> குருத்து

December 19, 2025




தூத்துக்குடியில் இருந்து தொழில் உலகம் இதழின் வாசகர் திரு. கதிரேசன் என்பவர் தொலைபேசியில் அழைத்துஅவர் A என்ற நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் வேலை செய்த பொழுது பி.எப். பிடித்தம் செய்யப்பட்டதாகவும்,  B என்ற நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருவதாகவும் அங்கும் பி.எப். பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

 

இப்பொழுது அவருக்கு வயது 61.  அவருக்கு சந்தேகம் என்னவென்றால்இப்பொழுதும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வதால், பி.எப். ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்க முடியுமா?  அப்படி ஓய்வுநிதிக்கு விண்ணப்பித்து, மாதம் மாதம் பெறும் ஓய்வுநிதி பெறும் பொழுது, பி.எப். தொடர்ந்து செலுத்தலாமா?  அப்படி செலுத்தகூடாது என சொல்லிவிட்டால், ஓய்வுநிதி பெற்றால்நிறுவனம் அவரை வேலையை விட்டு நிறுத்திவிடுமா? என கேள்விகள் கேட்டார்.  இந்த கேள்விகள் பலருக்கும் எழக்கூடிய இயல்பான கேள்வி.  இதற்கு பதில் சொல்லலாம்.

 

58 வயதுக்குப் பிறகு EPF Pension (EPS Pension) வாங்கும் தகுதி

 


ஆம். 58 வயதுக்கு பிறகு ஒரு பணியாளர்  பி.எப்.ஓய்வுநிதி (Pension) பெற முழுத்தகுதி உடையவராகிவிடுகிறார்.  58 வயதை நிறைவு செய்ததும், விண்ணப்பம் 10D மூலம் ஓய்வுநிதிக்கு அவர் விண்ணப்பிக்கலாம். அவருடைய பணிக்காலம் எத்தனை ஆண்டுகள் (Pensionable Service) என்ற அடிப்படையில் ஓய்வுநிதி  கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

 

58 வயதுக்கு பிறகு ஓய்வுநிதி (Pension) வாங்கிக்கொண்டே வேலை செய்யலாமா?

ஆம், நிச்சயம் வாங்கலாம். அவருடைய வயது 58யை கடந்ததால் ஓய்வுநிதி பெறுவது சரியானதும், பி.எப் சட்ட முறையின்படியும் சரியானது.

 

அவர் தொடர்ந்து வேலை செய்தால், நிறுவனத்திலிருந்து  அவருடைய கணக்கில் பி.எப். நிதி (contribution) அவருடைய கணக்கில் செலுத்தலாமா?

 

இது மிக முக்கியமான பகுதி:  (A)  பணியாளரின் பி.எப். பங்களிப்புத் தொகை 12%. அவரிடம் பிடித்தம் செய்யப்படுகிற நிதியை பி.எப். கணக்கில் செலுத்தலாம்.  58 வயதுக்கு பிறகும், அவர் வேலை செய்தாலும் செலுத்தலாம்.

 

நிறுவனம் செலுத்தும் பி.எப். நிதி செலுத்துவதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. நிறுவனம் EPF  கணக்கில் அவர்களின் பங்கையும் செலுத்தலாம்.  EPS என சொல்லும் ஓய்வுநிதியை 58 வயதுக்கு பிறகு செலுத்தக்கூடாது. ஏனெனில்..  58 வயதுக்கு பிறகு அவருக்கு புதிய ஓய்வுநிதி சேவைக் காலத்தை (pensionable service) உருவாக்க முடியாது. அதனால் ஓய்வுநிதி பங்களிப்பை செலுத்துவது சட்டப்படி நிறுத்தப்பட வேண்டும்.

 

எனவே 58 வயதுக்குப் பிறகு நிறுவனம் செலுத்துகிற பங்களிப்பு முழுவதும் பி.எப் கணக்கில் மட்டும் செலுத்த வேண்டும்.  ஆக அவரிடம் பிடித்தம் செய்கிற 12%யும், நிறுவனம் செலுத்துகிற 12% என மொத்தம் 24% நிதியும் அவருடைய பி.எப் கணக்கில் A/c No: 1 லேயே செலுத்தவேண்டும்.

 

நிறுவன வரி/சட்டப்பூர்வ கட்டணங்கள்நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து மட்டுமே செலுத்தப்பட வேண்டும்

 


சமீபத்தில் இரண்டு அனுபவங்கள்.   ஒரு நிறுவனம் தான் செலுத்தவேண்டிய பி.எப், .எஸ்.ஐ தொகையை  வரி ஆலோசகருக்கு அனுப்பி, செலுத்த சொல்லி ஒரு ஆண்டுக்கும் மேலாக அனுப்பி வைத்தது.  அந்த ஆலோசகர் சில மாதங்கள் மட்டும் செலுத்திவிட்டு, சில மாதங்கள் செலுத்தாமல் விட்டுவிட்டார்.  பிறகு இந்த உண்மை தெரிந்ததும்,  செலுத்தாத பணத்தை அவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

 

இன்னொரு நிறுவனம் தான் செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி தொகையை வரி ஆலோசகருக்கு அனுப்பி வைக்க, அந்த தொகையை செலுத்தாமல் ஜி.எஸ்.டி ரிட்டர்னை சில மாதங்கள் (2020- 2021 காலத்தில்)  தாக்கல் செய்துவிட்டார்.  இது தொடர்பாக ஜி.எஸ்.டி அலுவலகம் நோட்டிஸ் அனுப்பி கேட்கும் வரை அந்த நிறுவனத்துக்கு தெரியாமலேயே போய்விட்டது.

 

நான் வரி ஆலோசகராக இருந்து வரும்  நிறுவனங்களின் சில முதலாளிகள், பி.எப். தளம் சில நேரம் பிசியாக இருக்கும் பொழுது,  அவர்கள் சில சமயங்களில் வெளியூரில் இருக்கும் பொழுது,  பணம் செலுத்துவதற்கு தாமதமாகும்.  அதை தவிர்க்கும் பொருட்டு,  உங்களுக்கு பணத்தை அனுப்பிவிடுகிறேன். நீங்கள் செலுத்திவிடுகிறீர்களா?” என கேட்பதுண்டு.  சட்டம் இதை  எப்பொழுதும் அனுமதிப்பதில்லை என தெரிவித்துவிடுவேன். காரணம் - ஒரு நிறுவனத்திற்கான அனைத்து சட்டப்பூர்வ கட்டணங்களும் உதாரணமாக GST, TDS, PF, ESI, ROC fees, Professional Tax, தாமதத்திற்கான வட்டி, அபராதங்கள் ஆகியவை எல்லாமும் அந்த நிறுவனத்தின் சொந்த வங்கி கணக்கிலிருந்து மட்டுமே செலுத்தப்பட வேண்டும். இதற்கு காரணம்: சட்டம் நிறுவன நிதி மற்றும் தனிநபர் நிதியை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

 

கீழே ஒவ்வொரு துறை சார்ந்த சட்டப்பிரிவு மற்றும் காரணம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

GST சட்டம் : சட்ட அடிப்படை: GST Rules – Rule 87 (Electronic Cash Ledger)

Rule 87 படி, GSTக்கு செலுத்தப்படும் தொகை சோதனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  GSTIN-க்கு உரிய நிறுவனம் அதனுடைய  வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செலுத்த வேண்டும்.

 

பிற தனிநபர்கள் கணக்கில் இருந்து செலுத்தும் பொழுது என்ன பிரச்சனை வரும்?

 

நிறுவனத்தின் தனிநபர் முதலாளி, நிறுவனத்தின் இயக்குநரின் தனிப்பட்ட வங்கி கணக்கிலிருந்து செலுத்தினால், தணிக்கையின் பொழுது  விளக்கம் தர முடியாத நிலை
ஏற்படும்.

 

வருமானவரி (TDS/TCS) சட்ட அடிப்படை: வருமானவரி சட்டம் – Section 200 & Rule 30 -  தனிநபர் கணக்கில் இருந்து தொகையை செலுத்தினால்,  தவறானதாக (deduction process) மதிக்கப்படும்.

 

செலவு விலக்கு தொடர்பான பிரிவுகள் :  செக்சன் 40A(3)அனுமதிக்கப்படாத முறையில் செலுத்தப்பட்ட தொகைகள் தள்ளுபடி (payments disallow) ஆகும். Section 43Bசட்ட ரீதியான நிலுவைத்தொகைகள் உண்மையான கட்டணம் அடிப்படையில் கழித்தல் கிடைக்கும்.   கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் பொருந்தாமல் இருக்கக்கூடாது.

 

பி.எப். .எஸ்.ஐ சட்ட அடிப்படையில்EPF Act – Para 38 of EPF திட்டம், ESI சட்டம் – Regulation 31 - இரண்டும் நிறுவனம் செலுத்தவேண்டிய தொகையும், நிறுவனத்தால் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் தொகையும், நிறுவனத்தின் கணக்கில் இருந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இவை ஏன் முக்கியம் என்றால்,   நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைகளை தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுடன் கலக்க முடியாது.  பணியாளர் பங்களிப்புகள் மற்றொரு கணக்கில் செலுத்தப்படும் பட்சத்தில் நிதிகளை தவறாகப் பயன்படுத்துதல் என கருதப்படும்.

 

நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் அறிமுகம்

 


இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமைப்படுத்தி, தெளிவுப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒரே மாதிரியான சட்ட அமைப்பை உருவாக்கும் அமைப்பில்  மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை தொழிலாளர் நலன், பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு போன்ற அனைத்து துறைகளையும் ஒரே சட்ட அமைப்புகளுக்குள் கொண்டு வருகிறது.

