> குருத்து: சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

May 18, 2007

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை


- 2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது.

0 பின்னூட்டங்கள்: