> குருத்து: கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

August 10, 2012

கட்டுமான தொழிலாளர்களின் அவலநிலை! போராட்டம் தான் தீர்வு!

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜேப்பியார் இன்ஸ்டூட்டுக்காக கட்டப்பட்ட விளையாட்டு ஸ்டேடியத்திற்காக நடந்த கட்டுமான வேலைகள் நடைபெற்றதில் 10 பேர் கோரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இது போல சென்னையில் ஆங்காங்கே தினம் ஒருநபராவது வேலையின் பொழுது கொல்லப்படுகிறார்கள்.

கொல்லப்படுகிறார்கள் என எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.  கட்டுமான தொழிலாளர்களுக்கு பணிச்சூழல் என்பது படுமோசமான நிலை இருக்கிறது. ஹெல்மெட் கிடையாது. பாதுகாப்பு கவசங்கள் கிடையாது.  பாத்ரூம், டாய்லெட் வசதி கூட முறையாக கிடையாது.  முன்பு சென்னையில் ஆந்திர மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்தனர். கடந்த சில வருடங்களாக வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.  இவர்களுக்கு தற்காலிகமாக கட்டித்தரப்படும் வீடுகள் மாடுகள் இருப்பதற்கு கூட தகுதியற்றவை!

மேலும், பல கட்டுமான நிறுவனங்கள் வேலையை துவங்கிவிட்டால், தங்களுடைய கொள்ளை லாபத்திற்காக இரவு பகல் என தொடர்ச்சியாய் வேலைகளை செய்கிறார்கள்.  ஜேப்பியார் போன்ற கல்வி வியாபாரிகள் ஒவ்வொர் ஆண்டும், மாணவர்களிடமிருந்து ஜூன், ஜூலையில் மாணவர்களிடமிருந்து லட்சகணக்கான பணத்தை நன்கொடை என்ற பெயரில் பிடுங்கி தான் தங்கள் கட்டுமான வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க துரிதப்படுத்துகிறார்கள். பில்டர்களும் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி தான் வேலையை துவங்குகிறார்கள். இப்படி அடித்து பிடித்து, வேலைகளை செய்யும் பொழுது, கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிடுகிறார்கள். உயிரிழப்பும், விபத்தும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொறியாளர்கள், சூப்பர்வைசர்கள் காலையில் 7 மணிக்கு வேலைக்கு போனால், இரவு திரும்ப 11 மணி ஆகிவிடுகிறது. மூன்று சிப்டுக்கு பதில் இரண்டு சிப்டுகளிலேயே ஆள்களிடம் வேலை வாங்கிவிடுகிறார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காவது இ.எஸ்.ஐ. மருத்துவ பாதுகாப்பு உண்டு. கட்டுமான தொழிலில் சீசனல் வேலை என்பதால், இவர்களுக்கு இ.எஸ்.ஐயும் கிடையாது.

இந்தியாவில் விவசாயத்திற்கு பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களுக்கே இந்த கதி?  சமீபத்தில் ஒரு கட்டுமான தொழிற்சங்கம் வேலையின் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால், இரண்டு லட்சம் கேட்டு போராட்ட அழைப்பு விடுத்திருந்தது. இன்றும் இரண்டு லட்சத்திற்கே போராடும் நிலை என்பது அவலம் தான்!

ஜேப்பியார் இன்ஸ்டூட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஒரே ஒரு நபரை கைது செய்தார்கள். மக்கள் போராட்டங்களுக்கு பிறகு தான், ஜேப்பியாரை கைது செய்திருக்கிறார்கள். நாளையே தனது செல்வாக்கை வைத்து, வெளியில் வந்துவிடுவார்.

மக்கள் நலன் நாடும் அரசாய் இருந்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முறைப்படுத்துவார்கள். நடப்பது மக்கள் விரோத அரசு தானே!  போராட்டங்கள் தான் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரும்! 

4 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

மிகவும் பரிதாபத்திற்குறிய மரணங்கள், நிகழ்வுகள்.

கட்டிடங்கள் கட்டுவதற்கு முதலீடு செய்பவர்கள் ஒரு பக்கம், ஒப்பந்தம் செய்யும் கட்டிட தொழில் நிறுவனங்கள் இன்னொரு பக்கம் இருக்க அரசாங்கமும் அதன் தொழில் நல சட்டங்களும் சரியான முறையில் இல்லாததால்தான் இது போன்ற அநியாயச் செயல்கள் நிகழ்கின்றன.

இறந்தால் தட்டிக் கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்பதால்தான் இக்கூலியாட்கள் வட நாட்டிலிருந்து வரவழைக்கப் படுகிறார்கள். மிருகங்களை விட கேவலமான முறையில் நடத்தப் படுகிறார்கள்.

சமுதாயத்தின் முதுகெலும்பாக கருதப்படும் கடின உழைப்பு தொழிலாளர்கள் நலன் அக்கறை மற்றும் விழிப்புணர்வூட்டும் பதிவு பகிர்வுக்கு நன்றி.

கோவை நேரம் said...

அடிமாட்டு கூலிக்கு கோரக்பூர், உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் இருந்து வர வழைக்கபட்டு கொத்தடிமை போல் நடத்து கின்றனர்.பெரு முதலாளிகள்...

குருத்து said...

"உண்மை...! அடுக்கு வீடுகளைக் கட்டும்போது பார்க்கப் போகும் (சில நிமிடங்களுக்கு) உரிமையாளர்களுக்குக் கொடுக்கும் ஹெல்மெட்டை நாள் முழுதவேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கொடுப்பதில்லை!.. பணம் கொடுத்தவன்(உள்ளவன்) உயிர் மட்டும் பத்திரம்... !"

- தேன்மதி,

முகநூலிலிருந்து....

kavingar mgkanniyappan said...

அத்தனை செய்திகளும் உண்மை