> குருத்து: இ.பி.எஃப். ஓய்வூதியம் போதாது!

May 3, 2013

இ.பி.எஃப். ஓய்வூதியம் போதாது!


வருங்கால வைப்புநிதி திட்டத்தின் (இ.பி.எஃப்.ஓ.) கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை இப்போதுள்ள தொகையிலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்துவது, இத் திட்டத்தில் சேருவதற்கான ஊதிய வரம்பை ரூ.15,000 வரை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் உத்தேச நடவடிக்கைகளால் ஓய்வூதியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஒருவருடைய மாத ஊதியம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அல்லது அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாயாகவே இருந்தாலும் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,600 தான் அவரால் பெற முடியும்.
மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயிக்கக் கடைப்பிடிக்கப்படும் சூத்திரத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். ஓய்வூதியம்பெற "தகுதியான' மாத ஊதியத்துடன், அந்த ஊழியர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்தாரோ அத்தனை எண்ணிக்கையால் பெருக்கி, எழுபதால் வகுக்க வேண்டும். அப்படி வரும் ஈவுத்தொகைதான் அவருடைய மாதாந்திர ஓய்வூதியம்.
ஓய்வூதியம் கணக்கிட அனுமதிக்கப்படும் மாதாந்திர ஊதியம் ரூ.6,500 மட்டுமே. அதற்கு மேல் தொழிலாளர் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் அவருடைய ஊதியம் வெறும் 6,500 ஆக மட்டுமே அதிகபட்சம் கணக்கில் கொள்ளப்படும். இந்த அளவே 1952-இல் வெறும் 300 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதை படிப்படியாக உயர்த்தி 2001-இல் ரூ.6,500 ஆக உயர்த்தியிருக்கிறார்கள்! இந்த அடிப்படையில்தான் ஓய்வூதியத்துக்கு "சந்தா' வசூலிக்கப்படுகிறது. தொழிலாளர் அல்லது ஊழியர் தன் பங்குக்குச் செலுத்தும் தொகையுடன் ஆலை நிர்வாகமும் ஒரு பங்கைச் செலுத்த வேண்டும்.
இதில் நிர்வாகத்துக்கு ஒரு சலுகையும் தரப்பட்டிருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் பங்குக்குரிய குறைந்தபட்ச தொகையைக் காட்டிலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அதிகமாகச் செலுத்தலாம். ஆனால் நடைமுறையில் எந்த முதலாளியும், ஆலை நிர்வாகமும் அரசு நிர்ணயித்தத் தொகையைவிட சல்லிக்காசு கூட அதிகம் தருவதில்லை. அதிகம் தருவது இருக்கட்டும், தொழிலாளர் ஓய்வூதியத்துக்குத் தர வேண்டிய சந்தாவையே பலர் ஒழுங்காகச் செலுத்துவதில்லை!
1995-இல் வேலைக்குச் சேர்ந்து, 35 முழு ஆண்டுகள் பணிபுரிந்து 2030-இல் ஓய்வு பெறும் ஊழியர்கூட, இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.3,250 தான் ஓய்வூதியம் பெற முடியும். இப்போது மாதந்தோறும் ரூ.1,600 ஓய்வூதியம் பெறுவோரும் 2030-இல் ரூ.3,250 பெறுவோரும் எப்படி, யார் தயவும் இல்லாமல் காலம்தள்ள முடியும்? ஆனால் துயரம் என்னவென்றால் இப்போது பெரும்பாலானவர்கள் இந்த ரூ.1,600-ஐக் காட்டிலும் மிகக் குறைவாகவே பெற்றுவருகின்றனர்.
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்களின்படி, ஓய்வூதியர்களில் 83 சதவீதம் பேர் மாதம் ரூ.1,000-க்கும் குறைவாகவும், அதிலும் 27 சதவீதம் பேர் மாதம் ரூ.500-க்குக் குறைவாகவும் பெறுகின்றனர்!
இப்போது இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையின் குறைந்தபட்ச அளவை 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசித்திருக்கிறார்கள். இதை "ஓய்வூதிய அமல் குழு' பரிந்துரைத்திருக்கிறது. தொழிலாளர் வைப்புநிதியத்தின் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழுதான் இந்த ஓய்வூதிய அமல் குழு. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவை மேலும் 0.63 சதவீதம் அரசு உயர்த்திச் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஓய்வூதியம் கணக்கிடுவதற்கான மாதாந்திர ஊதிய அதிகபட்ச அளவை இப்போதிருக்கும் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி உயர்த்தினால் மாதாந்திர ஓய்வூதியம் அதிகபட்சம் ரூ.7,500 கிடைக்கக்கூடும்.
அப்படியே இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு மாதாந்திரம் ரூ.7,500 ஓய்வூதியம் அளித்தால்கூட இப்போதுள்ள விலைவாசியில் முதியவர்கள் அதைக் கொண்டு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய செலவுகளைச் சமாளிப்பது கடினம்தான். தனக்கிருக்கும் நிதி நெருக்கடியில் இந்த அளவுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது இயலாதது என்று அரசு கை விரிக்கிறது.
ஓய்வூதியத்துக்கு தொழிலாளி அல்லது ஊழியர் மாதந்தோறும் தன்னுடைய ஊதியத்தில் 12 சதவீதத்தை "சந்தா'வாக அளிக்கிறார். ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி, ஊழியரின் மாதாந்திர ஊதியத்தில் 3.67 சதவீதம் அளவுக்கு மட்டுமே தன்னுடைய பங்காகச் செலுத்துகிறார். இவ்விதம் மொத்தம் 15.67 சதவீதம் "சந்தா'வாகச் செலுத்தப்படுகிறது. "ஓய்வூதிய நிதி'யத்துக்கு ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி சார்பில் 8.33 சதவீதம் செலுத்தப்படுகிறது. மத்திய அரசு 1.16 சதவீதம் செலுத்துகிறது. மொத்தம் 9.49 சதவீதம்.
(ஓய்வூதியச் சந்தா வேறு, ஓய்வூதிய நிதியம் வேறு என்பதை மனதில் கொள்ள வேண்டும்). மேலோட்டமாகப் பார்த்தால் ஓய்வூதிய நிதிக்கு தொழிலாளர் ஏதும் செலுத்துவதில்லை, ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி தரப்பும் அரசும்தான் செலுத்துகிறது என்று தோன்றும். ஆலை நிர்வாகம் சட்டப்பூர்வமாக, தான் செலுத்த வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பைத்தான் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துச் செலுத்துகிறது. வைப்பு நிதிக்கு ஒரு பங்கையும் ஓய்வூதியத்துக்கு ஒரு பங்கையுமாக பிரித்துச் செலுத்துகிறது. ஓய்வூதியம் இல்லையென்றால் இந்தத் தொகையும் வைப்புநிதியிலேயே சேரவேண்டும். உண்மையில், இந்த ஓய்வூதியப் பிடித்தம் காரணமாகத் தொழிலாளர்தான் வைப்பு நிதியில் கணிசமான தொகையை இழக்கிறார்.
2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளுக்கு "வருங்கால வைப்பு நிதி'யில் 1.51 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது. "ஓய்வூதிய நிதி'யத்தில் 0.38 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது.
2012 மார்ச் வரையிலான காலத்தில் வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்), ஓய்வூதிய நிதியம் (பென்ஷன் பண்ட்) ஆகியவை முறையே ரூ.2.37 லட்சம் கோடியாகவும் ரூ.1.62 லட்சம் கோடியாகவும் இருந்தன.
இதைப் பார்க்கும்போது பிரம்மாண்டமான தொகையாகத் தெரிகிறது. ஆனால் இப்போதுள்ள ஓய்வூதியர்களுக்கு நடப்புக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கவே பணம் பற்றாக்குறையாக இருக்கிறது!
ஓய்வூதிய திட்டத்தைப் பரிசீலித்த சில நிபுணர்கள், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை - தொழிலாளர்கள் தங்களுடைய கடைசி பணியாண்டில் வாங்கிய கடைசி 12 மாத சராசரி ஊதியத்தின் பாதியளவு வரை உயர்த்தலாம் என்று கூறியுள்ளனர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 102-வது வழிகாட்டு நெறியின்படி, தொழிலாளரின் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய' ஊதியத்தில் சரிபாதியை மாதாந்திர ஓய்வூதியமாகத் தரலாம் என்று கூறுகிறது. ஆனால் இதை ஏற்றால் நியாயம் கிடைக்காது.
ஏனென்றால் இந்தியாவில் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய ஊதியம்' மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான ஊதியத்தின் சரிபாதியைவிட, வைப்பு நிதி ஊதியத்தின் சரிபாதி மிகமிகக் குறைவாக இருக்கிறது.
இ.பி.எப்.ஓ. அமைப்பு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச் சந்தாதாரர்களாகவும் ஓய்வூதியதாரர்களாகவும் பெற்றிருப்பதாக பெருமை பேசுகிறது. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. 6.91 லட்சம் தொழில் அமைப்புகள் சந்தா செலுத்துகின்றன.
2012 மார்ச் 31 கணக்கின்படி 8.55 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 41 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். செயல்படாத கணக்கில் மட்டும் ரூ.22,636.57 கோடி குவிந்து கிடக்கிறது!
எனவே தொழிலாளர் அல்லது ஊழியர் தனது பதவிக் காலத்தின் கடைசி கட்டத்தில் வாங்கும் ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். "மக்கள் நல அரசு' தன்னுடைய கடமையைச் செய்யாமல் பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. ஓய்வூதிய நிதியத்துக்கு அரசு இப்போது தரும் தொகையை மேலும் உயர்த்தவேண்டும். ஆலை நிர்வாகங்களையும் மேலும் அதிகம் சந்தா செலுத்தச் சொல்ல வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பைக் கணிசமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் கெüரவமாக தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்வது சமுதாயக் கடமையாகும்.

- பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

0 பின்னூட்டங்கள்: