திருமணம்
இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.
மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.
எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.
'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.
அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.
சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.
முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.
வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.
கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.
ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.
இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.
துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்
சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.
உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்
இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.
இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்
அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.
இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்
May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment