> குருத்து: ராஜூ என்றழைக்கப்பட்டவர்

May 14, 2013

ராஜூ என்றழைக்கப்பட்டவர்

றேழு மாதங்களுக்கு முன் அண்ணன் வீட்டில், மாத்திரை சாப்பிடுவது சம்பந்தமாக அண்ணன் கூறிய கடுமையான வார்த்தைக்கு கண்களில் நீர் கோர்க்க அப்பா கூறிய வார்த்தைகளை இங்கே எழுத விரும்பவில்லை. 'எப்படி வாழ்ந்தவன் நான்' என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் தான் வேளாவேளைக்குச் சாப்பாடும் இரவில் இன்சுலினும் மருந்து மாத்திரைகளும் கிடைத்தாலும் அவரால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவருக்குத் தேவைப்பட்டது கொஞ்சம் மரியாதையான சுதந்திரம். சட்டென்று ஒருநாள் ஆட்டோ ஏறி அவனியாபுரம் சென்று விட்டார். அங்கே சற்று வசதிக் குறைவிருந்தாலும் நிம்மதியாக இருந்திருப்பார். ஏனென்றால் அவனியாபுரம் வீட்டில் தம்பி சொல்வதை அவர் சட்டை செய்பவரல்ல.

அவர் அவனியபுரத்திலிருந்த நாட்களில் நான் அவரைப் பார்க்கப் போகவேயில்லை. ஒரு வசதியும் இல்லாத இடத்திலிருந்து கொண்டு சங்கடப்படுத்துகிறார் என்ற கோபம். நான் என்ன நினைத்தால் என்ன, அவர் மூர்த்தியின் மடியில் உயிர் பிரியும் வரையில் அவர் நினைத்ததையே செய்தார். பணம், கவனிப்பு, வசதி போன்றவற்றினால் கட்டுபடுத்தப் படாது உயிர் பிரியும் வரையிலும் தான் நினைப்பதைச் செய்யும் சுதந்திரமே ஒருவருக்கு தேவை போல.

அவர் அவனியாபுரம் செல்வதற்கு முந்தைய மாதங்களில், இரவுகளில் அவருக்குப் பணிவிடை செய்தது எனது குற்ற உணர்ச்சியை சிறிது குறைக்கிறது. இரவு ஆறேழு தடவை சிறுநீர் கழிப்பார். 'யப்பா' என்றவுடன் எழுந்து கொண்டுபோய் கழிவறையில் விடவேண்டும். இல்லையென்றால் படுக்கையில் போய்விடுவார். மீறிப் போய் விடும் தருணங்களில் காலை எழுந்ததும் பார்த்து  மிகவும் வெட்கமாய்ப் போய்விடும். அசிங்கமாகவும் உணர்ந்தார். விஷயம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற உணர்வே முதுமையின் துன்பம். வெட்கமும் இறுக்கமும் கொண்டவர்க்கு சாவே விடுதலை.

ஆனால் அப்பா அதை மருந்துகளின் துணை கொண்டு வெல்ல நினைத்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் ஏதேனும் ஒரு மாத்திரையை தினந்தோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனது சிறு வயதில் LIV 52, Digene, Gelusil போன்றவையோடு பிரச்சினைக்குத் தக்க வேறு மருந்துகளும் தொடர்ந்து எடுத்து வந்தார். டாக்டர் சொன்னதை ஒழுங்கு பிறழாது செய்தார். கடைசி நாட்களில், சிறுநீரகம் பழுதாகிவிட்டது என்றும் மருந்துகளால் இனி பலனில்லை என்றும் டாக்டர் சொல்ல, இவர் டாக்டரையே மாற்றிவிடலாம் என்றார். அதே பிடிவாதம் தான் நான் 3 வயதில் போலியோ தாக்கி நடக்க முடியாமல் போனபோது அவரைப் பல  இடங்களுக்கும் என்னைச் சுமக்க வைத்திருக்கிறது. டாக்டர்கள் கைவிரித்த போதும் சோராமல் பலனே அளிக்காத பலவிதமான எண்ணைகளையும் எனது மெலிந்த கால்களில் இரவு தூங்காமல் தேய்த்து விட்டிருக்கிறார்.

மாத்திரைகள் பொய்க்காது என்ற தீவிர நம்பிக்கை அவருக்கு கடைசிவரை இருந்தது. அல்லது நம்பிக்கை கொள்ள ஏதேனும் அவருக்குத் தேவைப் பட்டிருக்கலாம். மருந்துகளால் பலனில்லை என்றால் உபாதைகளை என்ன செய்வது என்ற பயங்கரம் அவரைச் சூழ்ந்திருக்கும். அலோபதியினால் அதைக் கடக்க முயன்றார். சிறிய மாத்திரை டப்பா பெரியதாகி அவர் இறக்கும் போது அது மாத்திரைப் பட்டைகளால் நிரம்பிக் கிடந்தது.

அப்பாவுக்கு இரு மனைவிகள். பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால், பெரியம்மாவின் தங்கையை மனம் செய்தார். அக்காலகட்டத்தில் பணம் கொழித்திருக்கிறது. மாமனாருடைய நிலங்களை மீட்டிருக்கிறார். புதிதாக நிலங்கள் வாங்கியிருக்கிறார். சகலைகளுக்கு உதவியிருக்கிறார். அப்போது அவருடைய பரோபகாரம் வயல்சேரியிலும் அவனியாபுரத்திலும் பிரசித்தம். பலருக்கும் படிக்க உதவியிருக்கிறார். அம்மாவின் சகோதரி பிள்ளைகளுக்கு மணம் செய்வித்திருக்கிறார். இதில் அம்மாவின் முனைப்பும் அதிகம். அப்போதெல்லாம் வீட்டில் உலை கொதித்தபடியே இருக்கும். சோற்றுச் சட்டி கழுவிக் கவிழ்த்தப் பட்டதேயில்லை. வெவ்வேரளவான பானைகளில் சுடுசோறோ பழையதோ இல்லாமல் போகாது.

அப்பா செல்வத்தின் வனப்பையும் வறுமையின் கோரத்தையும் எங்களுக்குக் காட்டினார். மூத்த அக்காவின் பூப்புனித நீராட்டு விழா ஒரு கல்யாணத்தைப் போல பெரும் செலவில் நடத்தப் பட்டது. கடைசித் தம்பியின் பிறந்த நாளன்று, 31 வருடங்களுக்கு முன், தொழில் சகாக்களின் பரிசுகளாக அவனுக்கு ரெடிமேட் ஆடைகள் குவிந்தது நினைவில் உள்ளது. இன்னொருபுறம் 90களில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமம். நான் பத்தாவது படித்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் உணவு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அப்பா இரவு வீட்டிற்கு வந்த பிறகே சாப்பாடு. ஆனாலும் எக்காலத்திலும் எந்தச் சூழலிலும் மனதை விட்டவரல்ல. தனக்கு முன்னைப் போல பணமீட்டித் தராத தொழிலையே தினந்தோறும் ஒரு தவம் போலச் செய்தார். பட்டதாரி மூத்த பிள்ளைகளின் பொறுப்பின்மையையும் சகித்தவாறே அதைச் செய்தார். ஒருபோதும் மூத்த பிள்ளைகளை வேலைக்குச் செல்லக் கடிந்ததில்லை. என்னால் முடிந்த அளவு நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற தோரணையிலேயே இருந்தார். அந்தக் காலகட்டத்தில் செல்வம் அக்காவே ஒரு தாயைப் போல எங்களைப் பராமரித்தார். அவர் மணமாகிச் சென்ற 1998 வரையிலும் நான் எனது துணிகளைக் கூட துவைத்ததில்லை.இறப்பதற்கு கொஞ்ச காலம் முன்பு வரையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் 90கள் 70 கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆட்ட விதிகள் வேகமாக மாறிக்கொண்டிருந்ததை அவர் உணர மறுத்தார். அல்லது தன் வழியே சிறந்தது என்று நம்பியிருக்கலாம்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவின் பிரிவு அவரைப் பாதித்தது. அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்றபோதும். 1989 என்று நினைக்கிறேன். அம்மா எங்களைத் தனியே விட்டுச் சென்றார். மனைவியற்று 6 பிள்ளைகளுடன், வயது வந்த இரண்டு பெண்களோடு, அப்பா தனியே நின்றார். அதிலிருந்து அம்மா இறந்த 2007 வரைக்கும் பிரிவு பற்றிய உளைச்சல் எதுமற்றவராகவே காட்டிகொண்டார். ஒருவேளை அம்மாவின் இறப்பு அவருக்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கக் கூடும். அதன் பிறகே அவனியாபுரத்தில் தனது சொந்த வீட்டில் கால் வைத்தார்.

தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனியே வாழ்ந்து ஒரே ஒரு தங்கையை மணம் செய்வித்திருக்கிறார். இளம் வயதில் பேபி என்ற பெண்ணைக் காதல் மணம் செய்திருக்கிறார். பதிவுத் திருமணமா என்று தெரியவில்லை. அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. பிரிவின் காரணம் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதுமே பெண்களுடனான அவரது உறவு நீடிக்காத வகையில் அவர் சபிக்கப் பட்டிருந்தார். பிரிவுகளை உள்ளூர ரசித்தாரா என்று தெரியவில்லை.

புத்தகம் படிக்கும் பழக்கமோ சினிமா, இசை போன்றவற்றைச் சிலாகித்துப் பார்க்கும் வழக்கமோ இருந்ததில்லை. நீண்ட காலத் தோழர் என்று யாருமில்லை. தனியான பொழுதுகளில் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கிறேன். இளம் வயதில் அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

யாருடைய வழிகாட்டுதலோ குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளோ ஏதுமின்றியே அவர் வளர்ந்தார். எங்களையும் அப்படியே வளர்த்தார். பாவனை மிகுந்த தாயின் பாசமோ தந்தையின் கண்காணிப்போ இல்லாமலே நாங்கள் வளர்ந்தோம். சக நண்பர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் அவர்கள் மீது காட்டும் கரிசனமும் சுமத்தும் கட்டுப்பாடுகளும் எனக்கு மிக அந்நியமாகத் தோன்றும். நானோ ஒரு காட்டுச் செடியைப் போல வளர்ந்தேன்.
அவர் வளர்ந்த விதம் அவரை எப்போதும் தனியனாக உணரச் செய்தது போலும். நானும் சில சமயம் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையிலும் தனியனாகி விடுகிறேன். சட்டென்று தொடர்பறுந்தது போல.

சில வருடங்களுக்கு முன் அப்பாவின் நில விவகாரம் தொடர்பாக வயல்சேரி சென்றபோது அப்பாவின் இன்னொரு பரிமாணத்தை அங்கிருந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டேன். அவரது இளம் வயது அந்தரங்க வாழ்க்கையின் சில கீற்றுகள் தெறித்துப் பறந்தன. கிராமத்துச் சனங்கள் சம்பவங்களை மென்று மென்று சீரணிக்கத் தோதாக்கி விடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூர்த்தி மொபைலில் கூப்பிட்டபோது அப்பா இறந்து விட்டாரென்று மனம் சொல்லியது. அனால் அவருக்கு சர்க்கரை குறைந்து உடல் மயங்கியதே பிரச்சினை. பிறகு சர்க்கரை தண்ணீர் கொடுக்கச் சொல்லி எல்லாம் சரியாகி விட்டாலும் மனம் அமைதியற்றுக் கிடந்தது. அவரது இறப்பை மனம் வேண்டியதா? பிறகு பத்தரை மணியளவில் மீண்டும் பிரச்சினையாகி மூர்த்தி மருத்துவமனை செல்ல ஆட்டோ கூப்பிட முனைய அவர் வேண்டாம் என்றிருக்கிறார். 'இது வேற மாதிரி இருக்கு' என்றவர் கழிப்பறை கூட்டிச் சென்று வந்த பிறகு இறந்துபோனார்.

சென்னையிலிருந்து விரட்டிக்கொண்டு இரவு 7 மணிபோல அவனியாபுரம் சேர்ந்தபோது, தான் வாங்கிக் கட்டிய வீட்டின் முன்னறையில் குளிர் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பெற்றோரின் அண்மையின்றி வளர்ந்து சம்பாதித்து, ஒரு தங்கையை மனம் செய்வித்து, செல்வமீட்டி, காதல் புரிந்து, பிள்ளைகள் பெற்று, மனைவியைப் பிரிந்து, ஒரு கொந்தளிப்பான வாழ்கையைத் தனியே எதிர்கொண்ட மனிதனின் உடல். எந்த உணர்வும் அற்றதாக நான் அக்கணத்தை உணர்கிறேன். அமைதி கொள்ளுங்கள் அப்பா, இந்த அபத்த வெளியில் நீங்கள் செய்யக்கூடியது இனி ஏதுமில்லை.  

- வரதராஜன்,

விடயங்கள் தளத்திலிருந்து...

1 பின்னூட்டங்கள்:

வரதராஜன் ராஜு said...

பகிர்ந்தமைக்கு நன்றி.
வரதன்