 

1. சம்பளம் குறித்த சட்டம் – Code on Wages, 2019

இந்த சட்டம் கீழ்க்கண்ட நான்கு சட்டங்களைஒரே சட்டமாகஒருங்கிணைக்கிறது:

·         Minimum Wages Act

·         Payment of  Wages Act

·         Payment of  Bonus Act

·         Equal Remuneration Act

இதில்  உள்ள முக்கிய அம்சங்கள் - இந்தியா முழுவதும் ஒரே வகைகூலி/சம்பளம்வரையறை, அனைவருக்கும், குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages), சம்பளம் தாமதமின்றி வழங்குதல், பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் என கொண்டுவரப்பட்டுள்ளது.

 

2. தொழிலாளர் பாதுகாப்பு, ஆரோக்கியம், வேலை சூழல் – OSH Code, 2020 (Occupational Safety, Health & Working Conditions Code)

இந்த சட்டம் 13 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைக்கிறது. இதில் உள்ள  முக்கிய அம்சங்கள் - தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கட்டாயம், தொழிற்சாலைகள், கட்டடப்பணிகள், சுரங்கங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு விதிகள், பெண் தொழிலாளர்களுக்கு இரவு நேர பணிக்கு பாதுகாப்புடன் அனுமதி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கான (Contract Labour) தனித்துவமான பாதுகாப்பு

 

3. தொழிலாளர் சமூக பாதுகாப்பு – Social Security Code, 2020

இந்த சட்டம் கீழ்கண்ட 9 சட்டங்களை ஒருங்கிணைக்கிறது:  EPF, ESI, Gratuity, Maternity Benefit, Unorganised Workers’ Social Security, மற்றவை.  இதில் உள்ள முக்கிய அம்சங்கள் - PF, ESI, Gratuity எல்லா துறைகளுக்கும் விரிவாக்கம்.  Gig தொழிலாளர்கள் & பிளாட்பார்ம் தொழிலாளர்கள் (Ola, Swiggy, Zomato போன்றவர்கள்) ஆகியோருக்கும் சமூக பாதுகாப்பு, ஊழியர்களுக்கான  மகப்பேறு நலன், ஊனமுற்றோர் நலன், ஓய்வூதியம் போன்றவை அடங்கும்.

 

4. தொழிலாளர்-நிறுவனர் உறவு – Industrial Relations Code, 2020 - மூன்று பழைய சட்டங்களை இணைக்கிறது - தொழிற்சங்க சட்டம் (Trade Unions Act), தொழிற்துறை வேலைவாய்ப்பு சட்டம் (Industrial Employment Act), தொழில் தகராறு சட்டம் (Industrial Disputes Act)

 

இதில் உள்ள முக்கிய அம்சங்கள் - தொழிலாளர் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு,  பெரிய நிறுவனங்களில் பணிநீக்கம் / லேய்ஆஃப் (Lay off) செய்ய முன் அரசின் அனுமதி (300 தொழிலாளர்கள் வரை சலுகை),   நிலையியற் கட்டளைகள் (Standing orders) அனைத்து நிறுவனங்களுக்கும்,  தொழிலாளர் சங்கங்களுக்கு தெளிவான பதிவு விதிகள்

புதிய தொழிலாளர் சட்டங்களின் முக்கிய நோக்கங்கள்

 

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நியாயமான வேலை சூழல், சம்பளத்தில் தெளிவு, ஒருமைப்பாடு, தொழில் நிறுவனங்களுக்கு சட்டங்களுக்கு இணங்க செயல்பட எளிதாகுதல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு அதிகரித்தல்,  அமைப்புசாரா மற்றும் கிக் (gig) தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, தொழில்அரசுதொழிலாளர் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் சமநிலை

 

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா என்றால், நான்கு சட்டங்களுமே அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மாநில அரசின் விதிமுறைகள் முழுமையாக தயார் ஆகாததால் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. பல மாநிலங்கள் விதிமுறைகளை உருவாக்கி வருகிறன. மிக விரைவில் நாடு முழுவதும் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முடிவு

புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்திய தொழிலாளர் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் நலன்களும் அதிகரிக்கும்; அதே சமயத்தில் தொழில் நிறுவனங்களுக்குப் படிப்படியான, எளிதான செயல்பாட்டு சூழல் கிடைக்கும் என அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் நல சங்கங்கள், பத்திரிக்கைகள் என மக்கள் அரங்கில் விவாதங்கள் எழ தொடங்கும்.   அது சம்பந்தமாக விரைவில் நாமும் தெரிந்துகொள்வோம்.  விவாதிப்போம்.

 

இன்னும் வளரும்….!


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


0 பின்னூட்டங்கள்: