> குருத்து: தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!

February 18, 2009

தில்லையில் பேரணி! பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த பதிவர்களே! வாசகர்களே!

தில்லையில் (சிதம்பரத்தில்) வருகிற 21.02.2009 – சனிக்கிழமையன்று மாலை பேரணியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்புகளும், மற்றும் சில அமைப்புகளும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் உரிமையோடு அழைக்கிறோம்.

எதற்காக இந்த பேரணியும்,பொதுக்கூட்டமும்?

தில்லை நிகழ்வுகளை தொடர்ச்சியாய் பலர் கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் அர்த்தமும் , தேவையும் நிச்சயமாய் விளங்கும்.

புதியவர்களுக்காக – ஒரு சிறு அறிமுகம்

இதுவரை

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் கோவிலில், நடராசருக்கு எதிரே உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடது. காரணம் – தமிழ் தீட்டு மொழி என அந்த கோவிலை நிர்வகிக்கிற தீட்சிதர்கள் பல ஆண்டு காலம் மறுத்துவருகின்றனர்.

70 வயது முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமிக்கு தன் வாழ்நாள் லட்சியம் நடராசர் முன்பு
மனமுருகி தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என்பது. பாட சென்றால், தீட்சிதர்கள் அந்த பெரியவரை கையை முறித்து, வெளியே தூக்கிப்போட்டனர்.

முறையிட காவல் நிலையம் போனார். வழக்கு பதிய மறுத்தனர். தமிழால் வயிறு வளர்க்கும் ஆதினங்கள், மடங்கள் என போய் முறையிட்டார். முகம் திருப்பிக் கொண்டனர். எல்லா ஆத்திகர்களும் கைவிட்ட பிறகு, நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளை மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்து முறையிட்டார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் குதித்த கதை

இந்த வழக்கு மனித உரிமை மீறல் மட்டும் இல்லை, தீட்சிதர்களின் சாதித்திமிர் கொண்டதாக, மொழித்தீண்டாமை கொண்டதாக இருந்தது.

இது குறித்து, இந்து அறநிலையத்துறைக்கு பல புகார்கள் அனுப்பியும், எந்த பதிலுமில்லை.

இதன் வரலாறு தேடிப்பார்த்தால்...

1987ல் அதிமுக ஆட்சியில் தில்லைக் கோவிலில் நடைபெற்ற தீட்சிதர்களின் முறைகேடுகள், திருட்டுகள் பற்றி தீட்சிதர்களின் ஒரு பிரிவினரே அரசுக்கு புகார் தெரிவித்த அடிப்படையில், அரசு ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது.

தீட்சிதர்கள் “இந்து மதத்தில் தனி வகையறா” என தடை வாங்கினர்.

மீண்டும், பல ஆண்டுகளுக்கு பிறகு 1987ல் திமுக ஆட்சியில் மீண்டும் நிர்வாக அதிகாரியை அரசு நியமித்தது.

தமிழ் படங்களில், மிக மிக சாதுவான மனிதனாக காட்டப்படும் பார்ப்பனர்கள், கோவிலில் அரசு
அலுவலகம் திறக்கப்பட்டதும் அந்த அதிகாரியைத் தாக்கி, அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர். பிறகு, அந்த வழக்கையும், தனது பல பணத்தால், செல்வாக்கு பலத்தால் அமுக்கினர்.

தீட்சிதர்களை சட்டபடியாக மட்டும் எதிர்கொண்டு விட முடியாது என கருதிய ம.உ.பா.மை. தனது தோழமை அமைப்புகள் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சில தமிழ் அமைப்புகள் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டது.

சில வெற்றிகள்

மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஒரு புறம். மறு புறம் சட்ட ரீதியாகவும் பல போராட்டங்கள்.

(இந்த போராட்டம் நீண்ட கதை. இது தொடர்பாக பல பதிவுகள் தனியாக இருக்கின்றன. பார்க்க : மகா – தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் )


முதல் வெற்றி –
சிற்றம்பல மேடையில் பாட முதலில் அரசு அனுமதி

இரண்டாவது வெற்றி – அரசு நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமித்தது.


அவாள்கள் ஒன்று கூடுகிறார்கள்.

இன்றைக்கு, இழந்த கோவிலை மீட்க, தீட்சிதர்கள் மீண்டும் கிளம்பி விட்டார்கள். உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருகிறார்கள்.

ஒரு கும்பல் ஜெயலலிதாவை, மற்றும் பலரைப் பார்த்தார்கள். கடந்த வெள்ளியன்று சு.சாமியும்,
விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் தில்லைக்கு போய் விசேஷ பூஜை நடத்தியிருக்கிறார்கள். நேற்று, சு.சாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்து கொள்ள விண்ணப்பித்திருக்கிறார். தீட்சிதர்களில் ஒரு குழு தில்லி சென்றிருக்கிறது. இல. கணேசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பேரணி, பொதுக்கூட்ட தேவை!

இப்படி இழந்த கோவிலை மீட்க பார்ப்பன கும்பல் தனது சதி வேலைகளை செய்ய கிளம்பிவிட்டது. கிடைத்த வெற்றியை போதும் என ஒதுங்கி கொண்டால், தீட்சித கும்பலுக்கு கொண்டாட்டமாகிவிடும். நாம் அதை அனுமதிக்கலாமா?

பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள ....

மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.

2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.

இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.

ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

பின்குறிப்பு : தில்லை போராட்டத்திற்கு முன்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமி
ஆறுதல் சொல்லக்கூட ஆளிலில்லாமல், சிதம்பரம் தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிந்தார்.

சமரசம் இல்லாமல், தொடர்ந்து போராடும் அமைப்புக்கு வந்து, தொடர் போராட்டங்களுக்கு பிறகு, அவர் களப்போராளியாகவே மாறிவிட்டார்.

ஏற்கனவே, இந்த சட்டம், நீதிமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்திருப்பார். மீண்டும், தொடர்கிற போராட்டத்தில், ஒரு நாத்திகவாதியாக மாறினாலும் மாறியிருப்பார்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

நல்ல பதிவு. நிகழ்ச்சி நிரல் கிடைக்குமா?