> குருத்து: லாபம் தனியார்மயம்! நஷ்டம் தேசமயம்!

July 15, 2009

லாபம் தனியார்மயம்! நஷ்டம் தேசமயம்!


நன்றி : கீற்று

முன்குறிப்பு : சில மாதங்களுக்கு முன்பு, உலக பொருளாதார மந்தம் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதி குருத்து -ல் வெளிவந்த பொழுது... குப்பன் யாஹூ என்பவர், ஜுன் 2009க்கு பிறகு, இந்த கட்டுரைகளைப் படித்தால், சிரிப்பு வரும் (நிலைமை சரியாகிவிடுமாம்!) என பின்னூட்டமிட்டிருந்தார். நாம் சொல்லியபடி நிலைமை சரியாகவில்லை என உலக நிலைமைகளும், இந்திய நிலைமைகளும் நிரூபிக்கின்றன. இந்த கட்டுரை அந்த உண்மைக்கு வலு சேர்க்கிறது. முதலாளித்துவத்தால் எழுந்த இந்த மாபெரும் பொருளாதார மந்தத்தின் மூலம் பெரிய பெரிய முதலாளிகள் பல்வேறு வகைகளில் இன்னும் கொழுத்த லாபம் சம்பாதித்திருக்கிறார்கள். அப்படியே நஷ்டம் எழுந்தால், அதை அரசு தலையிலும் (பெரும்பான்மை மக்கள் தலையிலும்), தொழிலாளர் தலையிலும் போட்டு தப்பித்திருக்கிருக்கிறார்கள். முதலாளித்துவம் தனக்கு வந்த நெருக்கடியை கூட தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கிறது. நமக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. போராட்டம் தவிர நமக்கு வேறு வழியுமில்லை.

****

தென்னை மரத்தில் தேள்கடித்தால் பனைமரத்தில் நெறிகட்டுமாம் - ஜி.சேகர்

1980ல் உருவாக்கப்பட்ட ஒசூர் தொழிற் பேட்டையில் 2000 அல்லது சற்று கூடுதலான தொழிலாளர் பணிபுரியக்கூடிய அசோக் லேலண்ட், டிவிஎஸ், பிரிமியர் மில்ஸ், டைட்டான் போன்ற பெரிய நிறுவனங்களும், அவற்றை நம்பி 200 - 500 பேர்வரை பணி புரியக்கூடிய ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் உருவாகின.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை யால் 1990 முதல் 2000க்குள் 135க்கும் மேற் பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சத்திற்கும் மேலான நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். மத்திய அரசின் இறக்குமதி கொள்கையால் உற்பத்தியில் மற்றநாடுகளுடன் போட்டியிடவும் வியாபாரம் செய்யவும் முடியவில்லை என்று நிர்வாகங்கள் கூறின.

முழுமையாக காசுவல் (Casual), காண்ட்ராக்ட்மயம், தொழிலாளர் சட்டங்களான -குறைந்தபட்ச ஊதிய சட்டம்- சம்பள பட்டுவாடா சட்டம்- தொழில் தாவா சட்டம்- காண்ட்ராக்ட் தொழிலாளர் சட்டம் போன்றவற்றை மாற்றியமைக் கும் இரண்டாம் தலைமுறை சீர்த்திருத்தங்களை நிர்வாக மற்றும் சித்தாந்தரீதியாக மத்தியஅரசு அமல்படுத்தியது.

2005 முதல் சில புதிய தொழிற்சாலைகள் சிப்காட் பகுதிக்கு வந்திருந்தாலும், வேலை வாய்ப்பு சில நூறு பேருக்குதான். அவர்களிலும் பெரும்பாலோர் காண்ட்ராக்ட்தான். தொழிலாளரை சப்ளை செய்ய சட்டரீதியாக பதிவு செய்த 135 ஏஜன்சிகள் ஒசூரில் உள்ளன. இதுதவிர சட்டத்தை ஏமாற்றி தொழிலாளர் துறைக்கு தெரிந்தே நூற்றுக்கு மேற்பட்ட காண்ட்ராக்ட் ஏஜண்டுகளும் உள்ளனர். டிப்ளமோ, இன்ஜினி யரிங் படித்தவர்கள்கூட இந்த ஏஜெண்ட்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். கடந்தகாலங்களில் தோட்ட பராமரிப்பு, செக்யூ ரிட்டி போன்ற வேலைகளுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் இன்று நேரடியாக மிஷினை ஓட்டுவது உள்ளிட்ட உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

ராஜ்ஸ்ரீயா கிளையன்றில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதமேயான ஒரு பெண்ணை ஆபத்தான, பாதுகாப்பற்ற இயந்திரத்தை ஓட்ட வைத்துள்ளனர். விளைவு, 3 மாதங்களுக்கு முன் மிஷின் வெடித்து அந்த விதவை உயிரிழந் தார். டிடிகே உள்ளிட்ட சில கம்பெனி தொழி லாளர்கள்
அந்த தொழிற்சாலைக்கு முன் பிணத்தைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தும் பலனில்லை. அவரது இரு குழந்தைகளுக்கும் நிவாரணம் தர மறுத்துவிட்டது நிர்வாகம். மருத்துவத்திற்கு லட்சம் வரை செலவழித்த தாகவும் அதற்கு மேல் முடியாதென்றும் கூறிவிட்டது.

இப்படி ஆபத்தோடும், பாதுகாப்பற்ற சூழலிலும், சட்டப் பாதுகாப்பு இல்லாமலும் மிகக் குறைந்த ஊதியத்தில் முன் அனுபவம் இல்லாத ஒரு லட்சம் கிராமத்து வாலிபர்கள், வெளி மாநிலத்தவர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக ஒசூர் பகுதியில் உள்ளனர். இதுபோன்று விபத்துகளில் பலியான 50க்கும் மேற்பட்டோர் அநாதைப் பிணங்களைப் போல் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

பாகலூர் பிரிமியர் மில்லில் 1200 நிரந்தரத் தொழிலாளர்கள் 2000த்தில் வேலை செய்து வந்தனர். தற்போது அவ்வளவு பேரையும் துரத்திவிட்டு சட்டத்திற்குப் புறம்பாக மூன் றாண்டு ஒப்பந்த தினக்கூலியாக சுமார் 1000 பெண்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். கைதிகளைப்போல் மில்லுக்குள்ளேயே தங்க வைக்கப்படும் இவர்கள், 3 ஆண்டுகளுக்குப் பின் ரூ.35000 கொடுத்து வேலையைவிட்டு அனுப்பப்படுகிறார்கள். திருமண வயது வந்து வசதியற்ற ஏழைப்பெண்களை குறிவைத்து அவர்களது தாய் தந்தைக்கு ஆசைகாட்டி வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பணிக்காலத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனை காரணம் காட்டி ரூ.35ஆயிரத்தை பிடித்துக் கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இதே பகுதியிலுள்ள ஏசியன் பேரிங் தொழிற் சாலையில் 700பேர்வரை பணி புரிந்துவந்தனர். மூடப்பட்டு இரண்டு வருடங்களாகிறது.

வறுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். உளைச்சலில் ஹார்ட் அட்டாக்கிலும், பழக்கமில்லாத கட்டிட வேலைக்கு சென்று விழுந்தும் இறந்தவர்களை சேர்த்தால் 50பேர் வரை இருக்கும். இந்தச் சூழலில் தற்போதைய அமெரிக்க நெருக்கடியை காரணம் காட்டி தொழிலாளர் வாழ்வு சூறையாடப்படுகிறது.

2007-08ல் லேலண்டின் மொத்த வண்டி (சேசிஸ்) உற்பத்தி 84,006. இதில் உள்ளூர்
மார்க்கெட்டில் விற்பனை 76,023. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வெறும் 7,686 வண்டிகள். 2008-09ல் 48,483 வண்டிகள். இதில் உள்ளூரில் 40,536, வெளிநாடுகளுக்கு வெறும் 5,565 வண்டிகள். அதுவும் சிலோன், பங்களா தேஷ், துபாய், ஓமன், தான்சானியா, நைஜீரியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குதான் ஏற்று மதி. இதில் அமெரிக்கா இல்லை. எனில், அமெரிக்க நெருக்கடியை காரணம் காட்டுவதன் நோக்கம் என்ன? சுமார் 85% விற்பனை இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் போது நெருக்கடி எப்படி வரும்?

25 ஆண்டுகாலமாக பல்லாயிரம் கோடி லாபம் சம்பாதித்த மல்டிநேஷனல் நிறுவனம் லேலண்ட். 2008 செப்டம்பர் முதல்தான்- அதுவும் கடந்த ஆறுமாதமாகதான் பொருளா தார நெருக்கடி தீவிரமடைந்தது. எனில் இதுவரை சம்பா தித்த லாபம் எங்கே? இந்த நெருக்கடியை நிர்வாகம் ஏற்க முடியாதா? கிடைக்கும் தகவல்கள், லேலண்ட் நிர்வாகம் தொழிலாளர்களை பட்டினிப் போட்டு அவர்களாகவே வேலையைவிட்டு ஓடும் நிலையை உருவாக்குகிறதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

லேலண்டைப் போல டிவிஎஸ்சும் நெருக்கடியைக் காட்டி அப்ரண்டீஸ், தினக்கூலி, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிலநூறு பேரை நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 300பேர் வரை கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது,முதலாளிகள் லாபத்தை தனியார்மயமாக்குகிறார்கள், நஷ்டத்தை தேசவுடமை யாக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது நமக்கு.

பெரும்பாலான மற்ற தொழிற்சாலைகளில் புதிய ஊதிய ஒப்பந்தங்கள் போடப்படவில்லை. பழைய ஊதிய விகிதங் களே தொடருகிறது. பதவி உயர்வு- பணி நிரந்தரம்- பெற்று வந்த சலுகைகள்- பறிப்பு, சம்பள வெட்டு உட்பட வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக அமுலாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நிலையோ பரிதாபம். எதிர்க்கவும் முடி யவில்லை, ஏற்கவும் மனமில்லை. பொதுவாக எதிர்கால வாழ்க்கை அவர்களை மிகவும் பயமுறுத்துகிறது.

சிறு, குறுந்தொழில்கள் :

ஒசூர் பகுதியில் சுமார் 1500 சிறுகுறுதொழிற்பட்டறைகள் உள்ளன. இதில் நிரந்தரத் தொழிலாளர் 20 % என்றால் 80% காண்ட்ராக்ட். அதில் சரிபாதி இந்தி, அசாம் மொழி பேசக் கூடிய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

லேலண்ட், டிவிஎஸ் கம்பெனியின் ஆர்டர்களை நம்பி 80% தொழிற்சாலைகள் சிப்காட் பகுதியில் உள்ளன. தற்போது நெருக்கடி காரணமாக சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடப்பட்டு 50 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சொந்த பணத்தையும் வங்கிக் கடனையும் கொண்டு ராஜேஸ்வரி லே அவுட், சிப்காட், சிட்கோ பகுதிகளில் சிறுதொழில் நடத்தக்கூடிய அனேகர் இப்போது கடனுடன் வீதியில் நிற்கின்றனர்.

ஆனால் தொழில் நடந்தபோது மத்திய அரசுக்கு கலால் வரி யாக 2006-07ல் ரூ1661கோடி. 2007-08ல் ரூ.1330 கோடி கட்டப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும் 200கோடி வரியாக கட்டப்பட்டுள்ளது.ஒசூர் சிறுதொழில் முனைவோர் அமைப்பான ஹோஸ்டியா பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் மத்திய நிதி மந்திரி, ரிலையன்ஸ் அம்பானியின் குடும்பத்தில் சண்டை என்றதும் உண்ணா மல் உறங்காமல் உடம்பும் மனமும் பதற ஓடிவந்து தீர்த்து வைத்துள்ளார். இது அவரின் வர்க்கப் பாசம். மந்திரியாக ஆக்கப்பட்டதற்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளார்.

ஒசூரில் தொழில் வளர்ந்தபோது, ஓட்டல்கள், வியபார நிறுவனங்கள், சாலைகள், கட்டிடங்கள், புதிய புதிய குடியி ருப்புகள், நிலங்களின் விலை உயர்ந்தது. நகரம் வளர்ந்தது. அப்போது ஒசூருக்கு அடிக்கடி வந்த மந்திரிகள் இப்போது ஏற்றப்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆறுதல் கூற, புதிய வழி காட்ட வருவதில்லை. ஒசூர் நகரம் வளர்ந்த சூழ்நிலைக்கு ஈடாக வளராதவர்கள், வறுமை, கடன்பிடியில் உள்ளவர்கள் எதிர்கால வாழ்க்கையை நினைத்து பயந்து வாழ்பவர்கள் ஒசூர் தொழிலாளர்களே. மேற்கண்ட நெருக்கடியிலிருந்து நிர்வாகங்கள் மீண்டுவிடும். உண்மையிலேயே நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் சில மாதங்களிலேயே சம்பாதித்து விடுவார்கள். ஆனால் தொழிலாளர்கள் இழந்த சம்பளம், அதனால் ஏற்பட்டுள்ள புதிய கடன் ... அதை அடைக்க அவர்கள் பல வருடங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

சுதந்திர வர்த்தக முதலாளித்துவமுறை உணர்வற்றதாகவும் இதயமற்றதாகவும் மாறிவிட்டது. அது மனிதாபிமானத்தை யும், மதிப்புமிக்கத்தன்மைகளையும் இழந்துவிட்டது. சுதந்திர வர்த்தக முதலாளித்துவ முறையில் இயங்கும் இந்த அமைப்பின் மனித முகமூடியை கழற்றிவிட்டால் அது பயங்கரவாதத்தைப் போன்றே குரூரமானது, சுயநல நோக்க முடையது என்பது வெட்ட வெளிச்சமாகும். இத்தகைய சுதந்திரம் நீடிப்பதை அனுமதிக்கக்கூடாது என ஒசூர் பகுதி தொழிலாளர்களும் குறு,சிறுதொழில் முனைவோர்களும் களமிறங்குவது தவிர்க்க முடியாதது.***

ஆறு மாதங்களாக லேலண்ட் நிறுவனம்

மாதத்திற்கு 12 நாட்கள்தான் வேலையென்று உற்பத்தி குறைப்பு செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்சென்டிவ் இழப்பு மட்டும் மாதம் ரூ.4000.(சம்பள இழப்பு பிற்பாடு தெரியும்). வீட்டுக்கடன், வங்கிக்கடன், சொஸைட்டிக்கடன், கல்விக்கடன் என்று பல கடன்களில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் ஜீரோ வாகிவிட்டது. ஒசூர்-1 லேலண்ட்டில் பணிபுரியும் 2300 பேரில் ஏறக் குறைய 900 தொழிலாளர்கள் ஜீரோவில் இருந்து வருகின்றனர்.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பாவில் மந்தம், இந்தியா விலும் வாகனச்சந்தை சரிவு என்று லேலண்ட் நிர்வாகம், தொழிலாளர் களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 18மாத காலமாக இழுத்தடித்து வருகிறது. ஆட்குறைப்புக்கான ஒப்பந்தம் போட அது பார்க்கிறது. மந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிர்வாகம் 2008-2009 ஆண்டு 150கோடி ரூபாய்க்கு மேல் லாபமடைந்துள்ளது.

பணி முடிந்து வீடு திரும்புகிறார் தொழிலாளி. வீட்டுக்குள் கனத்த அமைதி. சில மாதங்களாக வீடு இப்படித்தான் இருக்கிறது. சமையலறை யில் மனைவி இருக்கும் சத்தம் கேட்டது. பாத்திரங்கள் உருட்டும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு அறையில் இரண்டு மகள்களும் படித்துக்கொண்டிருக்கும் அல்லது மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் முணுமுணுப்பு. வீட்டுக்குள் இவர் வந்ததற்கான எந்த அசைவுகளும் இல்லை. சீருடையைக் கழற்றாமல் ஹாலிலுள்ள சோபா வில் அமர்ந்து சிறிதுநேரம் விட்டத்தை வெறித்தபடி இருக்கிறார். மெல்ல ரிமோட்டை எடுத்து டி.வியை உயிர்ப்பிக்கிறார். உடனடியாக அவரின் மனைவி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“டி.வியை ஆஃப் பண்ணுங்க, பசங்களுக்கு பரிட்சை, படிக்கறாங்கல்ல” என்றாள். இவர் நிமிர்ந்து மனைவியைப் பார்கிறார். ஒரு நொடிதான், டி.வி. ரிமோட்டை ஓங்கி சுவரில் எறிகிறார். அது தூள்தூளாகிறது.

“ச்சே, கம்பெனியிலும் நிம்மதியில்ல, வீட்லயும் நிம்மதியில்ல” என்று கைகளால் தன் தலையில் அறைந்தபடி பெருங்குரலெடுத்து அழுகிறார். கணவனின் செய்கையில் அதிர்ந்து போய் நிற்கிறார் மனைவி. அறையில் படித்து கொண்டிருந்த பிள்ளைகள் ஓடிவந்து அப்பனின் கோலத்தை பார்த்து பயந்து அம்மாவை கட்டிக்கொண்டு அழுகின்றனர். அவளும் அழுகிறாள்.

இரவெல்லாம் கண்விழித்து யோசித்து இறுதியாக அவர் முடிவு எடுத்தி ருந்தார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக. மூன்று நபர்களுக்கு அந்த முடிவை கடிதங்களாக எழுதி சேர்ப்பித்தார். 1.சங்கத் தலைவர், செயலாளர், 2.நிறுவனத்தின் பர்சனல் மானேஜர், 3.வைப்புநிதி காப்பாளர் (றிதி ஜிக்ஷீustமீமீ): இந்நிறுவனம் இனி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றப் போவதில்லையென்றும், ஒன்றரை ஆண்டாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் சங்கம் கையாலாகாதி ருப்பதாகவும், தான் மிகவும் கடனாளியாகிவிட்டதாகவும், இனி யாரிட மும் கேட்க முடியாதென்றும், மகளின் கல்லூரிக் கட்டணத்திற்கும் அன் றாட குடும்ப செலவுகளுக்கும் பணமில்லாமல் தான் துன்புறுவதாகவும் ஆகவே தன் வைப்புநிதியை தனக்கு தந்துவிடுமாறும், அது ஒன்றே ஜீவாதாரம் என்றும் மறுத்தீர்களென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் இருந்தது கடிதத்தில். பின் அவர் சமாதானப்படுத்தி வைக்கப்படுகிறார்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொடுத்தது போதாதென்று அவ்வப்போது ஐடியாக்களையும் அள்ளி வழங்கி நிறுவனத்தால் பாராட்டப்பட்ட தொழிலாளி நிறுவனத்திடம் பல பட்டயங்களையும், பரிசுகளையும் வாங்கியவர். ஒருநாள் திடீரென்று தான் கடனாளியென் றும், சம்பளக் குறைவும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் நிறுவனம் இழுத்தடிப்பதாலும் இனி வாழ வழியில்லை என்றும் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் நிர்வாக மேலதிகாரியிடம் கடிதம் கொடுத்தார். நிறுவனம் அவரைக் கூப்பிட்டு கவுன்சிலிங் செய்து இன்னும் ஆறு மாதகாலம் பொறுத்துக்கொள்ளும்படியும், பிறகு நிலமை சீரடையுமென்றும் கூறி அவரது சாவை ஆறுமாதம் தள்ளி போட்டுள்ளது.

நிறுவனத்தில் தொழிலாளிகள் ஓய்வெடுக்கும் பகுதியாக லாக்கர் ரூம் என்ற கட்டிடம் உண்டு. அதன் உத்திரத்தில் சில மின்விசிறிகளும் உண்டு. ஒருநாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு தொழிலாளி இயந்தி ரத்தை நிறுத்திவிட்டு லாக்கர் ரூமுக்கு செல்கிறார். ஒரு மின்விசிறியை தேர்ந்தெடுத்து கயிறை மாட்டும்போது அங்கே வந்த ஒருவரால் கையும் கயிறுமாக மாட்டிக் கொள்கிறார். பிறகு சத்தம்போட்டு சங்க நிர்வாகி ஓடி வந்து.... செக்யூரிட்டி ஓடி வந்து...

பின்குறிப்பு- பின்னர் நிர்வாகம் ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. இதற்கெல்லாம் காரணம் மின்விசிறிதானென்று. லாக்கர் ரூமில் உள்ள அனைத்து மின்விசிறிகளையும் கழட்டிவிட முடிவெடுத்தது. நிர்வாகம் மின் விசிறிகளை கழற்றிக் கொண்டிருக்கும்போது சங்கம் கடுமையாக தனது ஆட்சேபத்தை தெரிவித்தது. நிர்வாகம் கழட்டுவதை நிப்பாட்டியுள்ளது. பின் யாரொருவர் லாக்கர் ரூம் சென்றாலும் கண்காணிக்க ஆள் போட்டுள்ளது.

தூக்கமில்லாமல் இரவு 11மணிக்கு மேல் குடியிருப்புப் பகுதியில் யாருமற்ற தெருக்களில், யாராவது அலைந்து கொண்டிருந்தாலோ, கரிய இருட்டு இடுக்குகளில் அமர்ந்திருந்தாலோ, தெரு கரண்ட் கம்பத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாலோ, தனக்குள் பேசியபடி செல்லும் ஒருவரை நீங்கள் காண நேர்ந்தால் அவர் லேலண்ட் தொழிலாளியாக தான் இருப்பார்.

- என்.கோபால்

2 பின்னூட்டங்கள்:

ஐந்திணை said...

சூப்பருங்க

kalagam said...

உண்மையில் இக்கதைகளை முழுவதும் படிபதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது.வருத்தம் வருத்தமாக இருக்கும் வரைதான் தற்கொலைகள் உதிக்கின்றன. அது சினமாக பெருந்தீயாக உருவெடுக்கும் போது தற்கொலைகள் என்றால் அது முதலாளிகளுக்கானதாகிவிடும். அப்போது சட்டத்துக்கு கட்டாய ஓய்வுதரப்படும்.சம்மட்டியடித்த கைகளுக்காக பல தலைகள் காத்திருக்கின்றன. என் பாட்டாளியே சுருக்குக்கயிறை பத்திரமாக வைத்துக்கொள். முதலாளித்துவ பயங்கரவாத வெறி நாய்கள் திரிகின்றன.

கலகம்

http://kalagam.wordpress.com/