தன் கணவன், மகனுடன் வாழ்ந்துவருகிறார். கணவன் எல்.ஐ.சியில் பணிபுரிகிறார். மகன் ஐஐடியில் படித்துவருகிறார். நாயகி விவாகரத்துக்கு வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் பிரிவில் பணிபுரிகிறார்.
அவருக்கு ஏற்பட்ட நரம்பியல் நோய் காரணமாக, மெல்ல மெல்ல
தன் நினைவுகளை இழந்துவருகிறார். மொத்த நினைவுகளையும்
துறப்பதற்கு முன்பு, தான் பதின் பருவத்தில் வாழ்ந்து வந்த பகுதியான, கோவாவின் வடக்கு
பகுதியில் இருக்கும் கொங்கனுக்கு போய் வரலாம் என சொல்லி, கணவன், மனைவி இருவருமே கிளம்பிச்
செல்கிறார்கள்.
தான் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, பதின் பருவத்து தோழி,
பள்ளித் தோழன் என சந்திக்கிறார். உரையாடுகிறார். தன் நினைவுகளை மீட்டெடுக்கிறார். பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
யோசித்துப் பார்த்தால், வாழ்க்கை என்பது ஒரு மனிதனின் நினைவுகள் தானே! எல்லா நினைவுகளையும் தொலைத்துவிட்டால், என்ன ஆவது? ஒரு இடத்தில் தன் கணவனிடம் ”மகனையும் மறந்துவிடுவேன் அல்லவா!” என கேட்கும் பொழுது அதன் முழுப்பரிமாணமும் புரியும். ஆனால், அவள் கொஞ்சம் நிதானமானவளாக இருக்கிறார். வாழ்வு அதன் போக்கில் தரும் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் அணுகுகிறார்.
பதின்பருவத்து தோழன் ஒருவன் ஒருநாள் தன் பிரியத்தை சொல்ல
வருகிறான். அன்றைக்கு அவனிடம் கோபித்துக்கொண்டு,
அங்கிருந்து நகர்ந்தவள் இப்பொழுது இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்று
அவனைச் சந்திக்கிறார். தோழன் இப்பொழுது வங்கியில் மேலாளராக இருக்கிறார். தன் மனைவி,
இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த பெரிய ராட்டினத்தில் இருவரும் சுற்றி வரும் பொழுது,
சில நிமிடங்கள் அந்தரத்தில் நிற்கும். அந்த வேளையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அந்த
நிகழ்வுக்கு இப்பொழுது அவள் மன்னிப்பை கோருகிறாள். இருவரும் மீண்டும் பதின்பருவத்திற்கே நம்மை கொண்டு
போய்விடுகிறார்கள். அந்த ராட்டினம் கழுகுப்
பார்வையில் ஒரு காலச்சக்கரம் போல நமக்கு தெரிகிறது என ஒரு பத்திரிக்கை குறிப்பிட்டது
மிகச்சரியாக பொருந்துகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, திரையில் ஒரு ஆணின் வெட்கத்தை
பார்க்க முடிந்தது.
ஒரு விளையாட்டாக சொல்லவேண்டுமென்றால், இப்படி நமக்கு ஒரு
நோய் வந்து, நாம் காயப்படுத்தியவதற்கெல்லாம்/உதவியவர்களுக்கெல்லாம் மன்னிப்பும், நன்றியும்
சொல்ல போனால் அத்தனை பேரையும் தேடி கேட்பதற்கே நீண்ட காலம் ஆகும் என மனதில் ஓடியது.
நாயகியின் கணவன், பதின்பருவ தோழனின் மனைவி இருவரும் இருவரின்
மன இயல்பை புரிந்துகொள்கிறார்கள். அவர்களுடைய உணர்வையும் மதித்து நடந்துகொள்கிறார்கள். (எங்கடா இப்படி எல்லாம் குடும்பம் இருக்கிறது? J )
இது வழக்கமான இந்திப் படம் அல்ல! அதனால் தான் 2022ல் வெளிவந்து
உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, பாராட்டுகளைப் பெற்று, ஒரு வருடம் கழித்து,
இப்பொழுது நெட் பிளிக்சில் வெளியாகியிருக்கிறது.
நாயகியாக வரும் ஷெபாலி ஷாவை Delhi Crime வலைத் தொடரில்
ஒரு போலீசு அதிகாரியாக பார்த்திருக்கிறேன். அருமையான நடிகை. நம்மூர் ஸ்ரீவித்யாவை நினைவுப்படுத்துகிறார். பள்ளித்
தோழனாக வரும் Jaideepஐ Jaane Jaan படத்தில்
கணித வாத்தியராக வந்தது இன்னும் நினைவில் நிற்கிறார். இப்பொழுது தான் விஸ்வரூபம் படத்தில்
வில்லன் குழுவில் ஒரு ஆளாக வருகிறார். இவர்
Paatal Lok வலைத்தொடரில் சிறப்பாக நடித்ததாக சொல்கிறார்கள். ஏற்கனவே அது நம்முடைய பார்க்கவேண்டிய
பட்டியலில் இருக்கிறது. பிறகு மூன்றாவதாக வரும்
நாயகியின் கணவரும் இயல்பாக நடித்திருக்கிறார்.
படத்தை இயக்கி, அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். அவினாஷ் அருண் அவருடைய
முதல்படம் Killa நல்ல படம் என்கிறார்கள். பார்க்கவேண்டும்.
நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment