December 13, 2010
தீண்டாத வசந்தம் - புத்தக அறிமுகம்!
எப்பொழுதும் படிக்கின்ற ஆள் இல்லை நான். ஆனால் எப்பொழுதாவது படிப்பேன். அப்படி ஒரு நாள் தோழர் இராமநுஜம் கொடுத்த ஒரு நாவல் படித்தேன். பெயர் - தீண்டாத வசந்தம். தெலுங்கில் ஜி.கே. கல்யாணராவ். அதை அழகாக தமிழில் தந்துள்ளார் எ.ஜி. எத்திராஜீலு.
இந்த நாவல் படிக்க ஆரம்பித்தவுடன் வேகமாக படிக்க தூண்டியது. ஆனால் படிக்க, படிக்க ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படி எல்லாம் கூட சக மனிதர்களை, மனிதர்களை கேவலமாக நடத்த முடியமா என்று.
இந்நூல் முழுக்க தீண்டாமையும், அதன் கொடுமையும் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் ஏறக்குறைய 5 தலைமுறையின் தலித் மக்களின் அவல வாழ்க்கை குறித்து சொல்லப்பட்டுள்ளது.
எனக்கு பள்ளியில் படித்த காலங்களில் வரலாறு அவ்வளவாக வராது (அவ்வளவாக வராதா - அவ்வளவும் வராதா?) ஆனால் இந்த புத்தகம் படித்ததும் எனது முன்னோர்களின் வரலாற்றை படித்த உணர்வு என்னுள் எழுந்தது.
இந்நூலில் வரும் நாயகன், அவ்வூரில் உள்ள தீண்டாமை கொடுமையை மீறி அழகான பாடல்கள் இயற்றியும் தெருக்கூத்துக்கள் நடத்தியும் தன் இனம் சார்ந்த மக்களை மகிழ்விக்கிறான். ஆதிக்க சாதியினர் மட்டும் அருகில் அமர்ந்து பார்த்த மகிழ்ந்த தெருக்கூத்துக் கலையை எட்ட இருந்து கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட தன் இனமக்களுக்காகவே அக்கலையை கற்று பல பாடல்கள் இயற்றி, தெருக்கூத்துக்கள் நடத்துகிறான்.
தீண்டாமையின் கோர முகம், கொடுமை இந்நூல் படிப்பவர்களின் இதயத்தில் வலி ஏற்படுத்துவதை தவிர்க்க இயலாத ஒன்று. இந்நூலில் நாயகனின் மகனும், அவனது மனைவியும் (பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்) பஞ்சத்தால் படாத படுகிறார்கள். பஞ்சம் என்றால், மக்கள் உணவு இல்லாமல், பட்டினியால் கொத்து, கொத்தாக செத்து போகிறார்கள். தன் கண் முன்னே பட்டினியால் இறந்து போன தன் தாத்தா பாட்டி, அப்பா அம்மா ஆகியோரை தன் சொந்த ஊரில் புதைத்து விட்டு, வேறு ஊருக்கு வேலைதேடி செல்கிறான். வழியில் அவன் மனைவி நோய்வாய்பட அவளை எப்படியும் காப்பாற்றிட வேண்டும் என எண்ணி பாக்கிங்காம் கால்வாய் தோண்டும் இடம் நோக்கி நடந்தே செல்கிறான். வழியெல்லாம் மக்கள் பட்டினியால் பஞ்சத்தால், செத்துக்கிடக்கின்றனர். படாத பாடுபட்டு அங்கு சென்று அங்குள்ள மேஸ்திரியிடம் வேலை கேட்கிறான். நீ யார்? என்ன சாதி என்று மேஸ்திரி கேட்கிறான். அவன் தன் பெயரையும், சாதி பெயரையும் கூற உடனே மேஸ்திரி, பறை நாய்களுக்கு இங்கு வேலை இல்லை போடா என்று கூற, இதை கேட்ட மற்ற ஜாதி மக்கள் அவனையும், அவன் மனைவியையும் அடிக்க பாய, அவன் தன் மனைவியையும் உயிரையையும் கையில் பிடித்து கொண்டு ஓட, ஆதிக்க ஜாதி மக்கள் விரட்ட அப்பப்பா, என்ன ஒரு கொடுமை. இதே கொடுமை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்கிறது.
இதற்கிடையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் இக்கொடுமை ஒழியும் என்று நினைத்து சிலர் மதம் மாறி - அதிலும் கொடுமை தொடரத்தான் செய்கிறது.
இதுபோன்ற கொடுமைகள் இந்த நாவல் முழுக்க அனைத்து தலைமுறையிலும் தொடர்கிறது.
எனக்கு சிறுவயதாக இருக்கும் பொழுது என் அப்பாவும், அத்தையும், அவர்களுக்கு சொந்த ஊரில் நடந்த தீண்டாமை குறித்து சொல்வார்கள். எனக்கு புரியாது. ஆனால் அது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது யூகிக்க முடிகிறது.
இந்த கொடுமை இன்னும் தொடரவே செய்கிறது. இதற்கு காரணம் என்ன?
ஏன் இப்படி?
அம்பேத்கார் சொன்னது தான் :
"ஆடுகளைத் தான் பலியிடுகிறார்கள்; சிங்கங்களை அல்ல."
- சமுலா
தோழமை 2010 இதழிலிருந்து.....
தீண்டாத வசந்தம் - எழுத்தாளர் ஏ.ஜி. கல்யாணராவ்,
பக்கங்கள் : 301 விலை ரூ. 50/-
வெளியீடு : சவுத் விஷன், செல்பேசி : 94442 90820
தொடர்பான சுட்டிகள் :
தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்!
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
இந்த நாவல் படித்த போது கோபம் வந்தது சமூகத்தின் மேல்.
கட்டுரை, முதல் முயற்சி என்ற அளவில் அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment