கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது. 18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான். ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார். இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம். யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா. இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை. இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம். நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி? ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம். இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!
- தினமணி தலையங்கத்திலிருந்து...
4 பின்னூட்டங்கள்:
சமூக அக்கறையோடு எழுதப்பட்ட விழிப்புணர்வு பதிவு
நன்றி நண்பரே
நன்றி
தினமனி
அட பாவமே...
இந்திய காவல்துறையை நாம் அறிந்ததுதானே இன்னும் எத்துனை எத்துனை சின்ன சின்ன வழக்குகளில் அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது தெரியுமா சமீபத்தில் கூட திருப்பூர் ஊத்துக்குளி ரயில் கவிழ்ப்பு வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கே (தோழர் நீங்கள் அனுமதியளித்தால் இதை எனது blog இல் copy past செய்துகொள்வேன்)
feroz,
தினமணியில் வெளிவந்ததை எல்லாம் உங்கள் தளத்தில் வெளியிட என்னிடம் அனுமதி கேட்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் :). தினமணிக்கு நன்றி சொல்லி தாராளமாய் வெளியிடுங்கள்.
குருத்து தளம் பதிவிடும் பதிவுகளை, குருத்து தளத்திற்கு லிங்க் கொடுத்து, நீங்கள் தாராளமாய் மறுபதிவிடலாம். நன்றி.
Post a Comment