> குருத்து: பிள்ளைப் பூச்சிகளை பிடித்து வதைக்கும் அரசியல் போலீசார்!

June 18, 2009

பிள்ளைப் பூச்சிகளை பிடித்து வதைக்கும் அரசியல் போலீசார்!

சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சந்திப்பில் உள்ள ஒரு பொட்டிக்கடை அது. வழக்கம்போல இந்த மாதமும் புதிய ஜனநாயகம் மாத அரசியல் இதழை கொடுக்க போயிருந்தேன். கடந்த மாதம் கொடுத்திருந்த ஐந்து இதழ்களையும் அப்படியே தந்தார். ஐந்து இதழ்களும் விற்ககூடிய கடையாயிறே! "ஏன்?" என கேட்டேன்.

சொல்ல தயங்கினார். ஐந்து இதழ்களும் விற்காமல் வீணாகி போனதே என்ற ஆதங்கம் எனக்கு. மீண்டும் கேட்டதற்கு... "பிரச்சனையாகிவிட்டது" என்றார்.

"என்ன பிரச்சனை?"

கடந்த மாதம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்து... விற்பனைக்கு கொஞ்சம் புத்தகம் தந்தார்கள். புத்தகங்களை பார்வைக்கு வைக்க அவர்களே ஒரு சின்ன ஷோ-கேஸ் மாதிரி தந்தார்கள். அதில் புத்தகங்களை அடுக்கி வெளியில் பார்வைக்கு வைத்திருந்தேன். ஈழம் பேசப்படுவதால்.. நன்றாக விற்குமே என்ற எண்ணத்தில்.. பிரபாகரன் குறித்த இரண்டு புத்தகங்களை புத்தக வரிசையில் முதலில் வைத்திருந்தேன்.

இப்படி வைத்த இரண்டாவது நாள் மப்டியில் இருந்த போலீசு வந்து... "உங்க மேலே கம்பைளைண்ட் வந்திருக்கு! விசாரிக்கனும். கூட வர்றீங்களா!" என அழைத்தார். அப்பாவை கடையில் நிற்க வைத்து போனேன். காலையிலிருந்து மாலை வரை விசாரித்தார்கள். அடுத்தடுத்த இரண்டு நாள்களும் இதே மாதிரி தொடர்ச்சியாக விசாரணை. விசாரணைக்கு வர வில்லையென்றால்... என்ற மிரட்டல் வேறு.

நான் யார்? எங்கே பிறந்தேன்? என் குடும்ப பின்னணி என்ன? என் சொந்தகாரன் எங்கெல்லாம் இருக்கிறார்கள்? .. என்கிற ரீதியில்.. என் மொத்த ஜாதகத்தையும் கிளறிவிட்டார்கள்.

"நீங்க சொல்ல வேண்டியது தானே! கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களைத் தானே விற்கிறேன்" என நீங்கள் கேட்டிருக்கலாமே! என்றேன் நான்.

அதை சொன்னதற்கு... புத்தகத்தை வெளியிட்டது அவங்க! உன்னை விற்க சொன்னது யார்? என்றார்கள்.

மூன்றாவது நாள்... 'இனி இப்படி புத்தகங்களை விற்காதே!" என மிரட்டி அனுப்பினார்கள். முதல் நாள் அப்பா பார்த்துகொண்டார். இரண்டு நாள் கடையை மூடிவிட்டு போனேன். இரண்டு நாள் பொழப்பு கெட்டுப்போச்சு!

நல்ல வேளைக்கு கடைக்குள்ளே கிழக்கு பதிப்பகத்தோட 'அல்கொய்தா'ப் பற்றிய புத்தகம் வைத்திருந்தேன். அது அவங்க கண்ணுல படல! பட்டிருந்துச்சு... நான் ஒரு முஸ்லீமாகவும் இருக்கிறதனால... என்னை காலி பண்ணியிருப்பார்கள்."

இதை விவரிக்கும் பொழுது... வருத்தம், கோபம், விரக்தி என அவர் முகத்திலும், பேச்சிலும் வெளிப்பட்டது.

***

ஈழத்திற்கு உருகு உருகு உருகிற கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தான், கிழக்குப் பதிப்பகம் புத்தகங்களை விற்றதற்கே... மூன்று நாள் ஒரு பொட்டிக்கடைகாரரை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்து இருக்கிறர்கள்.

இங்கு விடுதலைக்கான இயக்கங்கள் வளர வேண்டும். அப்பொழுது தான் இந்த அரசு, அரசியல் போலீசார் (க்ரைம் போலீசு = ரகசிய போலீசு) எல்லாம் வாலைச்சுருட்டி அடங்கியிருப்பார்கள்.

அப்படி வளராத வரை... இப்படி பிள்ளை பூச்சிகளை பிடித்து... "சரோஜா படத்தில் கேனை மண்டையில் தட்டி விசாரிப்பார்களே!" அது மாதிரி, வதைத்து கொண்டுதான் இருப்பார்கள்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

இந்த பிரபாகரன் பற்றிய புத்தகம் லேண்ட்மார்க் கடையில் ஹாட் செல்லிங் விற்பனை பிரிவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாம்.. விற்பனையும் படு ஜோர்.. ஒரு மாதத்தில் 6000 பிரதிகளுக்கு மேல் விற்றுத்தீர்ந்து விட்டனவாம்.. எளிய பெட்டிக்கடைகாரரைப் பிடித்துக் கொண்டு போன இந்த அரசியல் போலிசார் அங்கேயும் போய் விசாரணை செய்வார்களா?.. இதுதான் தமிழ்நாட்டுல-இல்லை இல்லை- இந்தியாவில் ஜனநாயகம்....