நாம் எங்கே தொலைந்து போனோம்?
மூவரும் பள்ளிக்காலத்து நண்பர்கள். ஒருவர் ஸ்டாண்ட் அப் காமிக்காக இருக்கிறார். இன்னொருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் சந்தைப்படுத்தும் பிரிவில் வேலை செய்யும் எம்.பி.ஏ பட்டதாரி. இன்னொருவர் ஜிம்மில் பயிற்சியாளர்.
காமிக் இளைஞருக்கு நீடித்த உறவில் நம்பிக்கையில்லை.
ஆப்பில் பதிந்துகொண்டு,
புதுப்புது பெண்களுடன் வலம்வருகிறார். அம்மாவின் இறப்பு அவனை
கடுமையாக பாதித்திருக்கிறது. அப்பா அவனுக்கு இருக்கும் உளவியல் சிக்கலைப் புரிந்துகொண்டு அவனை கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்.
அவள் மூன்று வருடம் ஒருவனுடன் காதலில் இருக்கிறார். ஒருநாள் திடீரென பிரேக் அப் என சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான். அதனால் மிகவும் சோர்வாக இருக்கிறாள்.
ஜிம் பயிற்சியாளர்
ஒரு சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு பயிற்சியாளராக
இருக்கிறார். இருவருக்குள்ளும்
காதல் உறவு இரகசியமாக இருக்கிறது. அவள் வெளியே சொல்ல மறுக்கிறாள்.
ஜிம் பயிற்சியாளர்
ஒரு ஜிம் வைப்பது தனது இலக்கு என்கிறார். மற்ற நண்பர்கள் இருவரும் அதற்கு துணை நிற்பதாகவும், அதற்காக மெனக்கெடுகிறார்கள்.
ஆனால், நண்பனின் காதலை காமிக் ஒரு திறந்த மேடையில் (பெயரை சொல்லாமல்) வெளிப்படையாக பேச அவன் காயப்படுகிறான். இருவருக்குள்ளும்
பெரிய மனஸ்தாபம் வந்துவிடுகிறது.
பிறகு என்ன ஆனது என்பதை நட்பு, காதல், காமம் என உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
மேட்டுக்குடி இளைஞர்களின்
சிந்தனை, அவர்களின் வாழ்க்கை, பப், குடி, காதல், காமம் எவ்வாறு இருக்கிறது? அவர்களுடைய உறவுகள் அவர்களை எவ்வளவு பதட்டமடைய வைக்கின்றன? சமூக வலைத்தளங்கள்
அவர்கள் வாழ்வில் எவ்வளவு தவிர்க்க முடியாத அளவிற்கு இரண்டற கலந்து இருக்கிறது, அது எவ்வளவு தூரம் அவர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்பதை மூவரின் வாழ்க்கையை கொண்டு வண்ணமயமாய் (!) சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இறுதியில் வந்தடையும் சில உணர்வுகள் முக்கியமானவை. கவனிக்கத்தக்கவை. உரையாடுதல், எல்லா உறவுகளிலும் மிக முக்கியமானவை. உரையாடுதல் குறைய குறைய மக்கள் ஒன்றாக வாழ்ந்தாலும், அவர்களுக்குள் தூரம் அதிகமாகிக்கொண்டே போகிறது. பேஸ்புக்கில்
ஐயாயிரம் நண்பர்கள் இருந்தாலும், எதார்த்தத்தில்
ஒரு நண்பனை கூட தக்கவைப்பதில்லை. பேருந்தில், ரயிலில் என கூட்டமாய் சென்றாலும் ஒவ்வொருவரும் அவரவர் செல்லில் ஒரு மெய்நிகர் டிஜிட்டல் உலகில் தனித்து உலாவுகிறார்கள்.
இந்த நேரத்தில் பசித்த சிங்கம், ஒன்றாய், கூட்டாய் வாழ்ந்த மாடுகள் கதை நினைவுக்கு வருவது நல்லது. நம்மை வேட்டையாடுவதற்கு முதலாளித்துவ சந்தைக்கு மிக எளிதாகிவிடுகிறது.
சித்தாந்த், அனன்யா, ஆதர்ஷ் கெளரவ் மூவரும் பிரதான பாத்திரத்தில் வருகிறார்கள்.
நம்மை கவர்கிறார்கள்.
அர்ஜூன் வாரன் சிங் இயக்கியிருக்கிறார்.
நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment