> குருத்து: ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!

December 21, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


முன்குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் கிடைத்து படித்தேன். அரசு நூலகங்களில் அரைமணி நேரம் 300 புத்தகங்கள் தேடினால்...ஒரு நல்ல நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ கண்டுபிடிக்கலாம். இறையன்புவின் எழுத்து எழுதுகிற முறையில் நன்றாக ஈர்க்க கூடியது. இந்த நாவல் மக்கள் போராட்டத்தைப் பற்றிய நாவல் என்பதால் இன்னும் கூடுதல் ஆர்வம். எழுதியது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தானே என புறந்தள்ளிவிட முடியாத படைப்பு. மகா நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

****
"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.


நன்றி : நந்தவனம்

2 பின்னூட்டங்கள்:

நல்லூர் முழக்கம் said...

வணக்கம் தோழர்,

இந்த இடுகையை என்னுடைய தளத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். மறுப்பிருக்காது எனும் எதிர்பார்ப்பில்

குருத்து said...

நல்லூர் முழக்கம்,

நல்ல பதிவு என்ற அடிப்படையில், பதிவர் மகா எழுதியதை நான் பகிர்ந்துகொண்டேன். நீங்களும் பகிர்லாம்.

உங்கள் தளத்தில் பகிரும் பொழுது, பதிவர் மகா பெயரை குறிப்பிடுங்கள். அவர்களுடைய தளத்திற்கும் இணைப்பு கொடுங்கள். நன்றி.