> குருத்து: வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!

July 3, 2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!


//இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.//

கூலித்தொழிலாளர்களை கொன்றது சுடுநெருப்பா? லாப வெறியா? என்ற கட்டுரையிலிருந்து...

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!

சமீப காலங்களில் சென்னையில் பார்க்கும் பல தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்களின் முகங்கள் அதிகமாக தென்படுகின்றன. பல உணவகங்களில் அவர்கள் உணவு பரிமாறுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். சொந்த மாநிலம் எது என அவர்களிடமே கேட்டால்... பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம், நேபாளம் என்கிறார்கள்.

கடந்த வாரம் தினமலர் இதழில் இது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியில் இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 150 வரை சம்பளம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது அதிகம். நான் செல்லும் தொழிற்சாலைகளில் தினசரி கூலி ரூ. 100 தான் கொடுக்கப்படுகிறது.

முதலாளிகளும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் - அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த கூலிக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதலாக வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை செய்கிறார்கள். முக்கியமாக தொழிலாளிக்குரிய உரிமைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது போதாதா நம் முதலாளிகளுக்கு!

இந்த தொழிலாளர்களிடம் நெருங்கி விபரம் கேட்டால்.. வயது 16, 18, 20 என்கிறார்கள். கையெழுத்து போடும் அளவுக்கு இவர்களில் பலர் படித்திருக்கிறார்கள். இந்த ஒரு விசயத்திற்காக, சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தியா இப்படியொரு சாதனையை படைத்திருப்பதை பார்த்து, ஒரு "இந்தியனாக" மிகவும் நெஞ்சு நிமிர்த்தி கொள்ளலாம் நாம். இள வயதிலேயே திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என விசாரித்தால்.. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குடிபெயர்ந்து இங்கு வேலை பார்த்த பலர் இப்பொழுது வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, ஊரில் உள்ளவர்களை இங்கு அழைத்துவந்து... பல நிறுவனங்களுக்கு ஆள் சப்ளை செய்து, லட்சகணக்கில் சம்பாதிக்கும் தரகனாக பரிணமித்துவிட்டார்கள்.

இவர்களைப் பற்றி... இப்படி கதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில கதைகள் நெஞ்சை உருக்குபவை. வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் நாமக்கல்லில் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலையில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் 17 தொழிலாளிகள் கருகி மாண்டார்கள். அதில் 16 தொழிலாளிகள் பீகார் தொழிலாளிகள். இது குறித்து விரிவாக வந்த புதிய ஜனநாயக கட்டுரையை நீங்கள் படித்திருக்க கூடும்.

இப்படி தனது சொந்த கிராமத்தை விட்டு, நாளும் இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கியும், சிறு நகரங்களை நோக்கியும் வெளியேறிகொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நேரமேயில்லை. அவர்கள் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் விற்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். வந்த உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு விட்டு... தன் எஜமானமர்களிடமிருந்து வரும் அடுத்த உத்தரவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்... உத்திரபிரதேச தலித் முதல்வரான மாயாவதி.. மன்னிக்கனும் இந்திய அல்லது உலக தலித்களுக்கு தலைவரான மாயாவதி.. அரசு பணத்தில் ஆயிரம் கோடிகளில் சிலைகள் நட்டுக்கொண்டிருக்கிறார். இது ஆபாசத்தின் உச்சம்.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை