> குருத்து: வாக்காள‌ன்!

May 2, 2009

வாக்காள‌ன்!


எங்க‌ள் தெருவின் முனையில்
அம்ம‌ன் கோவில் ஒன்று.
கோவிலென்று சொல்லிட‌ முடியாது
ஐந்த‌டி உய‌ர‌த் திண்டு ‍- ம‌த்தியில்
இரும்பாலான சூல‌ம் ஒன்று
மூன்று முனைக‌ளிலும்
மூன்று எலுமிச்ச‌ம்ப‌ழ‌ங்க‌ள்
'ப‌ழ‌ங்க‌ள்' என‌ சொல்லிட‌முடியாது
ச‌தைக‌ள‌ற்ற‌ வெறும் கூடுக‌ள்.

வைகாசி மாதம்
ஒரு மாலையில்
கூட்டம் கூடி, விவாதிக்கப்படும்.
அடுத்த வாரம் ‍ எல்.ஆர். ஈஸ்வரி
ஒலிபெருக்கியில் பக்தி பாடலால்
தூக்கம் கலைப்பார்
தெருக்களின் முனைகளில்
வேப்பிலைத் தோரணங்கள்
காற்றில் படபடக்கும்.

ஐந்தடி திண்டின் மேல் நேர்த்தியாக‌
கூரை மேயப்பட்டு .... அழகான‌
அம்மன் சிலை எழுந்தருளியிருக்கும்
பின்புறம் சூலம் நிற்கும்.

இளசுகள் வேலைகளில்
பம்ப‌ரமாய் ஈடுபடும்.
பெரிசுகள் கண்ணும் கருத்துமாய்
வசூலில் இருக்கும்.

முளைப்பாரி செழித்து வ‌ள‌ர‌
வார‌ம் முழுவ‌தும்
பெண்க‌ளும் குழ‌ந்தைக‌ளும்
தூக்க‌ம் தொலைத்து
வ‌ட்ட‌வ‌ட்ட‌மாய்
கும்மி கொட்டுவார்க‌ள்

ஏழாம் நாள் திருவிழா
வாழைத் தோர‌ண‌ங்க‌ள்
ம‌கிழ்ச்சியாய் வ‌ர‌வேற்கும்
பிரமாண்ட க‌ட் அவுட் அம்ம‌னுக்கு
யானைக‌ள் ப‌ல்புக‌ளான‌
வ‌ண்ண‌ பூக்க‌ள் அள்ளி வீசும்!

வ‌ண்ண‌ வண்ண‌ காகித‌ தோர‌ண‌ங்க‌ளால்
தெருவின் நிற‌ம் மாறி நிற்கும்
தெருவில் ஓடும் சாக்க‌டைக‌ள் - த‌ற்காலிக‌மாய்
ம‌ண் போட்டு ச‌ரிசெய்ய‌ப்ப‌டும்
விள‌க்குக‌ளால்
தெருக்க‌ள் பிர‌காசிக்கும்.

தீச்சட்டிகள், பால்குடங்கள்
சாரை சாரையாய் வரும்.
பக்தி பிரவாகத்தின் அதிர்வில்
உடல் நடுங்கும்

பாலாபிசேகம், சந்தனாபிசேகம்,
விதவிதமான அபிசேக‌ங்கள்
அம்மனை குளிப்பாட்டும்.
ஆடுகள், சேவல்கள்
பலியிடப்படும்.
பழைய வேண்டுதல்கள்
புதுப்பிக்கப்படும்.
புதிய வேண்டுதல்கள்
கோரப்படும்.

அலங்காரங்களுடனும்

ஆர்ப்பாட்டத்துடனும்
ஆட்டம் பாட்டங்களுடனும்
ஊர்வலமாய் போய் ஆற்றில்
முளைப்பாரி கரைக்கப்படும்.

மறுநாள் சிரிப்பு பட்டிமன்றம்
மறுநாள்
நவீன ரிக்கார்ட் டான்ஸ்
திரையுலக ஜாம்பவான்களின்
தளபதிகளின் போலிகள்
ஆட்டம் போடுவார்கள்.
மறுநாள் இன்னிசை நிகழ்ச்சி.

பரபரவென பத்துநாட்கள்
பறந்துவிடும்
ப‌தினோராம் நாளில்
திடீரென‌ தோன்றிய‌தெல்லாம்
காணாம‌ல் போகும்

இருப‌தாம் நாளில்
கோவிலின் க‌ரும்ப‌லகை
க‌ட‌ந்த‌ ஆண்டு கையிருப்பு ரூ. 840
வீடுக‌ள் மூல‌ம் வ‌சூல் ரூ. 364700
ந‌ன்கொடை மூல‌ம் ரூ. 115000
மொத்த‌ம் ரூ. 480540
அனைத்து செல‌வுக‌ள் ரூ. 480400
கையிருப்பு ரூ. 140 என
செய்தி அறிவிக்கும்.

மீண்டும்...அதே ஐந்த‌டி உய‌ர‌த்திண்டு
கொஞ்ச‌ம் இளைத்துப்போன‌
சூல‌ம்.
புதிய‌ மூன்று
எலும்பிச்சம் ப‌ழ‌ங்க‌ள் ‍- அதில்
கொஞ்ச‌ம் குங்குமம் என
வெயிலிலும், மழையிலும்
'அம்ம‌ன்' வ‌ருட‌ம் முழுவ‌துக்குமான‌
த‌ன் பய‌ண‌த்தைத் தொட‌ரும்!

****

தலைப்புக் குறித்த பின்குறிப்பு :

கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தெருக்கோடி அம்மனும், 'ஜனநாயகத்தை'
காப்பாற்றும் பரிதாப வாக்காளனும் சமமாக தான் நடத்தப்படுகிறார்கள். நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்?

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

kalagam said...

....................

இலவசம்
இலவசம் இலவசம் எல்லாமே இலவசம்
பாக்க கலர் டிவி பொங்கித்தின்ன சோறு
மானக்கேடு கூட இலவசம்
கருணாவின் ஆட்சியில்
ஏன் தினவெடுத்து திரிபவனுக்கு
காண்டம் கூட மலிவு விலையில்


சிரிக்கிறான் சங்கராச்சாரி
கடவுளுக்கு காண்டமா?
அவனின் நாத்தச்சிரிப்பில்
ஓடுகிறாள் பாரதமாதா
நேத்து பாடுபட்ட மாதாவுக்கு
தானே தெரியும்
கள்ள சிரிப்பின் அர்த்தம்…..


நாயாகி பேயாகி
மலந்தின்னும் பன்னியாகி
எல்லாமும் எல்லாமுமாகி
கடைசி அவதாரம் தான்
அம்மா சாதா அம்மாஅல்ல
ஈழத்தம்மா - ஈழத்தை
பிரசவிக்க ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மடல்
பிரசவம் பார்க்க மருத்துவர் அய்யா
மூத்திரம் அள்ளிப்போட
போட்டியோபோட்டி
அட எட்டிப்பார்த்தால்
பாண்டிக்கும் வாண்டிக்கும்
குடுமிப்புடி சண்டை
புயலண்ணன் கையை பிசைய
மருத்துவர் சொன்னார்
ஆண் குழந்தை பொறந்திருக்கு
ஆச்சரியமாய் உள்ளே போனால்
அடேங்கப்பா பொறந்திருப்பது
ராஜ பக்சேவாம்
............

http://kalagam.wordpress.com/